கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாறு அணை காவல் நிலையத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறியவர் மற்றும் அவரது மகளை எஸ்.ஐ ஒருவர் ஒருமையில் பேசி ஆவேசமாகத் திட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் புகார் அளிக்க வந்தவர், மது போதையில் வந்ததாக எஸ்.ஐ கூறுகிறார். ஆனால் அவரது மகளோ, `தந்தை மது குடிப்பதே இல்லை, வேண்டுமானால் போதையில் இருப்பதை ஊதிக் கண்டுபிடிக்கும் மிஷினைப் பயன்படுத்தி சோதனை செய்யுங்கள்’ எனக் கூறுகிறார். அதற்கு அந்த எஸ்.ஐ, ``நீ சொல்லும்போது அந்த மிஷினோட நாங்கள் நிற்கணுமா?" என எகிறுகிறார். அதற்குப் புகார் அளிக்க வந்தவர், "இதுதான் போலீஸ் ஸ்டேஷனில், நீங்கள் தரும் மரியாதையா? நாங்கள் எதாவது தப்பா சொன்னோமா... போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் எதுவும் இல்லையா?" எனக் கேட்கிறார்.
அதற்கு அந்த எஸ்.ஐ,``இதுதான் போலீஸ் ஸ்டேஷன். உன் புகாரைப் பார்க்க எங்களுக்கு மனசு இல்ல போடா... நாங்க உன்னை மிரட்டுவோம்; தப்பாத்தான் பேசுவோம். நீ போ... போயிட்டு வா" என எகிறுகிறார். இதனால் பயந்துபோன அந்தப் பெண், ``அப்பா இங்க இருந்து போயிடலாம்" என அழுதபடியே தந்தையை அழைத்துச் செல்கிறார். சுமார் ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோ கேரளாவில் வைரலானது.
Also Read: கேரளா: `வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டுச் சிறை!’ - எதிர்ப்பால் பின்வாங்கிய பினராயி விஜயன்
திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாறு அணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிவேட்டை பகுதியைச் சேர்ந்த சுதேவன் என்பவர்தான், மகளுடன் புகார் அளிக்கச் சென்றவர். இவரது ஒரு மகள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞ்ருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சென்றுள்ளார். இதுகுறித்து சுதேவன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார், இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளைஞர் சுதேவனின் வீட்டு முன்பு வந்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நெய்யாறு அணை காவல் நிலையத்தில் சுதேவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார். போலீஸார் விபரங்களை கேட்டறிந்துள்ளார்கள். அதன் பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த நாள், தனது மற்றொரு மகளுடன் நெய்யாறு அணை காவல் நிலையத்துக்கு சுதேவன் சென்றுள்ளார். அப்போதுதான் காவல் நிலைய எஸ்.ஐ கோபகுமார் மிரட்டியிருக்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரள டி.ஜி.பி தலையிட்டு, எஸ்.ஐ கோபகுமாரை குட்டிக்கானம் ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-police-si-threatening-father-daughter-video-gone-viral
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக