Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

குடியாத்தம்: வெள்ளத்தில் ஒருநாள் தத்தளித்த பெண்! - உயிரைப் பணயம் வைத்துமீட்ட பேரிடர் குழு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தோடுகிறது. ஆற்றங்கரையோரம் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குவசித்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செதுக்கரை என்ற பகுதியில், கௌண்டன்ய ஆற்றின் நடுவில் குடிசை அமைத்து பன்றிகளை வளர்த்துவந்த எல்லம்மாள் என்ற 55 வயதுடைய பெண் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகத் தீயணைப்புத் துறையினருக்கு நேற்று மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது.

ஆற்றில் உள்ள குடிசை வீடு

இதையடுத்து, குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் தலைமையில் வருவாய்த் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் செதுக்கரைப் பகுதிக்கு விரைந்துச் சென்று எல்லம்மாளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த காரணத்தினால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின்பேரில், தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நேற்று இரவு 9 மணியளவில், பேரிடர் மீட்புப் படையினர் செதுக்கரைப் பகுதிக்கு வந்துசேர்ந்தனர். இரவு நேரம் என்பதால், ட்ரோன் கேமரா மூலமாக எல்லம்மாளை விடிய விடியக் கண்காணித்து அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, இன்று காலை 6 மணியளவில், பேரிடர் குழுவினர் மீட்புப் பணியில் களமிறங்கினர். சுமார் 7.30 மணியளவில் எல்லம்மாள் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் எல்லாம்மாளை நிவாரண முகாமில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் ஆற்றில் தத்தளித்த பெண்ணை உயிருடன் மீட்ட சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் மற்றும் தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினரை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரமும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

முதலுதவி சிகிச்சை

மீட்புப் பணி குறித்து சப்-கலெக்டர் ஷேக்மன்சூர் கூறுகையில், ``கௌண்டன்ய ஆற்றின் நடுவில் உள்ள மேடான பகுதியில் குடிசை அமைத்து அந்த பெண் கணவருடன் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுவந்துள்ளார். ஆற்றில் வெள்ளம் வருவதற்கு முன்பாகவே எல்லம்மாளின் கணவர் வெளியில் சென்றுவிட்டார். வெள்ளம் வந்ததுகூட தெரியாமல் அந்த பெண் குடிசையில் இருந்துள்ளார். குடிசைக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது, தன்னைச் சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டோம். ஆற்றில் உள்ள மேடான பகுதியில் அவர் இருந்ததால் உயிருடன் காப்பாற்றப்பட்டிருக்கிறார்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/disaster/woman-rescued-from-gudiyatham-river-floods

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக