Ad

திங்கள், 30 நவம்பர், 2020

ஹைதராபாத்: ஓவைசி vs யோகி - மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், டிசம்பர் 1-ம் தேதியன்று மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஹைதராபாத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காகவே பா.ஜ.க மிக நீண்ட பட்டியலைத் தயாரித்திருந்தது. அந்தப் பட்டியலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஹைதராபாத்தில், பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக் கொண்டு, பேரணியாகச் சென்று தீவிரப் பிரசாரம் நடத்தி வருகிறார்கள்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பேரணியில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ``பா.ஜ.க வெற்றிபெற்றால் ஹைதராபாத்துக்கு பாக்யாநகர் எனப் பெயர் மாற்றம் செய்வோம்'' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

ஏற்கெனவே 2018 தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, ``ஹைதராபாத், பாக்யாநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்படும்'' என்று யோகி ஆதித்யநாத் வாக்குறுதியளித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்குப் பல எதிர்ப்புகள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய ஓவைசி,

அசாதுதீன் ஒவைசி

மேலும் பேசிய அவர், ``ஹைதராபாத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அவர் என்ன இந்த நகரை கான்ட்ராக்ட் எடுத்துள்ளாரா?... ஹைதராபாத்தின் பெயர் மாற்றப்படாமலிருக்க எங்களுக்கு வாக்களியுங்கள். இது ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் போன்றே தெரியவில்லை. பிரதமர் பதவிக்கு மோடியை மாற்றிவிட்டு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது போன்று தெரிகிறது. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இதுவரை பல்வேறு முக்கியத் தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். கர்வானில் நான் பிரசாரம் செய்துகொண்டிருந்த போது `பா.ஜ.க பிரசாரத்துக்கு ட்ரம்பையும் அழைத்திருக்க வேண்டும்' என்று ஒரு குழந்தை கூறியது. ஆம்! உண்மையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இன்னும் ட்ரம்ப் மட்டும்தான் பிரசாரம் செய்யவில்லை'' என்று பேசியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ``தனி நபர் வருமானத்தில் 28-வது இடத்தில் இருக்கும் மாநிலத்தின் முதல்வர், 5-வது இடத்தில் இருக்கும் தெலுங்கானாவுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்'' என்றார். மேலும், ``ஹைதராபாத்தில் நிலவும் அமைதியைக் குலைக்கும் நோக்கத்தில் சில பிரிவினைவாத சக்திகள் நகருக்குள் புகுந்துள்ளன'' எனக் கூறிய அவர், ``ஒரு மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் பரப்புரைக்கு வருவது ஏன்?'' என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். சந்திரசேகர் ராவ் எழுப்பியுள்ள கேள்விதான் ஹைதராபாத் மக்கள் மனதிலும் எழுந்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் தெலங்கானா மாநில பா.ஜ.க-வுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே சந்திரசேகர் ராவ், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்து வருகிறார். `ஹைதராபாத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமான கூட்டத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தியே தீருவேன்' என்று உறுதி கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துகொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தெலங்கானா மாநிலம் துபக்கா (Dubbaka) சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. பொதுவாக, இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் அம்மாநிலத்தை ஆளும் கட்சிகளே வெற்றி பெறும். ஆனால், தெலங்கானாவில் நடைபெற்ற சமீபத்திய இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று சந்திரசேகர் ராவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

சந்திரசேகர் ராவ்

Also Read: டி.ஆர்.எஸ் Vs பா.ஜ.க: `132 கோடி மக்களும் பா.ஜ.கமீது குற்றப்பத்திரிகை பதிய வேண்டும்!' - என்ன பிரச்னை?

கடந்த 2016 ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில், மொத்தம் உள்ள 150 வார்டுகளில், டி.ஆர்.எஸ் 99 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் 44 இடங்களைப் பெற்றிருந்தது. பா.ஜ.க 4 இடங்களையும் காங்கிரஸ் 2 இடங்களையும் தெலுங்கு தேசம் கட்சி 1 இடத்தையும் கைப்பற்றியிருந்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2018 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலிலும் டி.ஆர்.எஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி, மொத்தமுள்ள 119 இடங்களில் 114 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால், அதைத் தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வசமிருந்த 4 முக்கியத் தொகுதிகளைக் கைப்பற்றியது பா.ஜ.க. சமீபத்திய இடைத்தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பது, சந்திரசேகர் ராவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் சொல்லப்படுகிறது. சந்திரசேகர் ராவின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு, பா.ஜ.க முக்கியத்துவம் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர், ``கீழ் மட்டத்திலிருந்து தங்களைப் பலப்படுத்திக் கொள்வதுதான் பா.ஜ.க கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வரும் ஸ்டைல். ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், ஆளும் கட்சியான சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ்-ஸை வீழ்த்தி தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டுமென்பதும் ஒரு காரணமாக இருக்கும். ஆனால், இதையெல்லாம்விட முக்கியக் காரணம் ஒன்று இருக்கிறது. தெலங்கானாவில் பலம் பெற்றிருக்கும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை பலம் இழக்கச் செய்வதுதான் அந்த முக்கியக் காரணம். மத அரசியலை முன்னிறுத்தி பா.ஜ.க-வினர் செய்யும் பிரசாரத்திலிருந்து இது தெரிய வருகிறது.

பிரசாரத்தின் போது பேசிய யோகி ஆதித்யநாத் `ஹைதராபாத் மக்களை நிசாம்கள் ஆட்சி செய்கின்றனர். அதிலிருந்து விடுபட நேரம் வந்துவிட்டது' என்று பேசியிருந்தார். இதை வைத்து, ஓவைசியை பலமிழக்கச் செய்வதுதான் பா.ஜ.க-வின் டார்க்கெட் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமீபத்திய பீகார் சட்டமன்றத் தேர்தலில், ஓவைசியின் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியதை பா.ஜ.க விரும்பவில்லை. எனவே, அவரின் வளர்ச்சியைத் தடுக்கத்தான் மதத்தை முன்னிறுத்தி தீவிரமாக மாநகராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது பா.ஜ.க'' என்கிறார்கள் உறுதியாக.

பா.ஜ.க கொடி

Also Read: மேற்கு வங்கம்: `மிஷன் 200'... 11 பேர்கொண்ட குழு - மம்தாவை வீழ்த்துமா பா.ஜ.க?

பா.ஜ.க-வினர் இது குறித்துப் பேசுகையில் ``தேசிய அளவில் ஆட்சி செய்து வரும் கட்சியான பா.ஜ.க, எதற்காக ஒரு சில மாநிலங்களில், அதுவும் சொற்ப இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கும் ஒரு கட்சியை பலமிழக்கச் செய்ய வேண்டும். இன்றைய தேதியில் இந்தியாவில், பா.ஜ.க-வைவிட பாலமான கட்சி எதுவுமில்லை. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் நாங்கள் அதிக கவனம் செலுத்துவதற்கான காரணமே வேறு. ஹைதராபாத் போன்ற ஒரு வளமான நகரத்தின் ஆட்சி நிர்வாகம், மோசமானவர்களின் கையிலிருக்கும் காரணத்தால் அந்த நகரம் வளர்ச்சியடையாமலேயே இருக்கிறது. பாரம்பர்யம் மிக்க ஹைதராபாத்தை வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்த்த வேண்டுமென்பதற்காகத்தான் மாநகராட்சித் தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/owaisi-vs-yogi-renaming-issue-of-hyderabad-as-bhagyanagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக