Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

கோவை: அரசுப் பள்ளிக்காக நில தானம் செய்த தொழிலதிபர்! - விழா எடுத்து பாராட்டிய பொதுமக்கள்

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இருக்கிறது எலச்சிபாளையம் கிராமம். 1957-ம் ஆண்டு அங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது. அங்கு தற்போது 174 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக, அந்தப் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. இதனால், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக் கல்விக்கு, இந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பல கி.மீ பயணிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

ராமமூர்த்தி

அந்தப் பகுதி மக்களும் பள்ளியை தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். “நிலம் இருந்தால், நாங்கள் கட்டடம் கட்டித் தருகிறோம்” என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர், ரூ.3 கோடி மதிப்புள்ள தனது 1.50 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார். அந்தப் பள்ளி ஏற்கெனவே இயங்கிவரும் இடமும், ராமமூர்த்தி குடும்பத்தினர் தானமாக வழங்கியதுதான். ராமமூர்த்தியின் இந்த உதவி அந்த மக்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்துள்ளது.

நிலம்

இதைத்தொடர்ந்து, ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஊர் மக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தியுள்ளனர். அந்த விழாவில், ராமமூர்த்திக்கு நினைவுப்பரிசு வழங்கி, தானமாக வழங்கிய இடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், அந்தப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விழாவில் பேசிய ராமமூர்த்தி, “இந்தப் பகுதியில் மேல்நிலைப் பள்ளி இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கிறது. அரசு உடனடியாக அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

பாராட்டு விழா

அதேபோல, பள்ளியின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். பள்ளி கட்டடம், கட்ட அனைத்து வகையிலும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். இங்கு மேல்நிலைப்பள்ளி வந்து, அதன் மூலம் மாணவர்கள் முன்னேற வேண்டும். அது மட்டுமே எனக்கு மனநிறைவை கொடுக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-village-people-conducted-special-function-for-business-man

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக