Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: `ட்ரம்ப் மட்டும்தான் பாக்கி!’ - பா.ஜ.க-வைச் சீண்டும் ஒவைசி

150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் வென்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என பா.ஜ.க தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறது. அந்தக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்துக்கு முக்கிய தலைவர்கள் பலரும் ஹைதராபாத்தில் பேரணி, பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகின்றனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, அக்கட்சியின் தேசியத் தலைவரான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பிரசாரத்தில் கலந்துகொண்டனர். பிரசாரத்தில் கடைசி நாளான இன்று ஹைதராபாத் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.

ஹைதராபாத்தில் அமித் ஷா

இந்தநிலையில், பா.ஜ.க-வைச் சீண்டும் வகையில் பேசியிருக்கிறார் ஹைதராபாத் தொகுதி எம்.பி-யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவருமான ஒவைசி. அக்கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒவைசி,``இது ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் போல் தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்றாகப் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நடக்கும் தேர்தல் போல் தெரிகிறது. நான் கர்வான் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அனைத்து தலைவர்களையும் அழைத்து அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பேசினேன். அப்போது ஒரு சிறுவன், `அவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் அழைத்து பிரசாரம் செய்ய வேண்டும்’ என்றார். அவன் சொன்னது சரிதான். இன்னும் ட்ரம்ப் மட்டும்தான் பிரசாரத்துக்கு வரவில்லை.

Also Read: `ஒரே தேசம்... ஒரே தேர்தல்!’ - ஓயாத சர்ச்சை!

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகின்றன. தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற துபாக் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க வென்ற நிலையில், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலிலும் வெல்ல அக்கட்சித் தொண்டர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ``ஹைதராபாத்தை நிஜான், நவாப் கலாசாரத்திலிருந்து விடுவித்து, பன்முகத்தன்மை கொண்ட சின்ன இந்தியாவை இங்கு உருவாக்கப் போகிறோம். ஹைதராபாத்தை நிஜாம் காலத் தடைகளிலிருந்து மீட்டு ஒரு நவீன நகரமாகக் கட்டமைக்கப் போகிறோம். எங்களது கட்சியின் மேல் ஈடுபாடு கொண்டு, உற்சாக வரவேற்பளித்த ஹைதராபாத் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/only-trump-is-left-aimims-owaisi-takes-a-dig-at-bjp-campaign-in-ghmc-polls

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக