Ad

திங்கள், 30 நவம்பர், 2020

அரசு மருத்துவர்களின் பயோ மெட்ரிக் அட்டண்டன்ஸ் வழக்கு, பறந்த சுற்றறிக்கை... அடுத்து என்ன?

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப் பதிவேட்டில் பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தும் அரசாணையை கண்டிப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது, சுகாதாரத்துறை செயலாளர் நவம்பர் 27 தேதியிட்ட அவசர சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் இந்த பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவரங்களை கேட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகை மற்றும் பணி நேரத்தை கண்காணிக்கும் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது. என்றாலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நீதிமன்ற அவமதிப்பு காரணமாக நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க, அதன் எதிரொலியாக சுகாதாரத்துறை செயலர் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது அரசு மருத்துவர்களிடம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்/ Representational Image

தமிழகம் முழுவதும் தற்பொழுது 30 அரசு மருத்துவக்கல்லூரிகள், 45 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், சுமார் 260 தாலுகா மருத்துவமனைகள், சுமார் 1,750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20,000 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் பணிக்கு வந்து செல்லும் நேரமும், வருகையும் உறுதிப்படுத்தப்படுவதில்லை. பதிவேட்டில் கையெழுத்து போடும் பழைய நடைமுறையைதான் பெரும்பாலான மருத்துவ மையங்களும் மருத்துவமனைகளும் பின்பற்றி வருகின்றன. இதனால் டாக்டர்களின் பணி நேரம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது.

Hospital/ Representational Image

அரசு மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் தனியார் மருத்துவமனைகளுக்குப் பணிக்கு சென்றுவிடுவது, தாமதமாக வருவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும், முக்கிய சிக்கலான உயிர்காக்கும் சிகிச்சைகளின்போது இணை மற்றும் துணை பேராசிரியர்கள் பணியில் இல்லாமல் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களை பணியில் இருக்கச் செய்துவிட்டு, பணி நேரத்தில் மருத்துவனையில் இல்லாமல் தனியார் மருத்துவமனை மற்றும் பிற தனிப்பட்ட காரணங்களுக்காகச் சென்றுவிடும் வழக்கம் அதிகரித்தும் வந்தது. இதனால் நாள்தோறும் அரசு மருத்துவமனைகளை நம்பி வரும் லட்சக்கணக்கான ஏழை, எளிய நோயாளிகளுக்குத் தரமான மருத்துவசேவையை உறுதிப்படுத்த முடியவில்லை.

இன்னொரு பக்கம், அனைத்து மருத்துவர்களின் வருகை பதிவேடுகளும், பழைய முறைப்படி அட்டண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு வரும் வழக்கமாகவே இருந்துவந்தது.

Doctor/ Representational Image

இந்தச் சூழலில், 'தமிழகத்தின் அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகை பதிவேடும் டிஜிட்டல் முறையில் பயோ மெட்ரிக் பதிவேடு முறையை பின்பற்றி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்' என்று கடந்த 2012-ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்தது. இதன் அடிப்படையில் லட்சக்கணக்கில் செலவு செய்து அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு இயந்திரங்கள் பொருத்தப்படும் பணிகளை ஆரம்பித்தனர். ஆனால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இதை பின்பற்றப்படாமல் அலட்சியப்படுத்திவந்தனர்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சுகாதார உரிமை சமூகச் செயற்பாட்டாளரான ஆனந்த ராஜ், பயோ மெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தும் அரசாணையை கண்டிப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என்று, மதுரை உயர் நீதிமன்றத்தில்பொது நலவழக்குத் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ஓராண்டுக்கு மேல் விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் கடந்த 25.01.2017 அன்று, 'அரசு மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள்வரை மருத்துவர்களின் வருகை மற்றும் பணி முடிந்து செல்லும் நேரத்தை கட்டாயம் பயோ மெட்ரிக் முறையில் பதிவுசெய்ய வழிவகை செய்யும் அரசாணையை நான்கு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டது.

ஆனாலும் இந்த உத்தரவை தமிழக சுகாதாரத்துறை செயல்படுத்தவில்லை. மனுதாரர் ஆனந்த ராஜ், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து, தமிழக சுகாதாரத்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தன் ஆதாரங்களை சமர்ப்பித்தார். அவரிடம் பேசினோம்.

Anand Raj

''அந்த வழக்கு விசாரணயில் சுகாதாரத்துறை சார்பாக கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. நீதிமன்றமும் அவகாசம் வழங்கியது. ஆனாலும் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தாமல் கால தாமதம் செய்துவந்தனர். சுகாதாரத்துறையின் இந்தச் செயல்பாடு குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. உச்சகட்ட நடவடிக்கையாக இப்போது, சுகாதாரத்துறை செயலர் கடந்த நவம்பர் 27 தேதியிட்ட அவசர சுற்றறிக்கையில், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தியுள்ள மருத்துவர்கள் வருகை பதிவு பயோ மெட்ரிக் விவரங்களை கேட்டுள்ளார்'' என்றார். அந்த விவரங்களை நாளை(2.12.2020) சுகாதாரத்துறை தாக்கல்செய்ய உள்ள பரப்பரப்பான கட்டத்தை, இந்த வழக்கு எட்டியுள்ளது. அடுத்து என்ன என்று பார்ப்போம்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/updates-on-the-implementation-of-a-biometric-attendance-system-for-government-doctors-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக