Ad

ஞாயிறு, 29 நவம்பர், 2020

தலையணை முதல் கட்டில் வரை... நீங்கள் உறங்கும் முறை சரியானதுதானா? - விளக்கும் மருத்துவர்

நாள் முழுவதும் உழைத்த அயர்ச்சியைப் போக்க உதவுவது இரவு நேர உறக்கம் மட்டுமே. ஆனால், படுக்கையில் சரியான நிலையில் படுக்காவிட்டால் உறக்கம் பாதிக்கப்படுவதோடு கழுத்துவலியும் உண்டாகிவிடும். அதனால் கொஞ்சம் அக்கறையுடன் தூங்குங்கள் என்கிறார் எலும்பு, மூட்டு சிறப்பு மருத்துவர் ரமேஷ் பாபு. படுக்கும் முறை குறித்து அவர் தரும் மிக முக்கிய ஆலோசனைகள் இதோ உங்களுக்காக...

எலும்பு, மூட்டு சிறப்பு மருத்துவர் ரமேஷ் பாபு

மெத்தை அல்லது கட்டில் எதில் படுத்து உறங்குவது சரி?

மெத்தையோ, கட்டிலோ யாருக்கு எது வசதியாக உள்ளதோ அதில் படுக்கலாம். கட்டிலாக இருப்பின் ஸ்பிரிங் கட்டில் அல்லது நாடாக் கட்டிலில் படுக்கக் கூடாது. இரும்புக் கட்டில் அல்லது மரக்கட்டிலில் உறங்கலாம்.

படுத்துக்கொண்டு புத்தகம் படிப்பது, படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டு அலைபேசியைப் பயன்படுத்துவது போன்றவை வேண்டாம். அதேபோல சிலர் குப்புறப் படுத்துக்கொண்டு மடிக்கணினியைப் பயன்படுத்துவார்கள். இவையெல்லாம் கழுத்து வலியை உண்டாக்கும் முக்கிய காரணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

படுக்கும்போது உண்டாகும் கழுத்துவலிக்கு நாம் வைத்துக்கொள்ளும் தலையணையும் ஒரு முக்கியமான காரணம். சிலர் இரண்டு அல்லது மூன்று தலையணைகளையெல்லாம் தலைக்கு வைத்துப் படுப்பதுண்டு. இப்பழக்கம் கழுத்துவலிக்கு வித்திட்டுவிடும். எனவே, எப்போதும் மெலிதான தலையணையை மட்டுமே பயன்படுத்துங்கள்.

வெறும் தரையில் படுக்காமல் நாம் ஏன் தலையணையில் படுக்கிறோம்?

நம்முடைய முதுகின் நடுப்பகுதி மற்றும் தலையின் பின்பகுதி இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டு ஒரே நேர்க்கோட்டில் இருக்காது. முதுகின் நடுப்பகுதியைவிட தலையின்பின்பகுதி மூன்று முதல் நான்கு இன்ச் வரை நீண்டிருக்கும். எனவே, படுக்கும்போது முதுகின் நடுப்பகுதி மற்றும் தலையின் பின்பகுதி ஆகிய இரண்டும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தலையணையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், தலையணையை உயரமாக வைத்துக்கொண்டு தூங்கும்போது கழுத்து முன்னோக்கி இருக்கும். இதன் காரணமாக கழுத்து நரம்புகளில் சுளுக்கு மற்றும் வலி உண்டாகும். எனவே, மூன்று முதல் நான்கு இன்ச் அளவுள்ள மெல்லிய தலையணையைப் பயன்படுத்தினால் கழுத்துவலி இல்லாத நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

Bed

Also Read: ஸ்மார்ட்போனால் கைகளுக்கு இத்தனை பிரச்னைகளா? விளக்கும் இயன்முறை மருத்துவர் #MyVikatan

நேராகப் படுப்பது, ஒருக்களித்துப் படுப்பது அல்லது குப்புறப் படுப்பது இவற்றில் எது சரியானது?

இப்படித்தான் படுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. அவரவர்க்கு வசதிப்படும் நிலையே சரிதான். ஆனால், முதுகில் வலி உள்ளவர்கள் பக்கவாட்டில் படுக்க வேண்டும். அதுவும் எப்படி? தாயின் வயிற்றில் குழந்தை கால்களை மடித்தபடி இருக்கும் இல்லையா... அப்படி உறங்குவது நல்லது. அதேபோல கழுத்து வலி உள்ளவர்கள் மெல்லிய தலையணையின் மேல் தலையை வைத்து நேராகப் படுத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பக்கவாட்டில் படுக்கும்போதும் அவர்களின் தலை அந்த மெல்லிய தலையணையின் மேல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தலை தொங்கியது போன்ற நிலையில் படுத்தால் அவர்களது கழுத்துவலி இன்னும் அதிகமாகும்.

கழுத்துவலி உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேக தலையணை எதுவும் இருக்கிறதா?

கழுத்துவலி உள்ளவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட செர்விக்கல் பில்லோ (cervical pillow) தலையணைகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், அது எல்லோருக்கும் செட் ஆகும் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு அது ஒத்துவந்தால் பயன்படுத்துங்கள். அப்படி இல்லையென்றால் அதையே பிடித்துக்கொண்டு இருக்காமல் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

Sleep

Also Read: விதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா?! - விளக்கும் மருத்துவர்

எப்படிப்பட்ட தலையணை, மெத்தை படுப்பதற்கு நல்லது?

நீங்கள் பயன்படுத்தும் தலையணை கடினமாக இல்லாமல் மிருதுவாக இருக்க வேண்டும். இலவம்பஞ்சு தலையணை பயன்படுத்த மிகவும் ஏற்றது. FOAM தலையணை பரவாயில்லை. அதிலும் குறிப்பாக MEMORY FOAM என்ற வகை தலையணையைப் பயன்படுத்தலாம். இந்தவகைத் தலையணையில் தலை வைத்துப் படுக்கும்போது அந்த FOAM அமுங்கும். ஆனால், அதிலிருந்து தலையை எடுத்த பிறகு அந்தத் தலையணை பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்பதே இதன் சிறப்பம்சம். ஆனால், இதுவே நீங்கள் சாதா FOAM தலையணையைப் பயன்படுத்தும்போது அது பழையதாகிவிட்டால் அதில் படுத்துவிட்டு எழுந்திருக்கும்போது உடனே அது பழைய நிலைக்குத் திரும்பாது. சற்று மெதுவாகத்தான் திரும்பும். இப்படிப்பட்ட அறிகுறி உங்கள் தலையணையில் தெரிந்தால் அந்தத் தலையணையை மாற்ற வேண்டும், இது உங்களது கழுத்துக்கு ஏற்றது அல்ல என்று அர்த்தம். தலையணை மட்டுமல்லாமல் மெத்தைக்கும் இதுவே பொருந்தும்.

கழுத்துவலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் நிம்மதியாக உறங்கப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

படுத்தபடி புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

இரண்டு, மூன்று தலையணைகளைத் தலைக்கு வைத்துக்கொண்டு ஒருபோதும் படுக்காதீர்கள்.

தினசரி உடற்பயிற்சி அவசியம். நடைப்பயிற்சியைத் தவறவிடவே கூடாது. குறிப்பாக, கழுத்துக்கான ஸ்ட்ரெட்ச்சிங் (Stretching Exercises) பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி

உடலில் வைட்டமின் – டி, கால்சியம் போன்றவை குறையாதவாறு பார்த்துக்கொள்வதும் முக்கியம். அதேபோல உயரத்துக்கேற்ற எடையைப் பராமரிப்பது நல்லது.

கழுத்தில் வலி என்றால் தலையணை வைக்காமல் தரையில் ஃப்ளாட்டாகப் படுக்க வேண்டும் என்ற கருத்து பலரிடமும் உள்ளது. ஆனால், உங்களுக்கு இப்படிப் படுத்தால் வலி சரியாகிறது என்றால் படுக்கலாம். ஆனால், எல்லோரின் கழுத்துவலிக்கும் இது நல்ல நிவாரணம் அளிக்கும் என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது.

அதேபோல நேராகப் படுப்பது நல்லதுதான். ஆனால், பழக்கம் காரணமாகச் சிலர் ஒருக்களித்துப் படுப்பர். சிலருக்கோ குப்புறப்படுப்பதுதான் வசதியாக இருக்கும். நீண்டநாள் பழக்கத்தைச் சுலபத்தில் மாற்ற முடியாது அல்லவா. எனவே, எந்த நிலையில் படுப்பது உங்களுக்குச் சௌகர்யமாக இருக்கிறதோ அப்படியே படுக்கலாம். தவறில்லை. ஆனால், முன்பே சொன்னதுபோல படுத்துக்கொண்டே படிப்பது, மொபைல், லேப் டாப், தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள்" என்கிறார் எலும்பு, மூட்டு சிறப்பு மருத்துவர் ரமேஷ் பாபு.



source https://www.vikatan.com/health/healthy/doctor-guides-how-to-sleep-in-right-position-and-pillow-setup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக