Ad

வியாழன், 26 நவம்பர், 2020

ரியோவின் அபத்த நாடகங்கள்... நிஷாவுக்கு சீரியல் கண்ணீர்! பிக்பாஸ் – நாள் 53

இன்றைய தினம் ரியாயோவிற்கு என்று ‘விதிக்கப்பட்ட நாள்’ போலிருக்கிறது. வடிவேலுவை கடத்திக் கொண்டு போய் ஆளாளுக்கு ஐந்து நாள் வைத்து ஆசை தீர மூத்திரசந்தில் கும்முவது போல, ரியோவை இன்று ஆளாளுக்கு இழுத்துச் சென்று வைத்து வறுத்தெடுக்க, ரியோவின் கதி ‘ஐயோ’ என ஆகி விட்டது.

வீடு இரண்டு அணிகளாக பிரிந்திருப்பது இப்போது உறுதியாகி விட்டது. ஒன்று எண்ணிக்கை அதிகமுள்ள அர்ச்சனா அணி. இன்னொன்று ஷிவானி, ஆஜீத், சாம் கொண்ட பாலாஜி அணி.

பாலாஜிக்கு விசுவாசமாக இருந்த கேபி, பதவி ஏதும் கிடைக்காததாலும் உட்கட்சி ஜனநாயகப் பிரச்னையாலும் எதிர்க்கட்சிக்குத் தாவி விட்டார். சனம் மற்றும் அனிதா ஆகியோர் இணைந்து புதிய கூட்டணி ஆரம்பித்திருந்தாலும் பாலாஜி அணிக்கு வெளியில் இருந்து அவ்வப்போது ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல ரம்யா எந்த அணியிலும் நுழையும் சாமர்த்தியத்தைக் கொண்டிருந்தாலும் இப்போதைக்கு அவர் பாலாஜி அணியின் பக்கம் நிற்கிறார். அர்ச்சனா குழுவின் ராவடிகளை அவர் உள்ளூற வெறுக்கிறார் என்று தெரிகிறது.

பிக்பாஸ் நாள் 53

பிக்பாஸ் வீட்டின் கூட்டணி நிலவரம் இவ்வாறு இருக்க சுயேச்சையாக நிற்பவர் ஆரி மட்டுமே. இந்த அரசியல் சூட்டினை கெடுப்பது போல சமீபத்தில் பிக்பாஸ் வீட்டினுள் வெள்ளம் புகுந்திருப்பதாகச் சொல்கிறார்கள். (ஹப்பாடா... எழுதறதுல இருந்து ரெண்டு நாள் லீவு கிடைக்கும்!). இதனால் நிகழ்ச்சியில் இடையூறு ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார்கள். எதையாவது செய்து தொடர்வார்கள்.

வெள்ளத்தின் எதிரொலியா அல்லது தற்செயலா என்று தெரியவில்லை. இன்றைய நாளின் தொகுப்பில் ஒரு முக்கியமான வித்தியாசம் தெரிந்தது. அதாவது பொதுவாக முந்தைய நாளின் தொடர்ச்சியில் முக்கியமான பகுதியை மட்டும் போட்டு விட்டு சட்டென்று அடுத்த நாளுக்கு எட்டு மணி பாட்டுடன் மாறி விடுவார்கள். ஆனால் இன்று ‘52வது நாளின்’ தொடர்ச்சியே முழுவதும் காட்டப்பட்டது.

நேற்று ஆரிக்கும் – பாலாஜிக்கும் நடந்த சண்டை இழுவையாக காட்டப்பட்டதைப் போலவே இன்று ரியோவிற்கும் சனத்திற்கும் விட்டு விட்டு நடந்த நீண்ட வாக்குவாதம் சலிப்பேற்றும் வகையில் காட்டப்பட்டது. இருக்கிற ஃபுட்டேஜை வைத்து ஒப்பேற்றுகிறார்கள் போல.

ஓகே... 53வது நாளில் (உண்மையில் 52வது நாளின் தொடர்ச்சி) என்ன நடந்தது?

கால் சென்டர் டாஸ்க் தொடர்ந்தது. ரியோ Vs ஆஜீத் என்கிற காம்பினேஷன். அவலை நினைச்சு உரலை இடித்த கதையாக பாலாஜியை மனதில் நினைத்துக் கொண்டு அந்த காண்டையெல்லாம் ஆஜித்தின் தலையில் இறக்கினார் ரியோ. இவர் ‘கோர்ட்ரூம் டிராமா திரைப்படங்கள்’ நிறைய பார்ப்பார் போலிருக்கிறது. அல்லது கமல் நுட்பமாக வலை விரிக்கும் பாணியில் இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம்.

பிக்பாஸ் நாள் 53

'‘ஒரு பாட்டு பாடுங்க தம்பி'’ என்று ‘நீங்கள் கேட்ட பாடல்’ போலவே உரையாடலைத் துவங்கினார் ரியோ. ‘மின்னலே’ என்கிற பாடலின் துவக்கத்தை ஆஜீத் பாடி முடித்தவுடன் ‘'இந்தப் பாடலில் வெளிப்பட்ட உணர்வு பொய்யா... தம்பி? இல்லைல்ல... அப்புறம் ஏன் தம்பி இந்த வீட்டில் சிலர் அன்பாக இருந்தால் அது பொய்யின்னு சொல்றீங்க..?'' என்று சுற்றி வளைத்து விஷயத்திற்கு வந்தார்.

ரியோவிற்கு இந்த டாஸ்க்கின் மூலம், பாலாஜியை கேள்வி கேட்டு கார்னர் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் ‘பாவம் சின்னப்பையன்’ என்று ஆஜீத்தை அதிகம் சங்கடப்படுத்தி விடக்கூடாது என்கிற கரிசனமும் தெரிந்தது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இந்த கால்சென்டர’ டாஸ்க்கில் யார், யாருடன் பேசுவது என்கிற ஜோடியை பிக்பாஸ் அமைத்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியல்ல போலிருக்கிறது. வாடிக்கையாளர்கள் அணி ஒன்று கூடி ரியோ தலைமையில் இந்த முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். எனில் ரியோ, தனது தேர்வாக பாலாஜியையே தேர்ந்தெடுத்திருக்கலாம். நேரடியாக கேட்டிருக்கலாம். ஆனால் பாலாஜி சாமர்த்தியமாக தன்னை மடக்கி விடுவார் என்று ரியோவிற்குத் தெரியும். எனவே பலியாடாக ஆஜீத்தை தேர்ந்தெடுத்தார்.

இதனால்தான் இந்த விஷயம் பின்னர் பிரச்னையாகும் போது ‘'எனக்கு பாலாஜிதான் வேண்டும் என்று நான் முன்பே சொல்லி விட்டேன்'’ என்று அர்ச்சனா ஓடி வந்து செல்லத் தம்பிக்காக சாட்சியம் சொன்னார்.

ஓகே... ரியோ – ஆஜீத் உரையாடலுக்குத் திரும்புவோம். சுற்றி சுற்றி வளைத்து கேட்டாலும் ரியோ கேட்க விரும்புவது இதுதான். ‘'எங்கள் குரூப்பில் அன்பு இருந்தால் அதைக் கேள்வி கேட்கிறீர்களே... உங்கள் குரூப்பில் அது இல்லையா?'’ என்பதை நிறுவுவதுதான் அவரின் நோக்கம். இதற்காக, புதிய கூட்டணியாக உருவாகியுள்ள அனிதா மற்றும் சனத்தை அவர் மேற்கோள் காட்டியதுதான் பின்னர் பிரச்னையாகி விட்டது. அவருக்கு பாலாஜியை நேரடியாக உதாரணம் காட்டத் தயக்கம்... ஏன் பயம் என்று கூட சொல்லலாம்.

ரியோ எங்கு வருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட ஆஜீத் தடுமாறினார். ‘ஓ... நான் அமைதியா இருக்கேனா?” என்கிற அளவிற்கு குழப்பமாகி ‘ஓகே.. நீங்க நாமினேட் ஆகக்கூடாதுன்னு நெனக்கறேன்’ என்று உரையாடலைத் தானே துண்டித்து விட்டார். இதன் மூலம் அடுத்த வாரம் அவர் நாமினேட் ஆவார். ‘'சின்னப்பையனை வறுத்துட்டோமே... பாவம்’' என்று ரியோவும் ஐந்து நட்சத்திரங்களை பதிலுக்கு அள்ளி வழங்கினார். (டேக் இட்டு!).

‘'என்னை வெச்சு செஞ்சுட்டாரு... அய்யோ வெளில போகவே பயமாயிருக்கே'’ என்று ஆஜித் வெட்கப்பட்டு தயங்கிய அடுத்த கணமே ‘'எல்லோருமே வெளில போகலாம்'’ என்று அறிவித்தார் பிக்பாஸ். (என்னா வில்லத்தனம்!).

‘ஆசை’ திரைப்படத்தில், தன்னிடம் சண்டையிட்டுச் செல்லும் சுவலட்சுமியிடம் அஜித் இவ்வாறு கேட்பார். ''வீட்டுக்குப் போறேன்றியா... விட்டுட்டுப் போறேன்றியா”... இது போல, ‘பிக்பாஸ்... வீட்டை விட்டு வெளியே போங்கன்னு சொல்றீங்களா.. உள்ளே போங்கன்னு சொல்றீங்களா சரியா சொல்லுங்க... பயமாயிருக்கு’' என்ற நக்கலடித்தார் பாலாஜி.

''பாலாஜி கிட்ட கேக்க வேண்டியதையெல்லாம் ஆஜீத் கிட்ட கேக்கறாரு'’ என்று வீட்டின் உள்ளே ரம்யா சொல்லிக் கொண்டிருந்ததை அர்ச்சனா டீம் ரசிக்கவில்லை. (வெஷம் வெஷம்... என்று மனதிற்குள் கருவியிருக்கலாம்.) ''இங்கே ஒரு தம்பி கிடைக்கக்கூடாதா. அக்கா கிடைக்கக்கூடாதா'’ என்று ரியோ கேட்ட போது வீட்டில் இருந்த நிஷா கண்கலங்கி அழுததைப் பார்த்த போது உண்மையில் எரிச்சலாக இருந்தது. (இவர்கள் பிக்பாஸிற்குள் வந்ததிற்குப் பதிலாக டீவி சீரியலில் நடிக்கப் போயிருக்கலாம்).

ஓகே... ரியோ கேட்பது ஒரு நோக்கில் சரிதான். பிக்பாஸ் வீட்டிற்குள் அன்பும் பாசமும் இருக்கக்கூடாதா..? இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிக்பாஸ் என்பது மனிதர்கள் கூடி விளையாடும் விளையாட்டு. அங்கு குழு மனப்பான்மை உருவாவது எப்படி தவிர்க்க முடியாததோ, அப்படியே பாசம், நட்பு போன்றவை உருவாவதையும் தவிர்க்க முடியாது. ஆனால் அந்த குழு மனப்பான்மையும் அன்பும், திறமையுள்ள போட்டியாளர்களை வெளியேற்றும் சதியாக மாறக்கூடாது. திறமையற்ற டம்மிகள் உள்ளே பாதுகாப்பாக இருக்கும் அபத்தத்தை செய்யக்கூடாது.

ஆனால் இரண்டு டீமிலும் இந்த நேர்மையற்ற செயல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உதாரணம் அர்ச்சனா அணியில் ரமேஷ், சோம் மற்றும் பாலாஜி அணியில் ஷிவானி மற்றும் ஆஜீத். இவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. ஆனால் இவர்கள் வீட்டினுள் தொடர்ந்து இருக்கவும், சுரேஷ் போன்ற திறமையான ஆட்டக்காரர்கள் வெளியே செல்வதற்கும் இது போன்ற குழு மனப்பான்மையும் பாசமும்தான் காரணம். இதனால் ஆட்டத்தின் சுவாரஸ்யம் கலைந்து போகிறது.

விளையாட்டினுள் அன்பும் பாசமும் கலக்காமல் இருக்கும் மனவுறுதியும் நேர்மையும் வேண்டும். துரதிர்ஷ்டமாக பிக்பாஸ் வீட்டில் அது கிடையாது. இரண்டு அணிகளுமே தங்கள் டீமில் உள்ளவர்கள் தவறு செய்திருந்தாலும் மறைத்து எதிர் அணியை மட்டுமே நாமினேட் செய்கிறார்கள்.

பிக்பாஸ் நாள் 53

உதாரணத்திற்கு இன்றைய நாளில் நடந்த சம்பவம் ஒன்றையே பார்ப்போம். அர்ச்சனா டீமில் இருக்கும் ரமேஷ், கேப்டன் ரியோ முன்புதான் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் ஷிவானி இதை சுட்டிக்காட்டும் வரையிலும் ரியோ அந்த விஷயத்தை ஆட்சேபிக்கவில்லை. ‘'அப்படியா... தூங்கறாரா?'’ என்று பாவனை செய்தார். ''‘யப்பா டேய்.... இது ஃபேவரிட்டிஸம் ஆயிடுமாம்.... எழுந்திரு'’ என்று நிஷாவும் சர்காஸ்டிக்காக சொல்லி ரமேஷை எழுப்பினார்.

ஆக இரண்டு அணிகளிலுமே குழு மனப்பான்மை காரணமாக திறமையற்ற போட்டியாளர்களைக் காப்பாற்றும் வேலை நடக்கிறது. இதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் ''இந்த வீட்டில் குரூப்பிஸம் இல்லை’' என்பதை அடிக்கடி சொல்லி ரியோ செய்யும் நாடகம் அபத்தம்.

எனில் திறமையற்ற போட்டியாளர்களை எப்படி வெளியேற்றலாம்? அது பார்வையாளர்களின் வாக்கில்தான் இருக்கிறது. ஒரு திறமையற்ற போட்டியாளர் எவிக்ஷன் லிஸ்ட்டில் வந்தால் அவர்களும் பாரபட்சமின்றி வாக்களிக்க வேண்டும். இதை பிக்பாஸ் டீமும் எவ்வித அரசியலும் இன்றி சரியாக பிரதிபலிக்க வேண்டும்.

தயக்கத்துடன் வெளியில் வந்த ஆஜீத்தை ''நல்லாப் பேசினடா'’ என்று எல்லோருமே பாராட்டினார்கள். ''பாவம் சின்னப்பையன்... அவனும் என்னதான் செய்வான்?’' என்கிற கரிசனம் பாலாஜி டீமில் வெளிப்பட்டது. ரியோவிற்கு ஆதரவான முடிவை ஆஜீத் எடுத்ததால் அர்ச்சனா குழு பயங்கர ஹேப்பி.. குறிப்பாக நிஷா அதிக மகிழ்ச்சியில் இருந்தார். ''என்னமா பண்ணிப்புட்டான்.. அந்தப் பையன்’' என்று ஆஜீத்தை உச்சி முகர்ந்தார்கள். ரியோவோ ஒரு படி மேலே சென்று ஆஜீத்தை தூக்கி ஊர்வலமாகச் சென்றார். (ஆடு... மாலை.. பிரியாணி).

பாலாவிடம் நேரடியாக கேட்க வேண்டிய கேள்விகளுக்கு ஆஜீத்தைப் பயன்படுத்திக் கொண்டோமே என்கிற குற்றவுணர்வும் சங்கடமும் ரியோவிற்குள் இருந்தது போல. பின்னர் இது பஞ்சாயத்தாக ஆகும் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, ''பாலா பத்தி ரெண்டு கேள்விதான் உன் கிட்ட கேட்டேன். மத்தபடி பொதுவாதான் கேட்டேன். நீ சிறப்பா பதில் சொன்ன தம்பி'’ என்றெல்லாம் சொல்லி ஆஜீத்தை ஆற்றுப்படுத்தினார்.

பிக்பாஸ் நாள் 53

''இந்த வீட்டில நடக்கறது எல்லாமே கேம்தான்.. எல்லாமே ஸ்ட்ராட்டஜிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிற அனிதா மற்றும் சனத்திடம் இடையே மலர்ந்திருக்கிற புதிய நட்பும் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது’' என்று ரியோ உதாரணம் காட்டியது சனத்திற்குப் பிடிக்கவில்லை. ''இத்தனைப் பேரு இருக்கும் போது... அது ஏண்டா என்னை மட்டும் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்டே'' என்று கவுண்டமணி செந்திலைப் பார்த்து கோபப்படுவது போல ரியோவிடம் கோபப்பட்டுக் கொண்டிருந்தார்.

பாலாவைப் பழிவாங்குவதற்கு தங்களின் பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டதோ என்று சனத்திற்கும் அனிதாவிற்கும் கோபம். சனத்தின் வாதத்திறமை நாளுக்குள் நாள் மெருகேறிக் கொண்டே போகிறது. பொருத்தமான தமிழ் வார்த்தைகளையும் நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அவரிடம் உள்ள பிரச்னை என்னவென்றால், எதிராளியை முழுவதும் பேச விடாமல் இடையிலேயே குறுக்கிடுவது. இதன் மூலம் எதிராளியை எரிச்சல் அடைய வைப்பது.

ரியோவிற்கும் சனத்திற்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் இதுவேதான் நிகழ்ந்தது. சனத்தின் கேள்விக்குப் பொறுமையாகவே பதில் சொல்லி அமர்ந்தார் ரியோ. ஆனால் சனத்தின் வழக்கமான ‘நொய்... நொய்’ பாணி ஆரம்பமாகியவுடன் நிதானத்தை இழந்து கத்தத் துவங்கி விட்டார். கூடவே அனிதாவும் வேறு. ஒரு மனுஷன் என்னதான் பண்ணுவான்?

'‘நாங்களும் மனுஷங்கதான். எங்களுக்குள்ளயும் அன்பு மலரும். நாங்க என்ன அரக்கர்களா?'’ என்று கோபத்தில் ஆதங்கப்பட்ட சனத்திடம் 'அதென்னடா தம்பி... சட்டுன்னு அண்ணனை அசிங்கப்படுத்திட்ட’ என்பது மாதிரி ‘'ஏன் மான்ஸ்டர்னுலாம் சொல்றே’' என்று சொல்லி சனத்தை இழுத்துச் சென்றார் அனிதா.

சனத்தையும் அனிதாவையும் ‘பாராட்டும்’ நோக்கிலேயே ரியோ உதாரணம் காட்டியிருக்கலாம். ஆனால் அவரின் மெயின் டார்க்கெட் பாலாஜிதான். இதுதான் சனத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது. ரியோ பெயர்களைக் குறிப்பிடாமல் பொதுவாகச் சொல்லியிருக்கலாம்.

ரியோவிற்கும் சனத்திற்கும் இடையில் நடந்த ‘ஆக்ரோஷமான குத்துச்சண்டையை’ பார்த்ததும் நக்கலாக சிரித்துக் கொண்டேயிருந்தார் பாலாஜி. பக்கத்தில் ஷிவானி இருந்தார் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.

சனம் முடித்து சென்றதும் அடுத்த பஞ்சாயத்தை ரம்யா ஆரம்பித்தார். கிச்சன் டீமில் இருந்த அனிதாவைத் தூக்கி விட்டு ரம்யாவை அதில் ரியோ இணைத்து விட்டார் போலிருக்கிறது. இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் நடந்திருக்கிறது போல. ஆனால் இது பற்றி ரம்யாவிடம் எதுவும் கேட்காமல், அவரிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் கேப்டன் ரியோ முடிவு எடுத்து விட்டு அதை ‘உத்தரவு’ போல ரம்யாவிடம் சொல்லி விட்டார்.

இதைப்பின்னர் அறிந்த ரம்யா ‘'நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது சமையல் கத்துக்க அல்ல’' என்று ஆட்சேபித்தார். ‘'இல்லம்மா.. சமையல் தெரியாதவங்க.. கிச்சன்ல வந்தா அவங்க கத்துக்கறதுக்கு ஒரு வாய்ப்பா இருக்குமில்லையா?’' என்பது ரியோவின் சமாளிப்பு. ‘'சமையல் தெரியாதவங்க வந்தா சாப்பாடு எப்படி டைமுக்கு வரும்?” இது ரம்யாவின் எதிர்க்கேள்வி. “போன வாரம் வந்துச்சே... அப்புறம் என்ன? போதாதற்கு கிச்சன் அமைச்சர் அர்ச்சனாவின் உதவியையும் நீங்கள் 24x7 கோரலாம். அதற்கு அவர் தயாராக இருக்கிறார்” என்கிற உத்திரவாதத்தை அளித்தவுடன் ரம்யா ஒருமாதிரியாக சமாதானம் ஆனார்.

இந்த வாக்குவாதத்தை உள்ளிருந்து கேட்ட அர்ச்சனா '‘நான் சமையல் ஆலோசனை சொல்லலைன்னு யாரு சொன்னது?” என்று பாவனையாக பதறி எழுந்து வந்தார். ‘'நான் அப்படிச் சொல்லலை. நீங்கள் Mentor ஆக இருக்கிறீர்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்’' என்று ரம்யா சொன்னவுடன் அர்ச்சனாவால் எதையும் சொல்ல முடியவில்லை. (உப்பு எவ்ள போடணும்-ன்றதுக்கெல்லாமா mentor-ன்ற வார்த்தையையா யூஸ் பண்ணுவாங்க?!).

வீடு பெருக்கும் பிரச்னையில் ‘'எழுந்து மட்டும் பார்க்க முடியுமாமா?’' என்று அர்ச்சனாவின் கமென்ட்டைக் கேட்டதும் பாலாஜி துள்ளி எழுந்து வந்ததைப் போலவே இன்று அர்ச்சனாவும் எழுந்து வந்தார்.

பிக்பாஸ் நாள் 53

இதிலுள்ள ஒரு உள்காமெடி என்னவெனில் ‘'கிச்சன் டீமிற்கு உதவி செய்ய அர்ச்சனா எப்போதும் தயாராக இருப்பார்'’ என்று ரியோ சபையில் சொன்ன விஷயம் அர்ச்சனாவிற்கே தெரியாது. சபையில் ரியோவாக அடித்து விட்டிருக்கிறார். ''டேய்... அப்படி நான் சொல்லவேயில்லையே'’ என்று பிறகு அர்ச்சனா விசாரிக்க ‘'தம்பிக்காக இதைக் கூட செய்ய மாட்டியாக்கா?” என்று ரியோ பாசம் காட்ட ‘'தம்பிக்காக.. பாசிப்பருப்புல குழம்பு கூட வெப்பேனடா... என் தங்கம்'’ என்று அர்ச்சனா உருக, அந்த நகைச்சுவைக்காட்சி நல்லபடியாக முடிந்தது.

‘'ஏம்ப்பா ரியோ இப்ப சும்மாதானே இருக்கே... நான் ஒரு பஞ்சாயத்து வைக்கறேன்'’ என்று அவரை அடுத்து மூத்திரச்சந்திற்கு இழுத்தவர் சாம். கிச்சன் டீமில் இருந்து அனிதாவை விலக்குவதற்கு ‘'அனிதா இருந்தால் பாத்திரம் அதிகம் விழும்'’ என்கிற காரணத்தைச் சொன்னீர்களா? என்கிற வில்லங்கமான கேள்வியை கேட்டார் சாம்.

''அனிதா என்கிற பாத்திரமே மகா டேஞ்சர் ஆச்சே... இதை சூதானமா டீல் பண்ணணுமே... இப்பத்தானே சனத்துகிட்ட இருந்து ரிலீஸ் ஆனோம்’' என்கிற பதட்டம் ரியோவின் உள்ளுக்குள் வந்ததோ என்னமோ... ''அய்யோ அப்படிச் சொல்லல... பொதுவாவே கிச்சன்ல பாத்திரங்கள் நிறைய விழும்னுதான் சொன்னேன்'’ என்று சமாளித்து எஸ்கேப் ஆனார். இது குறித்து சாமிடம் அனிதா ஆட்சேபம் தெரிவித்திருப்பாரோ என்னமோ.

இப்போது ரியோவை மறுபடியும் முட்டுச்சந்திற்குள் இழுத்த சனம் ‘'ரியோ பிரதர்... கால் சென்டர் டாஸ்க்கில் யார் யார் கிட்ட பேசப் போறாங்கன்றதை நாம ரகசியமாத்தானே பேசி முடிவு செஞ்சி வெச்சிருந்தோம். அப்புறம் ஆஜீத்திற்கு மட்டும் எப்படி தெரிஞ்சது?’' என்கிற கேள்வியைக் கேட்க ''தப்புத்தாம்மா.. தெரியாம பண்ணிட்டேன். அவருக்கு ஃபேவரிட்டிஸம் காட்டினேன்’' என்று முழு சரணாகதி அடைந்து விட்டார் ரியோ. வேற வழி?

இந்த டாஸ்க்கை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று ஆஜீத் பயந்து கொண்டே இருந்தததை கவனித்த ரியோ, ‘பாவம் சின்னப்பையன்' என்கிற பரிதாபத்திலும், கேப்டன் என்கிற உரிமையிலும் ‘கவலைப்படாதே. நான்தான் உன்கிட்ட பேசப் போறேன்’ என்கிற ரகசியத்தை ஆஜீத்திடம் மட்டும் அவிழ்த்திருக்கலாம்.

ஆனால் அழைப்பாளர்கள் மீட்டிங்கில் எடுத்த அதிபயங்கர ரகசிய முடிவுகள் பிக்பாஸ் வீட்டின் பக்கத்து வீடு உள்பட ஏரியாவில் உள்ள அனைவரிடமும் தெரிந்திருக்கிறது போல. யார் என்று தெரியாமல் பாலாஜி தன் அழைப்பை எடுத்த போது ‘'அர்ச்சனாதான் உங்க கிட்ட பேசப்போறாங்க... நாங்க ஒட்டுக் கேட்டோம்'’ என்று ஆஜித்தும் ஷிவானியும் சொன்னது நினைவிருக்கலாம்.

பிக்பாஸ் நாள் 53

ஆனால் இந்த ரகசியம் வெளிப்பட்ட விஷயம் ஆரி, சனம் ஆகியோருக்கு மட்டும் தெரியாது போல. ஆரி பெருந்தன்மையாக இதை விட்டு விட, சனம் மட்டும் ரியோவை சந்தைக்கு இழுத்தார். ரியோ தனது கேப்டன்சியை சரியாக கையாளவில்லை என்பதற்கான உதாரணம் இது. சில முடிவுகளை எடுத்து விட்டு அதை சிலரிடம் சொல்லியிருக்கிறார். சிலரிடம் சொல்லவில்லை. கிச்சன் டீம் முடிவு பற்றி ரம்யாவிடம் ஆலோசிக்காததும் ஓர் உதாரணம். பின்னர் இதற்காக ரம்யாவிடம் ஜாலியாக மன்னிப்பு கேட்க, அவரும் ஜாலியாக ‘மன்னிக்க முடியாது’ என்று கூறி விட்டார்.

‘ரோலர் கோஸ்டர்ல போய் வந்த மாதிரி இருக்கு’ என்று டயர்டாக அமர்ந்த ரியோவிடம் ‘இத்தனை பேர் கேள்வி கேக்கறாங்க... நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?” என்று ஷிவானியும் அதிசயமாக கேள்வி கேட்க ஆரம்பித்த போது ரியோவிற்கு மயக்கமே வந்தது.

‘'ஆஜீத்திற்கு எப்படி தெரிந்தது'’ என்கிற விஷயத்தை மீண்டும் கிளறிய அவர், ''மத்தவங்களை கேள்வி கேக்கறீங்களே... ரமேஷை மட்டும் தூங்க விடலாமா?” என்று கேட்க ‘'ரமேஷ் தூங்கினா நிச்சயம் கேட்பேன்'’ என்று ரியோ சீரியஸாக பதில் சொல்ல உண்மையாகவே ரமேஷ் அப்போது தூங்கிக் கொண்டிருந்தார். (ராஜா வீட்டு கன்னுக்குட்டி!). ‘அடேய் எழுந்திருடா... உன்னால என் மானம் போகுது வா. கடைக்குப் போகலாம். குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தர்றேன்'’ என்று ரமேஷை ஜாலியாக எழுப்பினார் ரியோ.

ரியோ மறுபடியும் ஃப்ரீயானதை அறிந்த சனம் ‘இது தப்பாச்சே’ என்று நினைத்தபடி '‘அது எப்படி என் பேரை இழுத்தே?” என்கிற பஞ்சாயத்தை மறுபடியும் இழுக்க ‘'தப்புதாம்மா. எங்க அம்மா சத்தியமா நான் தப்பான நோக்கத்துல சொல்லலை. பாராட்டத்தான் நெனச்சேன்'’ என்று சூடானார் ரியோ. அர்ச்சனாவின் சகவாசம் காரணமாக ‘'அம்மா மேல சத்தியம்'’ என்கிற பாணிக்கு ரியோ வந்திருக்கிறார் போல. அம்மா மீது சத்தியம் என்பதையெல்லாம் பத்தாம் வகுப்பு தாண்டியவுடன் விட்டு விட வேண்டிய சமாச்சாரம் ஆச்சுதே?!

ரியோவை அனைவரும் கார்னர் செய்வதைப் பார்த்த அக்கா அர்ச்சனா பொங்கி எழுந்து எதிர் டீமை வெறுப்பேற்றும் வேலையில் இறங்கினார். இதற்காக இந்தி அந்தாக்ஷரி விளையாடியது, பாலாஜி-ஷிவானி போலவே செய்தது, அவர்களின் உள்ளே புகுந்து கோயில் பிரகாரம் சுற்றியது... உள்ளிட்ட இன்னபிற விஷயங்கள் எல்லாம் எரிச்சல் தரும் காமெடியாகவே முடிந்தன.

'‘இந்த டாஸ்க் முடிஞ்சதும் சனத்தை நான் கேள்வி கேட்கப் போறேன் நான் டைட்டில் வேணாம்னு எப்ப இவ கிட்ட சொன்னேன்...’' என்று நிஷாவிடம் அர்ச்சனா கருவிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் '‘அப்பாடா.... ஒரு நாளைக்கான கன்டென்ட் தேறிடும் போல'’ என்று பிக்பாஸ் உள்ளுக்குள் அகம் மகிழ்ந்திருப்பார். இதற்காக ‘குறும்படம்... குருமாபடம்’ என்று அர்ச்சனா அந்தக் கோபத்திலும் ரைமிங்காக சொன்னது சுவாரஸ்யம்.

பிக்பாஸ் நாள் 53

''அண்ணே... பாலாஜி கிட்ட கேட்க வேண்டியதையெல்லாம் என் கிட்ட கேட்டுட்டீங்களே'’ என்று உள்ளுக்குள் அதுவரை வைத்திருந்த தயக்கத்தை உடைத்து ஆஜித் ரியோவிடம் கேட்க ‘'டேய் அண்ணன்... இன்னிக்கு பதில் சொல்லி சொல்லி ரொம்ப டயர்டா ஆயிட்டேண்டா... பாலா பத்தி ரெண்டு கேள்விதான் கேட்டேன். மத்ததெல்லாம் லுலுவாய்க்குதான். பேசாம உன்னை ‘மின்னலே’ பாட்டை முழுசா பாட வெச்சிருக்கலாம் போல இருக்கு” என்பது போல் நொந்து போய் பதில் சொன்னார் ரியோ.

‘என்னடா தம்பி... ரொம்ப அடிச்சிட்டானுங்களா” என்று ஆஜீத்தைப் பிறகு விசாரித்துக் கொண்டிருந்தார் பாலாஜி. அதன் பிறகு நள்ளிரவில் சாமிடம் அர்ச்சனா டீமின் பாலிட்டிக்ஸைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதே பழைய புராணம்தான்.

பிக்பாஸ் வீட்டில் வெள்ளம் வடிந்தால்தான் நாம் பிழைக்க முடியும். இல்லையென்றால் முதல் சீஸனில் நடந்ததையெல்லாம் தூசு தட்டி, எடிட்டிங் மாய்மாலத்துடன் இணைத்து நம்மை சோதித்து விடுவார்கள் போலிருக்கிறது.

புதிய போட்டியாளர், சுவாரஸ்யமான டாஸ்க், கமலின் திறமை போன்றவை இருந்தால்தான் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காப்பாற்ற முடியும் போலிருக்கிறது. இல்லையென்றால் இவர்கள் மாறி மாறி பழைய பஞ்சாயத்தையே வளைத்து வளைத்து பேசுவதைக் கேட்கும் போது ரியோவைப் போலவே நமக்கும் ‘டயர்டாகி’ விடுகிறது.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bb-tamil-season-4-episode-53-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக