Ad

சனி, 28 நவம்பர், 2020

திடீரென வைகையில் பொங்கிய நுரை... அதிர்ச்சியில் மதுரை மக்கள்!

மதுரையில் பெய்த மழையின் விளைவால் நகருக்குள் ஓடும் வைகை ஆற்றிலும் செல்லூர் கண்மாயிலும் 10 அடி உயரத்துக்கு நுரை பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து நுரையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வைகை ஆறு

ஏற்கனவே மதுரைக்குள் ஓடும் வைகை ஆற்றுப் பாதையிலும், அதை சார்ந்த கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அது மட்டுமல்லாமல், வீடுகள், தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் கழிவுகள் அனைத்தும் வைகை ஆற்றில்தான் கலந்து வருகின்றன.

இதற்கிடையே நகர வளர்ச்சிக்காக கரையோரங்கள் குறுக்கப்பட்டு இருபக்கமும் இரட்டை வழி சாலை போடப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை வைகை செல்லும் பாதை அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும் புகார் எழுப்பி வருகிறார்கள். வைகையை பாதுகாக்க உயர்நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

வைகை ஆறு

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் பெய்த மழையின் விளைவால் நேற்று வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நீர் செல்லூர் கண்மாயில் சேரும் இடத்திலும், மீனாட்சிபுரம் பாலத்திலும் 10 அடி உயரத்துக்கு வெண்ணிற நுரை எழும்பியதால் அப்பகுதி முழுவதும் சின்ன பனிமலை போல் காட்சி அளித்தது. இதைப் பார்க்க மக்கள் கூட ஆரம்பித்தார்கள்.

பின்பு தீயணைப்புத் துறையினர் வந்து நுரையை கலைக்கும் வகையில் நீரை பீய்ச்சி அடித்தார்கள். வைகை ஆற்றையும் கண்மாய்களையும் ஒட்டியுள்ள ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் அனுமதி இல்லாத சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவு நீர் வைகையாற்றில் கலப்பதால்தான் இதுபோன்று நுரை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் வளர்ந்து வைகையின் நீரோட்டத்தை தடுத்ததால் தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோட ஆரம்பித்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பார்வையிட்ட செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பகுதிக்கு வந்து ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். வைகை ஆற்றில் அபாயத்தை உண்டாக்கும் ரசாயன கழிவுநீரைத் தடுக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.



source https://www.vikatan.com/social-affairs/environment/toxic-foam-forms-in-vaigai-river-due-to-industrial-pollution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக