Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

சென்னை: கால்வாயில் மீன்பிடித்த சிறுவன் - நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்!

சென்னை கொடுங்கையூரை அடுத்த சின்னண்டிமடத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரின் மனைவி கோமதி. லோகேஷ், இறந்து விட்டதால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் கோமதி சிரமப்பட்டு வந்தார். அதனால் கோமதியின் மூத்த மகன் முகேஷ் (9). அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

சிறுவனைத் தேடும் பணி

நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. அதனால், அந்தப் பகுதியில் உள்ள ராட்சத கழிவு நீர் கால்வாயில் தண்ணீர் நிரம்பி சென்றது. அதில், நண்பர்களுடன் சேர்ந்து முகேஷ், நேற்று மீன்பிடித்து விளையாடினான். அப்போது கால்தவறி தண்ணீருக்குள் விழுந்த முகேஷை, நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர்.

கால்வாய் ஆழம் மற்றும் அதிகளவில் தண்ணீர் சென்றதால் முகேஷை நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை. அதனால் `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என முகேஷின் நண்பர்கள் கூச்சலிட்டனர். அந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களும் முகேஷைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். மேலும் முகேஷ், தண்ணீருக்குள் விழுந்த தகவலை, அவரின் குடும்பத்தினரிடம் கூறினர்.

சிறுவனைத் தேடும் பணி

இதையடுத்து வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 ரப்பர் படகுகள் மூலம் சிறுவன் முகேஷைத் தேடினர். ஆனால் 2 மணி நேரத்துக்கு மேலாகியும முகேஷைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Also Read: சென்னை: 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட செப்டிக் டேங்க் - சிறுவனின் உயிரைப் பறித்த சோகம்

இந்தநிலையில், தகவலறிந்த பெரம்பூர் தொகுதியின் தி.மு.க எம்எல்ஏ ஆர்.டி.சேகர் சம்பவ இடத்துக்கு வந்தார். நீச்சல் தெரிந்த இளைஞர்கள் மூலம் முகேஷைத் தேட அவர் ஏற்பாடு செய்தார். இதையடுத்து முகேஷ் தண்ணீரில் விழுந்த இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது. அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட முகேஷ்

ஆனால், அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர ஆபிரகாம் குரூஸ் மற்றும் போலீஸார் சிறுவன் முகேஷின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-9-year-old-drowned-in-canal-water-near-kodungaiyur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக