Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

மதுரை: `வழக்கிலிருந்து பெயரை நீக்க ஒரு லட்ச ரூபாய்!’ - விஜிலென்ஸில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

குற்றப்பத்திரிக்கையிலிருந்து பெயர் சேர்க்க அல்லது நீக்க பணம் பெற்றுக்கொண்டு கடமை தவறி செயல்பட்ட பெண் காவல்ஆய்வாளர், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மதுரை: `கொரோனா பரவுகிறது எனக் கூறிவிட்டு, ஊர்வலமும் போகிறார்கள்!’ - செல்லூர் ராஜூ

மதுரை அருகே செக்கானூரணி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அனிதா மீது பல்வேறு புகார்களை அப்பகுதி மக்கள் எழுப்பி வந்தனர். இந்தநிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

`எந்தவொரு புகார் வந்தாலும் புகார்தாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதில் சம்பந்தமில்லாதவர்களை வழக்கில் சேர்ப்பதும், பின்பு அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும், கொலை வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகளிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்டு தலைமறைவு என்று சொல்லி அவர்களை சுதந்திரமாக நடமாட விடுகிறார்’ என்றும் இவர் மீது குற்றச்சாடுகள் இருந்து வந்தது. இந்த நிலையில் நல்லதம்பி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் அனிதா

தங்களைத் தாக்கி காயப்படுத்தியதாக பொன்னமங்கலத்தை சேர்ந்த முத்து என்பவர் கொடுத்த புகாரில் நல்லதம்பி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்தார் காவல் ஆய்வாளர் அனிதா. இந்த சம்பவத்தில் சம்பந்தம் இல்லாத தனது மகன்கள், பேரன் ஆகியோரை குற்றப்பத்திரிக்கையில் செத்துள்ளதால், அவர்களை நீக்குமாறு ஆய்வாளரிடம் கோரியிருக்கிறார் நல்லதம்பி.

அவர்களை வழக்கிலிருந்து நீக்க வேண்டுமென்றால் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார் காவல் ஆய்வாளர் அனிதா. அவரிடம் பேரம் பேசியுள்ளார் நல்லதம்பி. கடைசியில் ரூ 80,000 தருவதாக ஒப்புக்கொண்டவர், பொய் வழக்கு போட்டு லஞ்சம் கேட்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Also Read: `தீபாவளி நாளில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர்கள்; காரணம் யார்..?!’ - கொதிக்கும் மதுரை மக்கள்

அவர்கள், ரசாயனம் தடவிய ரூ 30,000-த்தைக் கொடுத்து, `இதை ஆய்வாளரிடம் முன்பணமாகக் கொடுக்கவும்’ என்று சொல்லி நல்லதம்பியை அனுப்பி வைத்தனர். அதேபோல் ஆய்வாளர் அனிதாவிடம் பணத்தை நல்லதம்பி கொடுக்க, அதை அவரும் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர், கையும் களவுமாக அனிதாவைப் பிடித்து கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் மட்டுமல்லாது, இதற்கு முன் எத்தனை வழக்குகளில் லஞ்சம் பெற்று அதற்கு தகுந்ததுபோல நடந்து கொண்டிருக்கிறார் என்பதையும், அவருடைய சொத்து விவரங்களையும் தொடர்ந்து விசாரித்து வருகிறர்கள். இந்த சம்பவம் மதுரை மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/dvac-arrested-checkanurani-inspector-over-accepting-bribe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக