Ad

திங்கள், 2 நவம்பர், 2020

மாஸ் காட்டிய மார்கன்... ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஸ்மித் இருந்தும்... பரிதாப ராஜஸ்தான்! #KKRvRR

'உள்ளே வெளியே' என ப்ளேஆஃப் இடத்திற்கு வருவதும் போவதுமாய், அணிகள் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருக்க, க்ளைமேக்ஸின் கடைசி கட்டமாய், லீக் போட்டிக்களுக்குள்ளேயே, சில நாக் அவுட் போட்டிகள் நடந்து வருகின்றன. சூப்பர் சண்டேயின், முதல் போட்டியில் பஞ்சாபின் ப்ளேஆஃப் கனவுக்கு சிஎஸ்கே மூடுவிழா நடத்த, அவர்கள் இருவருடன் இந்தியாவுக்கு டிக்கெட் எடுக்கப் போகும் மூன்றாவது அணி எது என்பதற்கான மோதலில், ராஜஸ்தானை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளது கொல்கத்தா.

டாஸ் வென்ற ஸ்மித் பனிப்பொழிவைக் காரணம் காட்டி, பெளலிங் எடுப்பதாய்க் கூறினார். எந்த மாற்றமும் இன்றி ராஜஸ்தான் களம் காண, கொல்கத்தாவில் ரஸல் திரும்ப உள்ளே வந்திருந்தார்.

#KKRvRR

கில்லும் ராணாவும் கொல்கத்தா சார்பில் ஓப்பனிங் இறங்கினர். ஆரம்பமே அதிரடி காட்டும் ஆர்ச்சரின் அற்புதமான இரண்டாவது பந்திலேயே, ராணா வெளியேறி ஏமாற்றம் தர, கில்லுடன் திரிபாதி கைகோத்தார். ஓரளவு சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க முயன்ற இந்தக் கூட்டணி, பவர்ப்ளேவின் முடிவில் 55 ரன்களைக் குவித்திருந்தது. நன்றாக செட் ஆகி இருந்த இந்த பார்ட்னர்ஷிப்பை திவேதியா தகர்க்க, 24 பந்துகளில் 36 ரன்களுடன் வெளியேறினார் கில்.

இதற்கு அடுத்து உள்ளே வந்த நரைன் வான வேடிக்கை காட்டப் போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்குமாறு, வெறும் இரண்டே பந்துகளைச் சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் அவர் வெளியேற, கேப்டன் இயான் மார்கன் உள்ளே வந்தார்.

ஒரு பக்கம் மார்கன் அடித்து ஆடத் தொடங்க, கொல்கத்தா ரசிகர்கள் மனதில் அடுத்த இடியாய் இறங்கியது, ஷ்ரேயாஸ் கோபாலின் பந்தில், 34 பந்துகளில் 39 ரன்களில் திரிபாதியின் ஆட்டமிழப்பு! இதற்கடுத்து உள்ளே வந்த தினேஷ் கார்த்திக்கும் பொறுப்பற்ற முறையில் ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் ஆக உலகமே இருண்டது கொல்கத்தா ரசிகர்களுக்கு.

'அவர் வந்தா மாறும் இவர் வந்தா மாறும்', எனக் காத்திருந்தவர்களுக்கு காணக் கிடைத்ததோ வரிசையான விக்கெட்டுகளே! 12.3 பந்துகளில் 99 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டி இருப்பினும், ஐந்து விக்கெட்டுகள் விழுந்தது அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாய்ப் பார்க்கப்பட்டது. அதுவும் கடைசி நான்கு ஓவர்களில் 4 விக்கெட்டுகள் என்பது ராஜஸ்தானின் பக்கம் போட்டி சென்று விட்டதாகவே தெரிந்தது. ஆனால், அது அப்படிச் செல்லவில்லை.

#KKRvRR

அடுத்ததாய் களத்தினுள் வந்தது, போன சீசன்களில் எதிரணியைக் கதிகலங்க வைத்த ரஸல். இந்தப் போட்டியிலாவது அவரை பழையபடி பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு தலை தூக்கியது. பார்க்க முடியும் என்பதைப் போல, ஒருபக்கம் மரண மாஸ் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த மார்கனுக்கு பக்கபலமாய் ருத்ர தாண்டவம் ஆடினார், ரஸல். ராஜஸ்தான் கண்களில் பீதியைக் கிளப்பிய இந்தக் கூட்டணி, 18 பந்துகளில் 45 ரன்களைக் குவித்தது. எங்கே 220+ என்ற இமாலய இலக்கை இந்தக் கூட்டணி இலக்காய் நிர்ணயிக்குமோ என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய போது, பேக் டு பேக் சிக்ஸர்கள் அடித்த ரஸல், மூன்றாவது சிக்ஸர் அடிக்க முற்பட்ட போது ஆட்டமிழப்பினும், 11 பந்துகளில் 25 ரன்களைக் குவித்து தேவையான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டே வெளியேற, அடுத்ததாய் உள்ளே வந்ததோ கம்மின்ஸ்!

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கொஞ்சமும் அசராது 30 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்த மார்கன் "கேப்டன் இன்னிங்ஸ்னா இப்படி ஆடணும்" என பாடம் நடத்தினார். கம்மின்ஸ், கடைசி ஓவரில் வெளியேற, அடுத்து உள்ளே வந்த நாகர்கோட்டிக்கு கடைசிப் பந்துக்கு முந்தைய இரண்டு பந்துகளில், வாய்ப்புக் கிடைத்தும் ஸ்ட்ரைக் கொடுக்காத மார்கன், கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து, அணியின் ஸ்கோரை 191-க்கு எடுத்துச் சென்றார்.

கடைசி ஆறு ஓவர்களை பவர்ஃபுல் ஓவர்களாக மாற்றிய கொல்கத்தா 70 ரன்களைக் குவித்தது. மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனதோ, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளில் விக்கெட் விழுந்ததோ அவர்களை பாதிக்கவே இல்லை. அவர்களின் ரன் குவிப்பை ராஜஸ்தானால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 186 என்ற இலக்கை கடந்த போட்டியில் எட்டிய ராஜஸ்தான் இந்த ப்ரஷர் கேமிலும் அதை நிகழ்த்துமா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

#KKRvRR

இந்த ரன்களை 13.4 ஓவர்களில் முடித்தால் ராஜஸ்தான் ஆர்சிபியை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பது ராஜஸ்தானின் காதுகளில் சத்தமாகச் சொல்லப்பட்டது போலும். வெல்ல வேண்டும் என்பதை விட பெரிய மார்ஜினில் வெல்ல வேண்டும் என்ற அவசரமே ராஜஸ்தானின் பேட்ஸ்மேன்களிடம் காணப்பட்டது. ஸ்டோக்ஸுடன் களம் கண்ட உத்தப்பா முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டினார். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே முதல் ஐந்து பந்துகளில் 19 ரன்களை இந்தக் கூட்டணி குவிக்க, மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதிலேயே ஆறாவது பந்தில் உத்தப்பா ஆட்டமிழக்க, ஸ்மித் உள்ளே வந்தார். பயங்கர ஃபார்மில் இருக்கும் ஸ்டோக்ஸ், கம்மின்ஸ் பந்தில், தினேஷ் கார்த்திக்கின் அபாரமான டைவ் கேட்சினால் ஆட்டமிழக்கச் செய்தது, போட்டியை கேகேஆர் பக்கம் கொண்டு வந்தது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, பெரிய ஃபார்மில் இருப்பவர் ஸ்டோக்ஸ் மட்டுமே. அவரை ஆட்டமிழக்கச் செய்தது, போட்டியின் கேம் சேஞ்சிங் மொமன்ட்டாக மாறியது.

இரண்டு விக்கெட்டுகளை இழந்து அணி தள்ளாடத் தொடங்கியது. சரி சாம்சன் வந்து விட்டார், சரவெடிதான் இனிமேல் என பார்த்திருந்த கண்களைக் கலங்கச் செய்யுமாறு விழுந்தது, ஸ்மித்தின் விக்கெட். அதுவும் கம்மின்ஸின் பந்திலேயே! என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள்ளேயே, சாம்சனும் ஷிவம் மவியின் பந்தில் ஆட்டமிழக்க, ஹார்ட் அட்டாக் வராதது ஒன்றுதான் குறை, ராஜஸ்தான் ரசிகர்களுக்கு!

புண்ணான இதயத்தை மறுபடியும் குத்திக் கிழிக்குமாறு, ஐந்தாவது ஓவரிலேயே, பெரிய மனதுடன், கம்மின்ஸூக்கு நான்காவது விக்கெட்டைக் கொடுக்க ஆசைப்பட்டு, பராக் ஆட்டமிழக்க, 37 ரன்களுடன் ஐந்து விக்கெட்டுகளை இழந்த அணி மொத்தமாய் இழுத்துப் போர்த்திக் கொண்டது. ஓவருக்கொரு சிக்ஸரும் பவுண்டரியும் பறக்குமென எதிர்பார்த்தவர்களுக்கு காணக்கிடைத்ததோ ஓவருக்கு ஒரு விக்கெட். மிகவும் பரிதாபமான நிலையில் ஐசியூவில் அணி தள்ளாட, பட்லரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய திவேதியாவும் அணிக்கு ஆக்ஸிஜன் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அது ஓரளவே கைகொடுக்க, பதினோராவது ஓவரில், 22 பந்துகளில் 35 ரன்களுடன் பட்லரும், தனி மனிதராகப் போராடிக் கொண்டிருந்த திவேதியாவும், பதினைந்தாவது ஓவரில், 31 ரன்களுடனும் வெளியேற ஒட்டிக் கொண்டிருந்த ஒற்றை நம்பிக்கையும் மொத்தமாய் முடிவுக்கு வந்தது. ரசிகர்களிடம் அடுத்ததாய் தொற்றிக் கொண்ட ஆவல், 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் கொல்கத்தா மூன்றாம் இடத்திலும், 74 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால் இரண்டாம் இடத்திலும் முடிக்கும் என்பது!

#KKRvRR

சிஎஸ்கே பஞ்சாப் போட்டியின் முடிவில் எட்டாவது இடத்தில் இருந்த கேகேஆர், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் முனைப்போட்டு ஆடியது. ஆனால், ராஜாஸ்தானுக்ககா கடைசியில் களத்தில் நின்ற ஆர்ச்சரும், ஷ்ரேயாஸ் கோபாலும் அதனை நிகழ்த்த விடாமல் தடுத்து விட்டனர். இறுதியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா, நான்காம் இடத்திற்கு முன்னேறி, ப்ளே ஆஃபில் தனக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது. நாளை மறுநாளைய போட்டியில் மும்பை - ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியின் முடிவைப் பொறுத்தே கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவு நனவாகும்.

கடைசி லீக் போட்டியின் கடைசிப் பந்து வரை ப்ளே ஆஃப் இடங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது எந்தளவு அணிகளுக்குள் கடுமையான போட்டி இருக்கிறது என்பதையே காட்டுகிறது‌.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kkr-finishes-off-rajasthan-royals-hopes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக