Ad

திங்கள், 2 நவம்பர், 2020

நீலகிரி: `பேரன்ட்ஸ் கூட நல்லாதான் இருக்கேன்..!’ - தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து, எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து மண மேடையில், மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணும் அமர்ந்துவிட்டனர். மணமக்களை வாழ்த்த உறவினர்களும் கூடி அமர்ந்தனர். படுகர் சமுத்தியாத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், படுகர் இன மக்களின் வழக்கப்படி திருமணம் நடைபெற துவங்கியது.

மணப்பெண்

அதன்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப் பெண்ணிடம், மணமகன் மூன்று முறை "என்னை திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா" என கேட்க வேண்டும். மணப்பெண் ‘சம்மதம் ’ என சொன்னால் மட்டுமே தாலி கட்ட முடியும்.

இதேபோன்று இந்த திருமணத்திலும் மணக்கோலத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா என இரு முறை கேட்க, அந்த பெண் மவுனமாகவே இருந்தார். கடைசியாக மூன்றாவது முறை கேட்ட போது, ‘எனக்கு சம்மதம் இல்லை எனக் கூறி, தடுத்தார். கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைய, மண மேடையில் இருந்து எழுந்து அடுத்த அதிர்ச்சி கொடுத்தார் அந்த மணப்பெண். ஆத்திரமடைந்த பெற்றோர், மணப்பெண்ணை தாக்க முயன்றனர். எதற்கும் அசராத அந்தப் பெண் விரும்பிய நபரையே கரம்பிடிப்பேன் என அங்கிருந்து சென்றார்.

``அந்தப்பெண், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆணை காதலித்து வந்துள்ளார். இதனை ஏற்காத பெண்ணின் பெற்றோர், சொந்த சமூகத்திலேயே திருமணம் செய்துவைக்க கட்டாயமாக ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் அந்தப்பெண் திருமணத்தை தடுத்துள்ளார். அந்தப் பெண்ணை, அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் நடு வழியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்" என்ற தகவல்கள் வெளியானது.

உறவினர்களுடன் மணப்பெண்

இதனை தொடர்ந்து, மணப்பெண்ணின் தந்ததையை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டோம், ``ஒரு சின்ன புள்ளிய ஊதி எதுக்கு இவ்வளோ பெருசு பன்றாங்கணு தெரியல. என் பொண்ணுக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. அத நிறுத்துறத்துக்கு அப்படி பேசிட்டாளே தவிர‌ மத்தபடி எந்த பிரச்னையும் இல்லை. மத்தவங்க செல்றமாதிரி நடு ரோட்டில எறக்கிவிட்டுட்டுப் போயிட்டோம்ணு சொல்றது எல்லாம் பொய். எங்க பொண்ணு எங்க வீட்ல பத்திரமா இருக்கா. அவக்கிட்ட போன் குடுக்குறேன் பேசுங்க" என்றார்.

போனை வாங்கி பேசிய அப்பெண், ``எனக்கு இந்த மேரேஜ் பிடிக்கல. அதனால இப்படி சொன்னேன். இத பெருசு படுத்த வேண்டாம். எங்க பேரன்ட்ஸ் கூட நல்லாதான் இருக்கேன்" என‌ முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/news/general-news/nilgiris-marriage-stopped-issue-women-says-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக