Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் வாரிசு கிடையாது!’ - தடதடக்கும் தா.பாண்டியன்

யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் விடுதலை நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ’நவம்பர் விடுதலை திருநாள் கருத்தரங்கம்’ நடைப்பெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன், ``புதுச்சேரியின் வரலாறு குறித்து எதுவும் தெரியாதவரை, டெல்லி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரை, தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக அவருக்கு ஆளுநர் பதவியை கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்திருக்கிறது பா.ஜ.க.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

ஜனநாயகத்தின் ஆணி வேரை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி சிதைக்கும் வேலையைத்தான் முழு நேரமாகச் செய்துவருகிறார் கிரண் பேடி. அனைத்து மாநில ஆளுநர்களும் அந்தந்த மாநிலங்களோடு ஒத்துப்போகின்றனர். முதல்வர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் என்ன சொல்கிறதோ அதனை நிறைவேற்றுகின்றனர். ஆனால் இங்கிருக்கும் கிரண் பேடி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தினமும் தொல்லை கொடுத்து வருகிறார். முதல்வர் கூறும் எந்த ஆலோசனைகளையும் கேட்கமாட்டார். ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு அனுமதி கேட்டால் இழுத்தடிப்பார்.

ஆனாலும் முதல்வர் நாராயணசாமி 24 மணி நேரமும் துணிச்சலோடு அவரை எதிர்த்து நின்று போராடிக்கொண்டிருக்கிறார். ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன அதிகாரம் வழங்கியிருக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன் தனித்தன்மையை பறிக்கக்கூடாது. ஆனால் அவற்றை தொடர்ந்து பறித்து வரும் இந்த ஆளுநரை பிரதமர் மோடி திரும்பப்பெற வேண்டும். பா.ஜ.க எவ்வளவு செலவு செய்தாலும், தலைவர்களை நியமித்தாலும் தமிழகத்தில் அவர்களுக்கு வாரிசு கிடையாது. ராஜேந்திர சோழன், கரிகாலன் இவர்களின் வாரிசுகள் நாங்கள் என்று அறிவித்தார்கள். யார் தாத்தா, யார் அப்பா என்றே அவர்களுக்கு தெரியவில்லை. இப்போது தாத்தாக்களையும், அப்பாக்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வேல் சங்கம ரத யாத்திரை

காமராஜர் ஆட்சி எங்கள் ஆட்சி என்பார்கள். பாரதியை எங்கள் கவிஞன் என்பார்கள். ஆனால் பாரதி சொன்ன ஒரு வரியைக்கூட நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் அவர்களை அனுமதிக்காது. அனைவரும் அப்பாக்களையும், பேரன்களையும் தத்தெடுப்பார்கள். ஆனால் பா.ஜ.கவோ தற்போது தாத்தாக்களை தத்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ’தமிழகத்தில் யாத்திரை போகப்போகிறோம். புதிய கொள்கைகளை அறிவிக்கப்போகிறோம்’ என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படிக் கரணமடித்தாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது.

எந்த கூட்டணியில் பா.ஜ.க சேர்ந்தாலும், அவர்களோடு எந்த கூட்டணி கைகோர்த்தாலும் அந்த கட்சிக்கு சனியன் பிடித்தது என்றுதான் அர்த்தம். இரண்டு தரப்பும் தேர்தலுக்குப் பின் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவார்கள். அதனால் தமிழகத்தில் பா.ஜ.க எந்த அணியை அமைத்தாலும், அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்று சொன்னாலும், விலை கொடுத்து வாங்க நினைத்தாலும் அது பலிக்காது.

Also Read: தமிழகத்தில் தொடர்கிறதா வாரிசு அரசியல்? உதயநிதியைச் சாடும் எதிர்க்கட்சிகள்

எங்கள் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், ம.தி.மு.க கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் ஓரணியாக நிற்கிறோம். புதுச்சேரியிலும் முழு உறுதியோடு நிற்போம். வேல் யாத்திரையை தமிழகத்தில் தடை செய்ய வேண்டியதில்லை. அவர்கள் எந்த ஊருக்கு போனாலும் அவர்களை வரவேற்க மக்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் அந்த அவமானத்தை சகித்துக்கொள்ளட்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/there-is-no-need-to-ban-vel-pilgrimage-tpandiyan-senior-leader-of-communist-party-of-india-slams-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக