Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

கரூர்:`விவசாயிகளை கார்ப்பரேட்களிடம் பாஜக அடகுவைத்துவிட்டது!' - காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் தத்

"விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய சொல்லி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது" என்று சஞ்சய் தத் குற்றம்சாட்டியுள்ளார்.

சஞ்சய் தத் பேசியபோது..

Also Read: ``குஷ்பு மாதிரியானவங்களுக்கு பா.ஜ.க ஏற்றதில்லை!" - ஜோதிமணி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான சஞ்சய் தத், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 2021 - ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,

``மத்தியில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கம் மக்களை துன்புறுத்தி வருகிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று மக்களை சித்ரவதை செய்த மோடி அரசு கல்வி, இட ஒதுக்கீடு, விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் என்று எழுபது ஆண்டுகாலமாக காங்கிரஸ் அரசுகள் உருவாக்கிய கட்டுமானங்களை தகர்த்து வருகிறது. பொருளாதாரம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றில் மக்கள் செத்து மடியும் போதும், சொல்லொன்னா துயரங்களை அனுபவிக்கும் போதும் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. கைதட்டுங்கள், விளக்கை போடுங்கள், அணையுங்கள் என்று சொன்னது தவிர, உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.

சஞ்சய் தத்

இதுபோதாதென்று விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்து, விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். இலவச மின்சாரத்தை ரத்து செய்ய சொல்லி மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்திவருகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு குறைந்தபட்சம் ஐயாயிரம் கையெழுத்துகள் பெறப்படும். ஆரோக்ய சேது செயலியை கொரொனாவை தடுப்பதற்காக பதிவிறக்கம் செய்யவேண்டும் என்று மோடி அரசு மக்களை கட்டாயப்படுத்தியது. அப்பொழுதே தலைவர் ராகுல்காந்தி, 'இது சந்தேகத்திற்குரிய செயலி, இதனால் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சமரசம் செய்யப்படும்' என்று எச்சரித்தார். இப்பொழுது அந்த செயலியை யார் உருவாக்கியது என்றே தெரியவில்லை என்று சொல்கிறது அரசு. இந்த அரசா மக்களைக் காப்பாற்றப் போகிறது?.

நாடெங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்கள் கொடும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால், பி.ஜே.பி அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது. ஹத்ராசில் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் உடல், பெற்றோர்களுக்குக் கூட தெரியாமல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடுமைகளைத்தான மோடி அரசின் கீழ் நமது சகோதரிகள் அனுபவித்து வருகிறார்கள். ஒரு அறுபத்தியிரண்டு வயது விதவைப் பெண்ணின் வீட்டின் முன் சென்று சிறுநீர் கழித்து, அவரிடம் அறுவெறுக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட பி.ஜே.பியின் சண்முக சுப்பையாவை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் உறுப்பினராக்கியுள்ளது மத்திய அரசு. இம்மாதிரியான இழி செயல்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தான் பி.ஜே.பியில் பதவியைப் பெற ஒரே தகுதியாக இருக்கிறது. இதைவிட, ஒரு அரசு மோசமாக நடந்துகொள்ளவே முடியாது.

சஞ்சய் தத் பேசியபோது..

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பான வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, கரூரில் நமது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர், மக்கள் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பது, நமக்கெல்லாம் பெருமை. அதேபோல, வருகிற சட்டமன்றத்தேர்தலிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 234 இடங்களையும் வெல்லும். வேலைவாய்ப்பு, கல்வி, இடஒதுக்கீடு என்று தமிழகத்திற்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் பி.ஜே.பிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அடிமையாக இருக்கிறது. தமிழகத்தை அழிக்க நினைக்கும் பி.ஜே.பிக்கு துணை நிற்கிறது" என்றார் அதிரடியாக!.



source https://www.vikatan.com/news/politics/sanjay-dutt-speech-against-central-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக