Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

கடன் தவணை சலுகை விவகாரம்... விவசாயிகளை மட்டும் அரசு கைவிட்டது ஏன்?

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன் தவணை செலுத்த சலுகை பெற்றிருந்தவர்களுக்கு, வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டிருந்தது. 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு, இது ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. யார் யாருக்கு இந்த சலுகை பொருந்தும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதில் விவசாய கடன்கள் விடுபட்டுள்ளன. இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி

கொரோனா ஊரடங்குக் காலத்தில் ஒட்டுமொத்த நாடும் முடங்கிக் கிடந்தது. அனைத்துத் துறைகளும் செயலிழந்து கிடந்ததால், பல்வேறு தரப்பினரும் வங்கிகளில் வாங்கி இருந்த கடன்களுக்குத் தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாதத் தவணை செலுத்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், தவணை செலுத்தாத மாதங்களில் வட்டிக்கு வட்டி விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் கொரோனா ஊரடங்குக் காலத்தில் செலுத்தப்படாத கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்பட மாட்டாது எனவும் 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.

இளங்கீரன்

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள்,

சிறு, குறு தொழில் நிறுவனத்தினர்,

வீட்டுக்கடன்,

வீட்டு உபயோகப் பொருள்கள் கடன்,

வாகன கடன்,

தனிநபர் கடன் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்காகக் கடன் பெற்றவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும். வட்டிக்கு வட்டி விதிப்பிலிருந்து, இவர்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் பயிர்க் கடன், டிராக்டர் கடன் உள்ளிட்ட விவசாய கடன் பெற்றவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

இது குறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தொடு பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், ``கொரோனா ஊரடங்கு காலத்தில், விளைபொருள்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். காய்கறிகள், பழங்கள், பூக்கள், தானியங்கள் உட்பட இன்னும் பல பொருள்கள் அழிவைச் சந்தித்தன. முதலீடு செய்த பணம்கூட திரும்பி வராததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இது ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு நேர்ந்த அவலநிலை.

விவசாய பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்ததால், டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வைத்திருந்த விவசாயிகள் வருமானம் இன்றி தவித்தார்கள். இதனால் விவசாயிகள் கடன் தவணையை செலுத்த முடியாத நிலையில் இருந்தார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் விவசாயிகளுக்குதான் முன்னுரிமை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், இதைப் பற்றியெல்லாம் மத்திய அரசு கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. தொழில் அதிபர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து தரப்பினருக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளை மட்டும் மத்திய அரசு வஞ்சிக்கிறது. ஏன் இந்த ஓரவஞ்சனை? இது கடும் கண்டனத்துக்குரியது. இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

`ஊருக்கு இளிச்சவாய், பிள்ளையார்கோயில் ஆண்டி' என ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. விவசாயிகளை இப்படித்தான் நமது ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.



source https://www.vikatan.com/news/agriculture/farm-loans-not-eligible-for-govts-interest-on-interest-waiver-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக