Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`கை சின்னம்; காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்!’ - பழக்கதோஷத்தில் கோஷமிட்ட பா.ஜ.க எம்.பி. ஜோதிராதித்யா

நவம்பர் 3-ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, தாப்ராவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ``கை சின்ன பட்டனை, அழுத்தி காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்’’ என்று பாஜக எம்.பியான அவர் பழக்கதோஷத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்திது.

மத்தியப் பிரதேசத்தில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், குவாலியர் அரச பரம்பரைக்கென்று தனி லாபி உண்டு. குவாலியர் அரசர் ஜிவோஜிராவ் சிந்தியா, பாரதிய ஜனதாக் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். ஜிவோஜிராவ் சிந்தியா, அவரது மனைவி விஜயராஜே சிந்தியா இருவருக்கும் மாதவராவ் சிந்தியா என்ற மகனும் உஷாராஜே, வசுந்தராஜே, யாசுதோராஜே ஆகிய மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மாதவராவ் சிந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர்., இவரது மகன் ஜோதிராதித்யா சிந்தியாவும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல ஆண்டுகாலமாக அந்தக் கட்சிக்காக உழைத்தவர்.

ஜோதிராதித்யா சிந்தியா

மாதவராவ் சிந்தியாவின் சகோதரிகளும் ஜோதிராதித்யாவின் அத்தைகளுமான வசுந்தராஜேவும் யசோதாராஜேவும் பா.ஜ.க-வின் முக்கிய முகங்கள். ராஜஸ்தான் முதல்வராக வசுந்தராஜேவும், யசோதாராஜே மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனர். ஆனால், ஜோதிராதித்யா, தன் தந்தை வழியையே பின்பற்றினார்.

Also Read: பசுப் பாதுகாவலர்கள் வன்முறைக்கு எதிராகச் சட்டம்! - மத்தியப்பிரதேச காங்கிரஸ் அரசு திட்டம்

1967-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, குவாலியர் ராஜவம்சத்தைச் சேர்ந்த விஜயராஜே சிந்தியா மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார். விஜயராஜேவுக்கு ஆதரவாக 36 எம்.எல்.ஏ-க்களும் கட்சியிலிருந்து வெளியேறிவிட, மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த டி.பி.மிஸ்ராவின் அரசு கவிழ்ந்தது. அப்போது ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த விஜயராஜே சிந்தியாவின் பேரன் ஜோதிராத்திய சிந்தியா, கடந்த மார்ச் மாதம் மத்தியப் பிரதேச ஆட்சியைக் கிடுகிடுக்க வைத்து தன் பாட்டியின் வரலாற்றை மீண்டும் நிகழ்த்தினார். கடும் சவாலுக்கு இடையில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை ஆட்சிப்பீடத்தில் அமர்த்திய ஜோதிராதித்யா, தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியை உடைத்ததோடு ஆட்சிக்கும் ஆப்பு வைத்தார். 22 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த ஜோதிராதித்யா சிந்தியா. பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து ராஜ்யசபா எம்.பி. என்ற அந்தஸ்தை பெற்றார்.

இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் காலியாக இருக்கும் 28 சட்டசபைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 28 தொகுதிகளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கமல்நாத் அரசை கவிழ்த்ததாலும், சில எம்.எல்.ஏக்கள் இறந்ததாலும் தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த சூழலில் மத்திய பிரதேசம் முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

ஜோதிராதித்யா

இந்நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலம் தாப்ரா பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க எம்.பி. ஜோதிராத்திய சிந்தியா, ``கை சின்ன பட்டனை, அழுத்தி காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்" என்று தவறுதலாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கமல்நாத், சிந்தியாவை நாய் என்ற சொல்லியதாகவும், அதற்கு ஜோதிராதித்யா சிந்தியா,``ஆம், நான் நாய்தான், மக்களே என் முதலாளிகள். நான் அவர்களுடைய நாய்" என்று சொல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பில், நாய் என்ற வார்த்தையை சிந்தியாவுக்கு எதிராக கமல்நாத் பயன்படுத்தவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.



source https://www.vikatan.com/news/politics/vote-for-congress-bjp-mp-jyotiraditya-slips-in-election-rally

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக