Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

`200 வீரர்கள்; 100 போலீஸ்; விடுதலைக்கு முன்பே தனி அரசு!’ - பிரான்ஸுக்கு அதிர்ச்சிகொடுத்த புதுச்சேரி

1673 முதல் 1954 வரை 281ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த புதுச்சேரி, 1947-ல் நிகழ்ந்த இந்திய விடுதலைக்குப் பின்பு விழித்துக்கொண்டது. அதற்கு முன்னதாகவே புதுச்சேரியில் விடுதலைக்கான முழக்கங்கள் ஒலிக்கத் துவங்கியிருந்தாலும், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அது பல மடங்கு வீரியமடைந்தது. அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள், மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டங்கள் பிரெஞ்சு - இந்திய அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தது. அதனடிப்படையில் 1949-ம் ஆண்டு,`புதுச்சேரி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதில் பிரெஞ்சு அரசுக்கு சாதகமான முடிவுகள் ஏற்பட்டால், பிரெஞ்சு - இந்தியப் பகுதிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்குகிறோம்’ என்று அறிவித்தது பிரெஞ்சு அரசு. அதேசமயம், `பிரெஞ்சு -இந்தியப் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தால் இந்திய யூனியனுக்குள் அதிகப்படியான தன்னாட்சி உரிமை வழங்கப்படும் என்றும், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு அம்சத்தில் எந்தவித சமரசமும் இருக்காது’ என்றும் உறுதியளித்து காய் நகர்த்தியது இந்திய அரசு.

கேவல் சிங் பியர்லாந்தி ஒப்பந்தம்

விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்ததால், ராணுவத்தைக் கொண்டு அடக்குமுறையை ஏவியது பிரெஞ்சிந்திய அரசு. அதிலிருந்து தப்பிக்க மக்களும், தலைவர்களும் இந்திய எல்லைகளில் (தற்போது விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்) தஞ்சமடையத் துவங்கினர். 1954 மார்ச் மாதம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜவஹர்லால் நேரு, பிரெஞ்சிந்திய அரசில் அங்கம் வகித்து, பின்பு இந்திய அரசின் ஆதரவாளர்களாக மாறிய சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களான எதுவார் குபேர், முத்துப்பிள்ளை, வெங்கடசுப்பா ரெட்டியார், முத்துக்குமரப்ப ரெட்டியார், முத்து வெங்கடபதி, வெங்கடகிருஷ்ணன், இளைய பெருமாள் உள்ளிட்ட 7 பேரையும் சிதம்பரத்தில் சந்தித்தார்.

அப்போது பிரெஞ்சிய விடுதலைக்கான ஆலோசனைகளை வழங்கிய ஜவஹர்லால் நேரு, அதற்கான நிதி மற்றும் பொருளுதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு சிறுவந்தாடு பகுதியில் தங்கியிருந்த அந்தத் தலைவர்கள், நேருவின் ஆலோசனைப்படி விடுதலை அரசை அமைப்பது என்று முடிவெடுத்தனர். அதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 200 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களையும், 100 போலீஸார்களையும் இந்திய அரசின் சார்பில் சிறுவந்தாடு பகுதிக்கு அனுப்பி வைத்தார் நேரு. அவர்களின் துணையுடன் மார்ச் 31-ம் தேதி புதுச்சேரி நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நெட்டப்பாக்கத்தில் விடுதலை அரசை நிறுவினார்கள் சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள்.

புதுச்சேரி அரசு

அத்துடன் அப்பகுதியைச் சுற்றியிருந்த மடுகரை, கரியமாணிக்கம், பண்டசோழநல்லூர், சூரமங்கலம், கீழுர், மண்ணாடிப்பட்டு, திருபுவனை உள்ளிட்ட 60 கிராமங்கள் விடுதலைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டன. புதிய விடுதலை அரசின் நிர்வாகியாக சென்னையின் முன்னாள் ஆட்சித் தலைவர் ஹெச்.பால் (H.S.Paul), பிரெஞ்சு அரசில் நீதிபதியாக இருந்த சிவசுப்பிரமணிய சிவா தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். சென்னை காவல்துறையில் முன்னாள் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ராஜா முகம்மது தலைமை காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விடுதலை பெற்ற பகுதிகளில் 25 பள்ளிகள் உடனே கட்டப்பட்டன.

பிரெஞ்சு ராணுவம் உள்ளே நுழையமுடியாதபடி புதுச்சேரி விடுதலை அரசின் எல்லைகளில் காவல்கள் பலப்படுத்தப்பட்டன. அந்தப் பணியில் 60 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தாமாக இணைந்துகொண்டனர். இந்த அடுத்தடுத்த காட்சிகளால் அதிர்ந்து நின்றது பிரெஞ்சிந்திய அரசு. புதிய விடுதலை அரசுக்குட்பட்ட பகுதிகளில் கல்வி, மருத்துவம், நிதி நிர்வாகம் அனைத்தும் அசுர வேகத்தில் கட்டமைக்கப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய எதுவார் குபேர், விடுதலை அரசாக பிரகடனப்படுத்தினார்.

கீழூர் வாக்குப்பதிவில் தலைவர்கள் அமர்ந்திருக்கும் ஓவியம்

அடுத்தடுத்த தேதிகளில் பாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து புதுச்சேரிக்குள் நுழைவதற்கு பாஸ்போர்ட் முறையைக் கொண்டு வந்தது பிரெஞ்சு அரசு. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக புதுச்சேரி மீது பொருளாதாரத் தடையை விதித்தது இந்திய அரசு. பல்வேறு நெருக்கடிகள் மற்றும் மூலம் மக்களின் தொடர் போராட்டங்களுக்கு அடிபணிந்த பிரான்ஸ், மக்கள் விரும்பினால் இந்தியாவுடன் இணையலாம் என்று இறங்கி வந்தது. அதனடிப்படையில் 1954 அக்டோபர் 18-ம் தேதி கீழூர் என்ற கிராமத்தில் `புதுச்சேரி இந்தியாவுடன் இணைய விருப்பமா’ என்று 178 மக்கள் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பு நடத்தியது.

அதில், இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேர் வாக்களித்த நிலையில், 8 பேர் எதிராக வாக்களித்தனர். அதனடிப்படையில் 1954 அக்டோபர் 21-ம் தேதி பிரெஞ்சு அரசின் சார்பில் பியர்லாந்தியும் (Pierre Landy) இந்திய அரசின் சார்பில் கேவல்சிங்கும் (Kewal Singh) டெல்லியில் இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் புதுச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிரெஞ்ச் காலனி பகுதிகளின் தலைமை ஆணையராகப் பதவியேற்றுக்கொண்ட கேவல்சிங்கிடம், பொறுப்பை ஒப்படைத்தார் பியர்லாந்தி. அன்றைய தினம் காலை 7 மணிக்கு புதுச்சேரியில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற்றினார் கேவல்சிங். அதையடுத்து 1956 மே மாதம் இருநாடுகளுக்கும் கையெழுத்தான விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தம், 16 ஆகஸ்ட் 1962-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Also Read: புதுச்சேரி சுதந்திர நாள் இன்று

அதிலிருந்து ஆகஸ்ட் 16-ம் தேதியே புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நவம்பர் 1-ம் தேதியை விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. அதனடிப்படையில் கடந்த 2014 முதல் நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-of-the-formation-of-the-liberation-government-in-puducherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக