Ad

திங்கள், 2 நவம்பர், 2020

``லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?" - உயர்நீதிமன்ற கிளை

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நெல் கொள்முதல்

இந்த வழக்கு சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது ''நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை நாள் கணக்கில் காக்க வைக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதை நாங்கள் அறிகிறோம். இது பிச்சை எடுப்பதற்கு நிகரானது'' என்று கடுமையாகப் பேசிய நீதிபதிகள் கிருபாகரன்-புகழேந்தி அமர்வு, இது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாதேவி தாக்கல் செய்த அறிக்கையில், ``தமிழகத்தில் 862 கொள்முதல் நிலையங்கள் உள்ளன. கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல். முறைகேடுகளில் ஈடுபடுவதைக் கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 105 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

நெல்

இந்த அறிக்கையில் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த வரியில் ஊழல் செய்பவர்களைக் கண்காணிக்க குழு அமைத்து முறைகேட்டில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

முறைகேடு நடைபெறவில்லை என்றால் 105 அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'இது போன்ற தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும்'' என எச்சரித்தனர். மேலும், ``விவசாயிகள் இரவு பகலாக வேதனைகளை அனுபவித்து விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்தால், வாங்குவதற்கு வக்கில்லாமல் விவசாயிகளிடம் லஞ்சம் என்ற பெயரில் பிச்சை எடுத்து வருகின்றனர்.

லஞ்சம் வாங்குவது சாதாரண விஷயமாகவும் லஞ்சம் வாங்காதவர்களைச் சமூகத்தில் பிழைக்கத் தெரியாதவன் என்றும் கேலி செய்கின்றனர். சமூகத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயைவிடக் கொடிய நோயாகப் பரவிக்கொண்டிருக்கின்றது'' என்று தெரிவித்ததோடு, ''இது போன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?'' என்றும் கேள்வி எழுப்பினர்.

உயர் நீதிமன்றக் கிளை

``நெல் கொள்முதல் நிலையங்கள் முறைகேடு பற்றி தமிழக அரசின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. முறைகேடுகளில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எவ்வளவு பணம் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் சார்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madurai-bench-of-madras-high-court-said-corrupt-officials-should-be-hanged

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக