Ad

திங்கள், 2 நவம்பர், 2020

`நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்!’ - மு.க.ஸ்டாலின்

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் தொடங்குவதற்காக இதில், கடந்த ஜூலை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் பெரும்பாலான மாநிலங்களில் திறக்கப்படவில்லை. ஒரு சில மாநிலங்களில் நவம்பர் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

Also Read: `தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி!' - தமிழக அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்

இந்தநிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை நவம்பர் 16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளைப் பொறுத்தவரை 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும்” என்றும்; அனைத்துக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நவம்பர் 16 முதல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும்; முதலமைச்சர் பழனிசாமி அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவ - மாணவியரின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இது தெரியவில்லை.

ஸ்டாலின்

அறிவிப்பைக் கண்டதிலிருந்து பெற்றோர்கள்- ஆசிரியர்கள் அனைவருமே பள்ளிகள் - கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது, விடுதி மாணவர்களுக்கான தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பை எந்த வகையில் மேற்கொள்வது என்பது குறித்த அச்சத்திலும், பதற்றத்திலும் தவிப்பதைக் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக- ``கொரோனாவின் இரண்டாவது அலை வீசும்” என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்து- இது போன்ற தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் உள்ளாகி அடுத்தடுத்து ஊரடங்கினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில்- தமிழகத்தில் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி பள்ளிகள் - கல்லூரிகளைத் திறக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி எல்லாத் தரப்பிலும் எழுந்திருப்பதை முதலமைச்சர் பழனிசாமி உணராமல் இருப்பது கண்டனத்திற்குரியது’’ என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவருமே, `நவம்பருக்குப் பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வு செய்து, பள்ளிகளைத் திறக்கலாம்’ என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். பத்திரிக்கைகளிலும் அந்தச் செய்திகள் வெளிவருகிறது. உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் ஆய்வறிக்கைகளும் எச்சரிக்கின்றன. இவற்றை எல்லாம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல், ஒதுக்கித் தள்ளிட இயலவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆகவே, மாணவச் செல்வங்களின் உயிர்ப் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முதலமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏதேதோ உள் நோக்கத்துடன், அவசர கதியில் முடிவு எடுக்காமல்- மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, `பெற்றோர்கள்- ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள்’ ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்திட வேண்டும் என்றும்; நவம்பர் 16 - ஆம் தேதி பள்ளிகள் - கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பினை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பினை வெளியிட்டு, மக்கள் மத்தியில் மிகப் பரவலாக ஏற்பட்டிருக்கும் மனப் பதற்றத்தை நீக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/stalin-urges-tn-government-to-postpone-school-college-opening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக