Ad

திங்கள், 2 நவம்பர், 2020

விடிந்தால் கல்யாணம்... விபரீத விளையாட்டில் இறங்குவாளா அபி? #VallamaiTharayo - Episode - 6

ஏராளமான கிஃப்ட்களுடன் அபி வீட்டுக்கு வந்து, எல்லோரின் மனங்களையும் தன்வசப்படுத்திவிடுகிறான் சித்தார்த். குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கும்போது, அபியிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்துச் செல்கிறான்.

சித்தார்த் பற்றி இதுவரை நெகட்டிவ்வாக எதுவும் நாம் பார்க்காததால், நமக்கே அவனைப் பிடித்துவிடுகிறது. அபிக்கும் பிடிக்காமல் இருக்குமா என்ன? சித்தார்த் கேட்கும் எந்தக் கேள்விக்கும் சரியாகப் பதில் சொல்லாத அபி, அவன் அனு என்றதும் படபடவென்று பேசுவதைக் கேட்டு, ஆச்சர்யப்படுகிறான்.

Vallamai Tharayo

சித்தார்த்தை அனு பார்த்துப் பேச விரும்புவதாகச் சொல்கிறாள், அபி. தன் மாமாவுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பார்த்தால், சித்தார்த் என்ன, யாராக இருந்தாலும் அனுவைச் சந்திக்க விரும்புவார்களா, என்ன? தன் தோழி என்பதற்காக அனுவின் செயல் அபிக்குப் பெரிதாகத் தெரியவில்லையோ!

திருமணத்துக்கு முன்பு இப்படிக் கிடைக்கும் அரிய தருணங்கள் பொதுவாக அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும். அபிக்கோ அப்படி அமையவில்லை. காரணம் இருக்கிறது. `அனு நம் திருமணத்துக்கு வரக் கூடாது, அது என் விருப்பம், என் குடும்பத்தினர் விருப்பம், உங்கள் குடும்பத்தினர் விருப்பமும் அதுதான்' என்று சொல்லிவிட்டுச் செல்கிறானே சித்தார்த்.

ஏற்கெனவே திருமணத்தில் ஆர்வம் இல்லாத அபிக்கு, அனு வரக் கூடாது என்பது பெரிய வலியாக இருக்கிறது. அபி இந்த விஷயத்தை அனுவிடம் சொல்ல, தோழிகள் மூவரும் அழுது தீர்க்கிறார்கள். ``இந்தக் கல்யாணத்தை நிறுத்தத்தான் அப்படிப் பேசினேன். இல்லைன்னா இப்படி நடந்திருக்க மாட்டேன். நான் வருவது முக்கியம் இல்ல. ஒரே ஒரு நாள் பார்க்கலைன்னா என்ன? நான் எங்கேயாவது போயிடறேன்” என்று அந்த நாள் வரை அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்த அனு உடைந்து அழும்போது, பாவமாகத்தான் இருக்கிறது.

இதுவரை எதையுமே எதிர்த்துப் பேசாத அபி, `நீ கல்யாணத்துக்கு வர வேண்டும், என்ன நடந்தாலும் தான் பார்த்துக்கொள்கிறேன்' என்று அனுவிடம் சொல்வதை நம்மாலேயே நம்ப முடியவில்லை. அனுவால் எப்படி நம்ப முடியும்!

Vallamai Tharayo

வீட்டில் தனிமையிலிருக்கும் அபியிடம் அண்ணன் சொல்கிறான்... ``உன்னைப் பத்தி யாருக்கும் அக்கறை இல்லை. இதுக்கு மேல பொறுமையா இருக்காதே. ஓடிப் போயிடு” என்று! சின்ன வயதிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கும் அதே பல்லவிதான். அனு என்ன செய்யப்போகிறாளோ தெரியவில்லை. நமக்கோ எந்தவிதத் திட்டமும் இல்லாமல், அண்ணன் அடிக்கடி இப்படிச் சொல்வது நெருடலாக இருக்கிறது!

விடிந்தால் கல்யாணம். என்ன நடக்கப்போகிறது?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா


source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-readers-review-for-episode-6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக