Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

`செம்மரக் கடத்தல் மன்னன் டு ஜவுளி வியாபாரி!’ - கோவையில் சிக்கிய பாஷா பாய்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர், ஆந்திராவைச் சேர்ந்த சர்வதேச செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. சர்வதேச சந்தையில், இந்த செம்மரக் கட்டைகளுக்கு அதிக மவுசு இருப்பதால், செம்மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தி கோடி கணக்கில் பணம் பார்த்துவரும் நெட்வொர்க் இயங்கி வருகின்றன.

செம்மரக் கடத்தல்

Also Read: `ஆந்திர ஐஜி காந்தாராவ் வந்தாலே அதிரடி இருக்கும்!'- செம்மர கும்பலை குறிவைப்பதாக வேலூர் போலீஸ் தகவல்

அதில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் பாஷா பாய் என்றழைக்கப்படும் ஹக்கீம் பாஷா (41). கோவையில் தலைமறைவாகியிருந்த அவரை,கோவை போலீஸார் உதவியுடன், ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் பேசியபோது, ``கடந்த திங்கள்கிழமை கடப்பா மாவட்டத்தில், ஒரு கும்பல் கார்களில் செம்மரக் கட்டைகளை கடத்தி சென்றுள்ளது. வாகன சோதனையில் இருந்து எஸ்கேப் ஆனதால், போலீஸார் அந்த வாகனத்தை சேஸ் செய்து சென்றுள்ளனர். வள்ளூர் என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அந்த கார்கள் ஓர் டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது மோதியதால் தீப்பிடித்து, அது அருகில் இருந்த அந்த கார்களுக்கும் பரவியுள்ளது.

கடப்பா விபத்து

இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 2 பேர் கடப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மூலமாகத்தான் பாஷா கோவையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திராவில் இருந்து வந்த தனிப்படை போலீஸ், கோவை போலீஸ் டீமுடன் இணைந்து அவரை கைது செய்தோம்” என்றனர்.

Also Read: ஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்... செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா ?

குனியமுத்தூர் காவேரி நகரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த பாஷா, நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பாஷாவின் செல்போன் எண் சிக்னலைத் தொடர்ந்து ட்ரேஸ் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பாஷா கோவையில் ஜவுளி வியாபாரியாக இருந்துள்ளார். ஆனால், அது தன் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக, பாஷா போட்டுக் கொண்ட கெட்அப் தானாம். கோவையில் இருந்தபடியே, அவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

செம்மரக் கடத்தல் ஹக்கீம் பாஷா

இங்கிருந்தபடியே, தனது நெட்வொர்க்கை போனில் வழிநடத்தி கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, பாஷாவைக் கைது செய்து, கடப்பாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாகவும் போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/andhra-red-sanders-smuggler-arrested-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக