Ad

சனி, 27 மே, 2023

Great Grand Father: `5,000 ஆண்டுகள் பழைமையான மரம்' ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

மரங்கள் பல ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆனால், காலங்கள் கடந்து 5,000 ஆண்டுகள் வரை ஒரு சைப்ரஸ் வகை மரம் நிலைத்து நிற்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு கிரேட் கிராண்டு ஃபாதர் (Great Grand father) எனப் பெயர் வைத்துள்ளனர். 

தென் அமெரிக்காவின் சிலி சாண்டியாகோவில் உள்ள காட்டில்,  5,000 வருட பழமையான மரம் இருக்கிறது. காலநிலைமாற்றம், பேரழிவுகள் மற்றும் உலக மாற்றங்களைக் கண்ட ஒரு மரம் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

Methuselah

உலகின் மிகவும் பழமையான மரமாகக் கருதப்படும் மெதுசெலா (Methuselah) 4,850 வருடங்களை கண்டுள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இருக்கிறது. இன்றும் இதை அமெரிக்கர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், இம்மரத்தின் சாதனையை முந்தி கிரேட் கிராண்ட்ஃபாதர் மரம் மிகவும் பழமையான மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மரம் 4 மீட்டர் (13 அடி) அளவில் தண்டின் விட்டத்தையும், 28 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு தக்கவாறு இந்த கிரகம் எவ்வாறு தன்னை மாற்றியமைத்துக் கொண்டது போன்ற அறிவியல் பூர்வ தகவல்களை இந்த மரம் வெளிப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 

சமீப காலங்களில், இந்த மரத்தினை குறித்து அறிந்தவர்கள் இந்த காட்டிற்குச் சென்று மரத்தைக் கண்டறிந்து, அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதிகரித்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையால், இம்மரத்திற்குப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

1972-ம் ஆண்டு காட்டில் ரோந்து சென்றபோது இம்மரத்தைப் பூங்காவின் வார்டன் அனிபால் ஹென்ரிக்யூஸ் கண்டுபிடித்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதே காட்டில் குதிரையில் ரோந்து சென்றபோது மாரடைப்பால் இறந்தார். 

அது மிகவும் மதிப்புமிக்கது என்று அவர் அறிந்திருந்ததால், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மரம் எங்கிருக்கிறது என்பதை அறிவிக்க அவர் விரும்பவில்லை என அவரது மகள் நான்சி ஹென்ரிக்யூஸ் கூறியுள்ளார்.

Great Grandfather tree

ஹென்ரிக்யூஸின் மருமகன் ஜொனாதன் பேரிச்சிவிச் அம்மரத்தின் அருகிலேயே விளையாடி வளர்ந்தவர். தற்போது அம்மரத்தை ஆய்வு செய்பவர்களில் இவரும் ஒருவர். 2020-ம் ஆண்டு பேரிச்சிவிச் மற்றும் லாரா ஆகியோர் அம்மரத்தில் இருந்து ட்ரில் செய்து மாதிரியை எடுத்து சோதனை செய்தனர்.

இம்மரம் 2,400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கணித்தனர். சாத்தியமான வகையில் இது 80 சதவிகித மரம் 5,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனவும், விரைவில் ஆய்வு குறித்த முடிவுகள் வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார், பேரிச்சிவிச்.



source https://www.vikatan.com/environment/living-things/5000-year-oldest-tree-named-great-grandfather

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக