Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

மனுநூல் சர்ச்சை: பா.ஜ.க - வி.சி.க தொடர் மோதல்... தேர்தலில் பாதிப்பு யாருக்கு?

மனு தர்ம நூல் குறித்தான சர்ச்சைகளும் அதன் தொடர்ச்சியாக வி.சி.க - பா.ஜ.க தலைவர்களிடையேயான மோதல்களும் தமிழக அரசியலையே அதிரவைத்து வருகிறது. பா.ஜ.க., 'வேல் யாத்திரை' அறிவிப்பை வெளியிட, பதிலடியாக வி.சி.க மனு ஸ்மிருதி குறித்த பிரசாரப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.

திராவிட சித்தாந்தங்களும் பகுத்தறிவு சிந்தனைகளுமாக பழக்கப்பட்டு வந்த தமிழக அரசியல் களம், இன்று ஆன்மிக அரசியலை எதிர்கொள்ளவும் தயாராகிவருகிறது. பெரும்பான்மை பலத்துடன் மத்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க-வுக்குத் தமிழ்நாட்டில் மட்டும் வெற்றிக்கனி என்பது எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

திருமாவளவன்

இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில், 2 இலக்க எண்களில் உறுப்பினர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது தமிழக பா.ஜ.க. இந்திய அளவில், இந்துத்துவா பிரசாரத்தை முன்னிறுத்தி வெற்றிகண்டுள்ள பா.ஜ.க, தமிழக மண்ணிலும் தங்கள் வெற்றியைப் பதிவு செய்ய, இந்துத்துவா கோஷத்தை முன்வைத்து வருகிறது.

அண்மையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இணையவழிக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய போது, `மனு ஸ்மிருதியில் பெண்கள் இழிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர்' என்ற கருத்தைப் பதிவு செய்தார். திருமாவளவனின் இந்தப் பேச்சு, `இந்துப் பெண்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது' என்று சொல்லி, தமிழக பா.ஜ.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து வி.சி.க தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையில் புகார்கள் கொடுக்கப்பட்டு, வழக்குகளும் பதிவாகின. இதைக்கண்டித்து தி.மு.க தரப்பில் அறிக்கை வெளியானது. இதையடுத்து,`திருமாவளவன் பேச்சை தி.மு.க ஆதரிக்கிறதா...' என்று அரசியல் ரீதியான தாக்குதலைத் தொடுத்தது தமிழக பா.ஜ.க. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த மூத்த தலைவர் பழ.கருப்பையா, `மனு ஸ்மிருதி குறித்துப் பேசிய திருமாவளவனுக்கு ஆதரவாக 7 கோடி தமிழர்களும் அரசியல் கட்சிகளும் அணி திரளவேண்டும்' என்று ஆதரவுக் குரல் கொடுத்தார்.

பழ கருப்பையா

ஆனால், வாக்கு வங்கி அரசியலில் கவனம் செலுத்துகிற அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தில் திருமாவளவன் மீதான கைது நடவடிக்கையை மட்டுமே கண்டித்தன. மத ரீதியான கருத்துகளில் ஆதரவு, எதிர்ப்பு என எந்தவொரு நிலையை எடுத்தாலும், அது தேர்தல் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கையே இதற்கான காரணம். அதனால்தான், 'மனுதர்ம நூல் குறித்து திருமாவளவன் தற்போது பேசியிருக்கவேண்டாம்' என்று தி.மு.க கூட்டணியிலுள்ள கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எச்சரிக்கைக் குரல் கொடுத்திருந்தார்.

ஆனாலும் இந்த விவகாரத்தில் வி.சி.க விட்டுக்கொடுப்பதாக இல்லை... தமிழக பா.ஜ.க-வின் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையாக பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் எந்தவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை அரசியல் விமர்சகரான ப்ரியனிடம் கேட்டபோது,

``அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாக்கு வங்கி என்பது, 3% தான். இந்த நிலையில், தங்களுக்கு எதிர் நிலையில் உள்ள தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்துகிற முயற்சியை அரசியல் வியூகமாக செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க மத்தியிலோ மாநிலத்திலோ ஆளுங்கட்சியாக இல்லை. எனவே, அரசியல் ரீதியாக தி.மு.க-வின் செயல்பாடுகளை விமர்சிக்க பா.ஜ.க-வுக்கு வழியில்லை.

ப்ரியன்

எனவே, `இந்துக்களுக்கு எதிரானது தி.மு.க கூட்டணி' என்ற பிம்பத்தை கட்டமைப்பதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை தங்கள் கூட்டணி பக்கம் திருப்பிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் கருப்பர் கூட்டம் வீடியோவில் ஆரம்பித்து மனு தர்ம சர்ச்சை, ஸ்டாலின் திருநீறு பூசவில்லை என்றெல்லாம் விதவிதமான குற்றச்சாட்டுகளையும் தி.மு.க-வுக்கு எதிராக முன்நிறுத்துகின்றனர். மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவரும் தி.மு.கவுக்கு, இதன் மூலம் நெருக்கடி தர முடியும் என்றும் தமிழக பா.ஜ.க எண்ணுகிறது. ஆனால், இது பா.ஜ.க-வுக்கு எதிர்விளைவைத்தான் உண்டுபண்ணும் என்பது என் கணிப்பு.

ஏனெனில், தமிழ்நாட்டில் இந்து மத உணர்வைச் சொல்லி மக்களை ஒன்றுதிரட்டுவது சாத்தியம் இல்லாதது. இங்கே மக்கள் சாதிய ரீதியாகத்தான் பிரிந்து நிற்கின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க-வின் தற்போதைய அரசியல் வியூகம் சாதி வாரியாகவும் வாக்குகளைப் பெற்றுத்தர வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டில், தலித் மக்கள் 3 பிரிவுகளாக இருக்கின்றனர். கோவை மண்டலத்தில் உள்ள அருந்ததியர்கள், மத்திய தமிழ்நாட்டிலுள்ள பறையர்கள், தென் தமிழகத்தில் உள்ள பள்ளர்கள். தொடர்ச்சியாக திருமாவை எதிர்த்துவருவதன் மூலம் அவரது சமூகம் தவிர்த்து ஏனைய தலித்களின் வாக்குகளையும் இடைநிலை சாதியினரின் வாக்குகளையும் பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க நினைக்கலாம்.

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

ஆனால், ஒட்டுமொத்த தலித் மக்களும் திருமாவுக்கு ஆதரவாக திரளக்கூடிய வாய்ப்புதான் ஏற்படும். ஏனெனில், 'சாதி ரீதியிலான பிரிவுகளும் - ஏற்றத்தாழ்வுகளும் அப்படியே தொடரவேண்டும்; இந்து என்ற மத அடிப்படையில் மட்டும் அனைவரும் ஒன்றிணையவேண்டும்' என்று நினைக்கிற கட்சி பா.ஜ.க. இந்த நிலைப்பாட்டை தலித் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? எனவே, அ.தி.மு.க-வுக்கு வருகிற தலித் வாக்குகளுமே பறிபோய்விடும் என்பதுதான் உண்மை.

அடுத்து இடைநிலை சாதிகளும்கூட, தலித்களை ஒடுக்குவதில் ஒற்றுமையாக இருப்பார்களே தவிர, தங்களுடைய ஆதரவை யாருக்கு வழங்குவது என்ற விஷயத்தில் தனித்தனியேதான் முடிவெடுத்து செயல்படுவார்கள். எனவே, இடை நிலை சாதிகளின் வாக்குகளையும்கூட தங்கள் கூட்டணிக்கு பா.ஜ.க பெற்றுத்தந்துவிட முடியும் என்று சொல்லமுடியாது.

வட இந்தியாவில், மதத்தை வைத்து எளிதாக வாக்குகளைக் கவர்ந்துவிடலாம். ஏனெனில், அங்கே இந்து - முஸ்லிம் இடையே எப்போதுமே ஒருவித பகை உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அதை லேசாக விசிறிவிட்டாலே மதம் சார்ந்த வாக்குகளை எளிதாக பெற்றுவிட முடியும். ஆனால், தமிழ்நாட்டில் சூழலே வேறு'' என்கிறார் விளக்கமாக.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கு.க.பாவலன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,``மத்திய பா.ஜ.க அரசு, இந்தியா முழுவதும் அவர்களது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு 'இந்து மத'த்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அரசியல் ரீதியான லாப, நட்டக் கணக்குகளை மனதில் வைத்து பிரச்னைகளைப் பார்க்காமல், கொள்கை ரீதியாக பிரச்னைகளை அணுகுகிற கட்சி வி.சி.க.

கு.க.பாவலன்

மதத்தின் பெயராலும் மனு தர்மத்தின் பெயராலும் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. குழந்தைத் திருமணம் என்ற பெயரில், பிஞ்சுகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதை மனு தர்ம சட்டத்தின் அடிப்படையில் ஆண்டாண்டுகாலமாக செய்து வந்திருக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் இதுகுறித்த புள்ளிவிவரங்கள் வெளியுலகுக்கே தெரியவந்தது. ஆக, இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எங்கள் தலைவர் திருமாவளவன் பேசும்போது, இந்த மனு தர்மக் கொடுமைகள் பற்றியும் பேசித்தானே ஆகவேண்டும். அப்படி பேசியதையும்கூட, இப்போது வெட்டி ஒட்டி தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றி செய்தி பரப்புகின்றனர் பா.ஜ.க-வினர்.

Also Read: வேல் யாத்திரை: அ.தி.மு.க அரசின் அனுமதி மறுப்பு... அரசியல் பின்னணி என்ன?

'திருமாவளவன் சொல்வதுபோல், மனு தர்மத்தில் கூறப்படவில்லை' என்கிறார்கள். சரி... அப்படி என்றால் நீங்கள் உண்மையானது என்று சொல்லக்கூடிய மனு தர்மத்தையே கொண்டுவாருங்களேன் என்றால், 'மனுசாஸ்திரம் இப்போது எங்கே இருக்கிறது... அதைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்...' என்று திசை திருப்புகிறார்கள். நடைமுறையில் மனு தர்மம் இல்லை என்றால், ஏன் மத்திய கலாசார அமைச்சகத்தின் இணையதளப் பக்கத்தில் இப்போதும் மனு தர்மப் பதிப்பை வைத்திருக்கிறார்கள்?

பெரியார்

பா.ஜ.க முன்வைக்கிற இந்து மதக் கோட்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கானதாக மட்டுமே இருக்கிறது. கால மாற்றத்தில் இந்த சமூகத்தினர், தாங்கள் இழந்துவிட்ட அதிகாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சி செய்கின்றனர். அதனால்தான் இங்கே ஆண்டாண்டுகாலமாக அதிகாரம் செய்துவந்த மனு தர்மத்தைப் பற்றி விமர்சித்ததும் கோபப்படுகிறார்கள்... தவறாக பிரசாரம் செய்கின்றனர். இவை வட மாநிலத்தில் வேண்டுமானால் எடுபடலாம். தமிழ்நாட்டில், ஆன்மிக நம்பிக்கை கொண்டோரேகூட தங்களின் மான மீட்பராகத்தான் பெரியாரைப் பார்க்கிறார்கள்.

அதனால்தான், இன்றைக்கு சமூக ஊடகம் வழியே, மனு தர்மம் என்றால் என்ன, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்த விவாதங்களும் காணொலிகளும் இளைய தலைமுறையினரிடையே அதிகளவில் பரிமாறப்பட்டு வருகின்றன. அதனால்தான் இன்றைக்கு கூகுளில், அதிகமாகத் தேடப்பட்ட தலைப்புகளில் 'மனு ஸ்மிருதி' குறிப்பும் வந்திருக்கிறது.

இந்திய கலாசார அமைச்சக இணையதளம்

இந்த விவகாரத்தில், வி.சி.க-வை விடவும் ஏனைய ஜனநாயக சக்திகளான ஊடகத் துறையினர், ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், சைவ சித்தாந்த பேரவையினர் என அனைத்துத் தரப்பினரும் திருமாவளவன் பேச்சு குறித்த நியாயத்தையும், மனு தர்மத்தின் உண்மையையும் மக்களிடையே தெளிவாக விளக்கியுள்ளனர். எனவே, தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றெண்ணி, பா.ஜ.க எடுத்த ஆயுதம் இப்போதே அவர்களுக்கு பாதகமாகத்தான் முடிந்திருக்கிறது. எனவே, வருகிற தேர்தலில் இதுகுறித்து அவர்கள் பேசவேமாட்டார்கள்... பேசினாலும் அது அவர்களுக்குத்தான் பாதிப்பை உண்டுபண்ணும்'' என்கிறார் தெளிவாக.

Also Read: `என் அன்பு என்னவென்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும்!’ - கமல்ஹாசன்

தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மனு தர்ம நூல் குறித்தான சர்ச்சைகள் பற்றிப் பேசும்போது, ''காலம்காலமாக இங்கே இந்துக்கள் வாழ்ந்துவருகின்றனர். ராணி மங்கம்மாள், ஜான்சி ராணி, சித்தூர் பத்மினி ஆகிய வீரப் பெண்மணிகள் இங்கே அரசாட்சியே செய்திருக்கிறார்கள். ஆக எல்லோருக்குமே இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது என்பதுதான் வரலாற்று உண்மை.

ஆனால், மனு தர்மத்தின் ஒரு சில பக்கங்களில் உள்ள வரிகளை மட்டும் எடுத்துக்கொள்வதும், அது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது என்றும், வருங்காலத்தில் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் ஒரு பயத்தை உருவாக்குகிற இந்த வீரதீர தலைவர்கள், முத்தலாக் தடைச் சட்டம் வந்தபோது ஏன் அதன் பக்கம் நிற்கவில்லை?

சி.பி.ராதாகிருஷ்ணன்

எல்லா மதங்களிலுமே குறை, நிறை உண்டு. ஒருகாலத்தில், சரியென்று கருதி பின்பற்றப்பட்டு வந்த பழக்கம் காலவோட்டத்தில் மூழ்கடிக்கப்பட்டு, புதிய சிந்தனைகள் உருவாவதும் தவிர்க்க முடியாதது. இந்த பரிணாம வளர்ச்சியையும் நல்ல சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்கிற தன்மையும் இந்து மதத்துக்கு எப்போதுமே உண்டு.

இந்து மதத்தில் மட்டும்தான், மாற்றுக் கருத்துகள் பற்றியும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. பெண் விடுதலை குறித்து இப்போது பேசுகிற தலைவர்கள் மற்ற மதங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு முன்வருவார்களா?

பொதுவாகவே தமிழகத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைவர்களின் அரசியல் லாபநோக்கை மக்களுமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, தி.மு.க கூட்டணிக்கு இது மிகப்பெரிய பாதிப்பை இந்துக்கள் மத்தியில் உருவாக்கும்!'' என்கிறார் அழுத்தமாக.



source https://www.vikatan.com/news/politics/manusmriti-controversy-bjp-vck-clash-who-will-be-affected-in-the-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக