Ad

வியாழன், 26 நவம்பர், 2020

நிவர் புயல் அச்சத்தில் தென்னை குருத்தோலைகளை வெட்டிய விவசாயிகள்... அதிர்ச்சியில் வேளாண்துறை!

கடந்த 2018-ல் அடித்த கஜா புயல், டெல்டா மாவட்டங்களையே மதம் பிடித்த யானையாகச் சிதைத்துப் போட்டுவிட்டுப்போனது. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னைமரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால், லட்சக்கணக்கான மரங்களின் தலைப்பகுதி துண்டானது. இந்நிலையில் ஆரம்பத்தில் நிவர் புயல் டெல்டா மாவட்டங்களில் கரையைக் கடக்குமென்று வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டதால், விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, கஜா புயலைப்போன்று நிவர் புயலால் தென்னை விவசாயிகள் மரங்களை இழந்து தவிக்கக்கூடாது என்பதற்காக, வேளாண்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது.

கஜாவால் சாய்ந்த தென்னைமரங்கள்

நன்கு வளர்ந்த நிலையில் உள்ள இளநீர், முற்றிய காய்களை அறுவடை செய்து, பழுத்த மட்டைகளை அகற்றவேண்டும் என்பது உள்ளிட்ட சில ஆலோசனைகளை வழங்கினர். ஆனால், புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் மரத்தில் உள்ள காய்களை அகற்றாமல், மரம் முழுவதும் உள்ள ஓலைகளை மட்டும் அகற்றியுள்ளனர். சில விவசாயிகள் குருத்தோலைகளையும் வெட்டி அகற்றி வேளாண்துறைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றனர். இதனால், அவை மீண்டும் வளருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி புதுக்கோட்டை வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பெரியசாமி கூறும்போது, "மரத்தின் மேலே ரொம்ப வெயிட் இருக்கக்கூடாது என்பதைத் தான் நம்ம வலியுறுத்தினோம். முற்றிப்போன காயை வெட்டிப்போடுங்கள், பழுத்த மட்டைகளை அகற்றிவிடுங்கள், காய்ந்து போன பாலை மட்டைகளைச் சுத்தம் செய்துவிடுங்கள், இதன் மூலம் மேலே உள்ள வெயிட் குறையும். இதன் மூலம் மரம் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் குறையும். தென்னைமரத்தைப் பொறுத்தவரை மாசத்துக்கு ஒரு குருத்து தான் வரும்.

குருத்தோலைகள் வெட்டப்பட்டு நிற்கும் தென்னை மரங்கள்

குருத்து எல்லாம் வெட்டுங்கள், பச்சை மட்டையை வெட்டுங்கள் என்று வேளாண்மைத்துறை சார்பில் அறிவுறுத்தவில்லை. காய்ந்த மட்டைகள், முற்றிய தென்னங்காய்களை அகற்றுங்கள் என்று தான் சொல்லியிருந்தோம். குருத்துகளை எல்லாம் அகற்றியது எங்களுக்கே அதிர்ச்சி தான். விவசாயிகள் அனைவரும் வீட்டைச் சுற்றிலும் இருந்த தென்னமரங்களில் மட்டுமே வெட்டிவிட்டுள்ளனர் வேளாண்துறை அதிகாரிகள் தொடர்ந்து விவசாயிகளிடம் தேவையான ஆலோசனைகளைக் கூறி வருகின்றனர்" என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/pudukkottai-farmers-removed-leaves-of-coconut-trees-as-a-precaution-of-cyclone-nivar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக