Ad

திங்கள், 2 நவம்பர், 2020

ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய ஜி.எஸ்.டி வசூல்... இந்திய பொருளாதாரம் மீள்கிறதா?

2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ம் தேதி, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மத்திய மோடி அரசால் அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மத்திய அரசாங்கம் கொடுத்த சில வாக்குறுதிகளுக்குப் பிறகு ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது.

இந்த வரி விதிப்பு முறைக்குக் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், இந்த இலக்கை அடைவது ஒவ்வொரு மாதமும் பெரும் சிரமமாகவே இருந்துவந்தது. கொரோனா நோய் தொற்றினால், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஏழு மாதங்களில் ஜி.எஸ்.டி வரி வசூல் மேலும் பாதிப்பைச் சந்தித்தது.

Also Read: ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை விவகாரம்... மாநிலங்கள் மீதே சுமையை ஏற்றுகிறதா மத்திய அரசு?

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மைனஸ் 14% மற்றும் மைனஸ் 8 சதவிகிதமாக வரி வருவாய் சரிவடைந்தது. செப்டம்பரில் சற்றே முன்னேறி, 5 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், அக்டோபர் மாத வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த எட்டு மாதங்களில் முதல்முறையாக ஜி.எஸ்.டி வரி வருவாய் அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. அதாவது, கடந்த 2019-ம் ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 10% அதிகரித்து, கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,05,155 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.95,379 கோடி ஜிஎஸ்டி வரிவருவாய் வசூலாகி இருந்தது.

இதில் மத்திய ஜி.எஸ்.டி வரியாக ரூ.19,193 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.17,741 கோடி ரூபாயாக இருந்தது. மாநில ஜி.எஸ்.டி வரியாக ரூ.25,411 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.23,131 கோடி ரூபாயாக இருந்தது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியாக ரூ52,540 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.47,484 கோடி வசூலாகியுள்ளது. மேலும், செஸ் ரூ.8,011 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.7,124 கோடி ரூபாயாக இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ரூ.32,172 கோடியும் மே மாதத்தில் ரூ.62,151 கோடியும் ஜூன் மாதத்தில் ரூ.90,917 கோடியும் ஜூலை மாதத்தில் ரூ.87,422 கோடியும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.86,449 கோடியும் மட்டுமே வசூல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, ஜி.எஸ்.டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தொட்டிருப்பது இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதைச் சுட்டிக்காட்டுகிறது எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/business/news/october-gst-collection-crosses-rs-1-lakh-crore-mark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக