உலகமே எதிர்பார்த்த ஒரு தேர்தல் திருவிழாவாக அமைந்தது அமெரிக்க அதிபர் தேர்தல். அமெரிக்க அதிபர் பதவிக்காக இம்முறை குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் களம்கண்டனர்.
கடந்த ஆட்சியில் ட்ரம்ப் தனது வலதுசாரிய கொள்கைகளாலும், எல்லை மீறிய சில செயல்களாலும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்ப்தியை சம்பாதித்திருந்தார். அதுபோக இந்தாண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலில் அமெரிக்கா முழுவதும் பெரும் பாதிப்புகள் நேரிடவே, அது ட்ரம்ப் குறித்து மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த வெறுப்பில் மேலும் உரம் தூவியது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி பல எதிர்பார்ப்புகளுடன் நிகழ்ந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் தொடக்கம் முதல் முன்னிலை வகித்து வந்த ஜோ பைடன், இறுதியில் அதிபர் போட்டியின் முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவை ஜோ பைடன் கைப்பற்றி , மொத்தம் 284 வாக்குகள் பெற்று ட்ரம்ப் ஆட்சியை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
ட்ரம்ப் சம்பாதித்திருந்த அதிருப்தியின் விளைவாக கடந்த 30 ஆண்டுகளில் ஒரேவொரு முறை அதிபராக இருந்தவர்களின் வரிசையில் அவரும் இணைந்துள்ளார்.
ட்ரம்ப் ஆட்சியானது முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் அவர் ஏற்படுத்தும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுப்பறி நிலை நீடித்ததால் வாக்கு எண்ணிக்கையின் போதே தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாக குற்றம்சாட்டினார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரித்தன.
இறுதியில், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. நாடே விழாக்கோலம் பூண்டது. ஆனால், ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். ஏன்?
தேர்தல் முடிவுகளில் ஏன் இந்த தாமதம்?
தேர்தலின் போது மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதில்லை வாக்குச்சீட்டின் மூலம் தான் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் பொதுவாகவே வாக்கு எண்ணிக்கையில் தொய்வு ஏற்படும். அதுபோக, இ-ஓட்டு, பேக்ஸ், இ-மெயில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் 50 மாகாணங்களும் தேர்தல் நடத்துவதிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மாறுபட்ட விதிமுறைகளை வைத்திருக்கின்றன. வாக்கு எண்ணிக்கையை முடிக்க வேண்டிய காலக்கெடுவை நிர்ணயிப்பதில் மட்டுமே அங்கே பொதுவான சட்டமாக நடைமுறையில் உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த மாதம் டிசம்பர் 8-ம் தேதிவரை ஓட்டு எண்ணிக்கையை தொடர முடியும் என்று கூறப்படுகிறது.
இத்தேர்தலில் குறிப்பாக 22 மாகாணங்கள் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் நவம்பர் 3-ம் தேதிக்கு பின்னரும் தபால் வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் நவம்பர் 3-ம் தேதிக்கு முன்னர் அனுப்பியதற்கான அஞ்சல் முத்திரை இருக்க வேண்டும்.
அதேசமயம், ஒரு சில நகரங்களில் தபால் வாக்கு எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்படும் இந்திரங்கள் அகற்றப்பட்டதாகவும், பல இடங்களில் தபால் பெட்டிகளே அகற்றப்பட்டு விட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது!
இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தலுக்கு முன்பாகவே இல்லாத வகையில், பத்து கோடிக்கும் அதிகமானோர் பலர் தங்கள் வாக்குகளை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றைக் காரணமாகக் கொண்டே தேர்தல் முழுமையாக முடிவடைவதற்கு இன்னும் நிறைய காலம் இருப்பதாகவும், ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக அவரது ஆதரவு ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிப்பதாவும் ட்ரம்ப் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தை நாடி பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வெற்றியாளர் யார் என்பதை மக்களுக்கு தெரியபடுத்தவுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
கோல்ப் விளையாடிய ட்ரம்ப்!
கடந்த சனிக்கிழமையன்று (07.11.2020) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபொழுது உலகமே அமெரிக்காவை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்க ட்ரம்ப் “மேக் அமெரிக்கா கிரேட் அகேய்ன் (Make America Great Again)” என்ற வாசகத்துடன் கூடிய தொப்பியை அணிந்துகொண்டு ‘கோல்ப் (Golf)’ விளையாடிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அந்நாட்டில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அந்நாட்டு செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் பொருளாதாரமானது உயர்ந்தாலும், அவரின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதுவே ட்ரம்ப் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உருவாக ஓரு முக்கியக் காரணமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப்- மெலனியா விவாகரத்து?
அதேபோல் ட்ரம்ப் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறிய பிறகு அவரது மூன்றாவது மனைவியான மெலனியா அவரை விவாகரத்து செய்யவுள்ளதாக ட்ரம்ப்பின் முன்னாள் உதவியாளர் கூறியுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தல் முடிவுகளால் இந்தியாவிற்கு என்ன பயன்?
தேர்தலுக்கு முந்தைய விவாதங்களின் போதே இரு தரப்பு வேட்பாளர்களின் பார்வையும் அமெரிக்கவாழ் இந்தியர்களின் மீதும் அவர்கள் வாக்குகளின் முக்கியதுவத்தினை சார்ந்தே இருந்தது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் ஜோ பைடனுக்கே ஆதரவு தெரிவித்தனர்.
அதுபோலவே தற்போது ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதால், இந்தியாவிற்கு உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நேற்று ஜனநாயக கட்சியினர் சமர்பித்துள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் வரலாறு காணாத இந்த வெற்றிக்கு இந்தியாவிலும் பெரும் ஆதரவு நிலவுவதால் இனி நிகழும் மாற்றங்களுக்கும், ட்ரம்ப் முன்மொழியும் சர்ச்சைக் கருத்துக்களுக்கும் காலத்திடம் தான் விடை உள்ளது!
source https://www.vikatan.com/government-and-politics/international/us-election-donald-trump-controversies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக