கை நிறைய பாப்கார்னுடன் காட்சி தந்தார் கமல். "சினிமா தியேட்டர் திறந்துட்டாங்களா’ன்னு ஒருத்தர் இங்க கேட்டார். இந்த நிகழ்ச்சியே நவரசங்களும் நிறைந்த சினிமா மாதிரிதானே இருக்கு... ஆனா இதுல பூடகமா ஒரு அரசியலும் இருக்குல்ல. அரசியல்னா பேச மேடை வேணும்... எனக்கு யானைப்பசி" என்றபடி கையில் இருந்த சோளப்பொறியுடன் மேடைக்குள் நுழைந்தார். (ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையே?!).
பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழும் அரசியல்களை கோடு காட்டிய பின் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்குள் இட்டுச் சென்றார் கமல்.
இதில் பெரிதாக ஒன்றுமில்லை. நிஷாவிற்கும் ரமேஷிற்கும் இடையில் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டு மீண்டும் ‘ஸாரி’ சொல்லிக் கொண்டார்கள். ரமேஷைப் பற்றி பேசும் போது அல்லது ரமேஷ் பேசும் போதெல்லாம் நிஷாவின் கண்களில் நட்பின் உண்மையான பிரகாசம் தொடர்ந்து தெரிவதைக் கவனிக்கலாம். ஆனால் வெள்ளந்தியாக ஏதாவது செய்து விட்டு மாட்டிக் கொள்கிறார்.
ரமேஷூம் இயல்பாகத்தான் பழகுகிறார். ஆனால் சமயங்களில் ஆணாதிக்க உணர்வு, தன்னுடைய ஸ்டேட்டஸ் போன்றவை மனத்தடையாக அவருக்கு குறுக்கே வந்து விடுகிறதோ என்னமோ?!
பேச்சு வாக்கில் எதையோ சொல்லிக் கொண்டே ரமேஷை காலால் எத்தி விட்டார் நிஷா. ரமேஷிடம் மெளனக் கோபம் வெளிப்பட்டது. இடத்தை விட்டு அகன்று விட்டார். நிஷா வழக்கம் போல் குற்றவுணர்ச்சிக்குள் ஆழந்துவிட, ஒரு நல்ல தம்பியாக நிஷாவிற்கு அறிவுரை கூறி இயல்பு நிலையை மீட்டெடுத்தார் ரியோ. ரமேஷின் அடக்கி வைக்கப்பட்ட கோபம் என்றாவது ஒரு நாள் உக்கிரமாக வெளிப்படலாம். நிஷா எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அடுத்த விவகாரம் சோம் சாக்லேட்டை ஒளித்து வைத்தது. "இந்தப் பையனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்” என்கிற மாதிரி ரம்யாவிற்குத் தருவதற்காக சோம் சாக்லேட்டை மறைத்து வைத்திருந்தார் போல. அதை வைத்து அர்ச்சனா குழு அவரை பயங்கரமாக கலாய்த்துக் கொண்டிருந்தது. “அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா” என்று மறுத்துக் கொண்டிருந்தார் சோம். (பாலா – ஷிவானி வரிசையில் இன்னொன்று உருவாகுமோ?!)
மேடைக்கு வந்த கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி பேசினார். கூலிக்கு மாரடிக்கும் விமர்சனங்கள், புரிதல் இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படும் விமர்சனங்கள், நம்மை மேம்படுத்தும் விமர்சனங்கள் என்று மூன்று வகையாக பிரித்தார்.
இந்தக் கட்டுரைத் தொடர் எத்தகையது என்பதை நண்பர்கள் உணர்ந்திருக்கக்கூடும். இதில் வெளிப்படும் கிண்டல்களைத் தாண்டி இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் அணுக வேண்டிய முறை பற்றி சீஸன் ஒன்று முதலே தொடர்ச்சியாக நான் எழுதி வருகிறேன்.
பிக்பாஸ் என்பது அடிப்படையில் வணிக நோக்கத்தைக் கொண்டது, சிலரின் அந்தரங்கங்களை காட்சிப்படுத்துவது - இப்படியாக பல விமர்சனங்கள் இருந்தாலும் மனித நடத்தையை நெருக்கமாக கவனிக்கக்கூடிய வாய்ப்பை இந்த நிகழ்ச்சி தருகிறது. இதில் வெளிப்படும் எதிர்மறையான குணாதிசயங்களை நமக்குள்ளும் பொருத்திப் பார்த்து சுயபரிசீலனையை மேற்கொள்ளலாம். அந்த வகையில் ஓர் அகக்கண்ணாடியாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது.
ஒரு பிரச்னையில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் கோணங்களையும் பார்க்கும் வாய்ப்பு நடைமுறையில் நமக்கு கிடைக்கவே கிடைக்காது.
இதில் வரும் மனிதர்களின் பிழை, சறுக்கல், தவறு போன்றவற்றை நாம் ஆங்காரமாக குத்திக் காட்டி விட்டு, சமூகவலைத்தளங்களில் வம்பு பேசி விட்டு, அதன் பின் நமது இருண்மைகளை செளகரியமாக ஒளித்து வைத்துக் கொள்வதைப் போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை. இதில் வரும் மனிதர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை. நாம்தான் அவர்கள். அவர்கள்தான் நாம்.
அடுத்ததாக, பிக்பாஸ் என்பது ஒரு scripted நிகழ்ச்சி என்பதை சிலர் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அபத்தமான புரிதல். இது பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம். சில மனிதர்களை நெருக்கடிக்குள் தள்ளி அப்போது தன்னிச்சையாக உருவாகும் பிரச்னைகளையும் அசலான மனித உணர்வுகளின் மோதல்களையும் காட்சிப்படுத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் அடிப்படையான நோக்கமே! அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் பிரமாண்டமான வெற்றியின் ஆதாரமான விஷயம்.
அவர்களுக்கு அனைத்து செளகரியங்களையும் செய்துவிட்டால் எப்படி நெருக்கடிகள் உருவாகும்? ‘ஓகே... ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ என்று சொல்லி விட்டால் இத்தனை அசலான நடிப்பை வெளிக்கொணர முடியுமா? இந்த அடிப்படையான விஷயத்தை புரிந்து கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்கள் நகைப்பைத்தான் தருகின்றன.
**
அகம் டிவி வழியாக வந்த கமல்... "இந்த நிகழ்ச்சி scripted-ன்னு சிலர் வெளிய பேசிக்கறதைப் பத்திதான் சொல்லிட்டு இருந்தேன்... ஓகே. ஆனால் அதைத்தாண்டி உங்களுக்கு ‘தரப்பட்ட’ பாத்திரங்களில் சிறப்பாக நடித்தீர்கள். முதலில் மங்களகரமாக ‘சுமங்கலி’ பிரச்னையில் இருந்து ஆரம்பிப்போம். அனிதாவின் பேச்சு பற்றி பெண் போட்டியாளர்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று பஞ்சாயத்தை தொடங்கினார்.
அர்ச்சனா, நிஷா ஆகிய இருவர் மட்டும் அழுத்தமான ஆட்சேபத்தைத் தெரிவிக்க மற்ற மூவரும் ‘ஓகே... அது சரியான கருத்துதான்’ என்றனர். ஷிவானியின் ஆதரவு அழுத்தமாக இருந்தது. ஏற்கெனவே இங்கு சொன்னதுதான். முந்தையை தலைமுறையை விடவும் இளைய தலைமுறை பழைமைவாதத்தை வேகமாக உதறி முன்னேறுகிறது.
சம்பந்தப்பட்ட சாட்சியே இப்போது கூண்டில் ஏறினார். அனிதா பேச வந்தார். “நான் சொன்ன கருத்துல இப்பவும் உறுதியாத்தான் இருக்கேன். சுரேஷின் பெயரை திட்டமிட்டு இழுக்கலை. இங்கு நடந்த ஒரு சிறிய சம்பவத்தை உதாரணமா எடுத்துக்கணும்னு தோணுச்சு. அது தற்செயல்” என்று விளக்கம் அளிக்க ஆரம்பிக்க...
'நீங்க பண்ண காரியத்துக்கு ஒண்ணு போடணும் போல இருந்தது' என்பது போல் ஒற்றைக்கையை பாவனையாக தூக்கிய கமல், "இரு கைகளையும் தட்டி பாராட்டறேன்” என்று பாராட்டியபோது பாரத ரத்னா வாங்கியது போன்ற நெகிழ்ச்சியை அடைந்தார் அனிதா.
“பெரியார் இருந்தா உங்களைப் பாராட்டியிருப்பார். தன்னையே முன்உதாரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டது நல்ல விஷயம்" என்றெல்லாம் அனிதாவிற்கு புகழ்மாலைகளை சூட இந்தப் பேச்சை ஆட்சேபித்தவர்களின் முகம் தொங்கிப் போனது.
அனிதா பேசிய ‘முற்போக்கான’ விஷயம் பாராட்டப்பட வேண்டியது என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தேயில்லை. ‘மங்கள நாள்’ என்பதைக்கூட விடுங்கள். ஆனால், ‘கைத்தட்டு வாங்க வேண்டும்' என்று நினைத்தாரோ... அல்லது உண்மையான உணர்ச்சிப்பெருக்கில் சொன்னாரோ, ‘நான் அப்படியாகி இருந்தால்’ என்று அனிதா சொன்ன கருத்தில் அவர் மட்டும் சம்பந்தப்படவில்லை. இன்னொரு தனிநபரும் –அவரது கணவரும் - அவரது குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகளை, உணர்வுகளைக் கொன்று விட்டுத்தான் முற்போக்கு விஷயங்களைப் பேச வேண்டுமென்கிற கட்டாயமில்லை. கமல் பெரியாரை மேற்கோள் காட்டியதால் அதிலிருந்தே ஓர் உதாரணத்தை எடுப்போம்.
பெரியார் மரியாதை நிமித்தமாக குன்றக்குடி அடிகளாரை ஒருமுறை சந்தித்தபோது அடிகளார் அன்புடன் விபூதியை பெரியாரின் நெற்றியில் பூசினார். பெரியார் எத்தனை பெரிய பகுத்தறிவுவாதி என்பது நமக்குத் தெரியும். ஆனால் பெரியார் விபூதியை அழிக்கவில்லை. இது பற்றி யாரோ அவரிடம் பிறகு கேட்டபோது, "ஒருவர் அன்புடன் ஒரு செயலைச் செய்ய முன்வரும் போது நான் முகத்தை திருப்பிக் கொண்டால் அவரை அவமதித்தது போல் ஆகாதா?” என்று பதில் அளித்தார்.
முற்போக்கான விஷயங்களை கடுமையான முறையில் ஒரு சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும் அதே சமயத்தில் ஒரு தனிநபரின் உணர்வுகள் காயப்பட்டு விடக்கூடாது என்பதிலும் பெரியார் கவனமாக இருந்திருக்கிறார். இது மட்டுமே அனிதாவின் பேச்சில் தெரிந்த சிறு நெருடல். “இல்லை... அனிதா அப்படிப் பேசியதில் எங்களுக்கு முழு உடன்பாடே" என்று அனிதாவின் கணவர் குடும்பம் உண்மையாகவே கருதுமாயின் பிரச்னை ஏதுமில்லை.
“என்னுடைய அம்மாவும் ஒரு கைம்பெண்தான். அதனால் அந்த வலி எனக்குத் தெரியும்” என்று சுரேஷ் விளக்கம் அளிக்க, “ஓகே. நீங்க கேரக்டர்ல இருந்ததால... அப்படி பண்ணீட்டீங்க இல்லையா?” என்று கமலே எடுத்துக் கொடுக்க சட்டென்று அதைப் பிடித்துக் கொண்டார் சுரேஷ்.
கிராமம் சார்ந்த அணியில் சுரேஷ் இருந்திருந்தாலும் அந்தச் சமயத்தில் சொன்னது கேரக்டர் பேசிய வார்த்தையாக தெரியவில்லை. ‘தான் ஒரு பழைமைவாதி அல்ல’ என்பதை நிரூபணம் செய்வதற்காகப் போராடினார் சுரேஷ்.
‘தனக்கு கிடைக்காத விஷயத்திற்காக கடவுளுடன் சண்டை போட்டு நாத்திகவாதத்திற்குள் தற்காலிகமாக வருவது வேறு’ – ‘எது இருக்கு... எது இல்லை’ என்று பகுத்து ஆய்வது என்பது வேறு என்று சிறிய பொழிப்புரையை கமல் நிகழ்த்தியது சிறப்பு. “நாத்திகவாதி-ன்ற பெயரே ஆத்திகவாதிகள் கொடுத்ததுதானே... அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்கிற அவரின் ஸ்டேட்மென்ட் ஆய்வு செய்யப்பட வேண்டியதொன்று.
‘ஒரு முற்போக்கான கருத்தைச் சொல்லிவிட்டு அது சார்ந்த குற்றவுணர்வுடன் கலங்கிக் கொண்டிருந்த அனிதா’வை, “ரொம்ப சந்தோஷப்படாதீங்க... நீங்க சொன்ன கருத்துல உறுதியா இருந்தா ஏன் கலங்கணும்? பாத்ரூம்ல அழுததுதான் தவறான விஷயம்" என்று போகிற போக்கில் அனிதாவை தட்டினார் கமல். (கமலைப் பார்த்து கத்துக்கங்க அனிதா... அவர் பேச்சிலும் தவறுகள் இருக்கலாம். இருந்தாலும் எத்தனை அழுத்தம் திருத்தமாக, உறுதியாக பேசுகிறார்!)
**
ஓர் இடைவேளைக்குப் பின் மேடைக்குத் திரும்பிய கமல், தான் அணிந்திருக்கும் ஆடை மேற்கத்திய பாணியில் இருந்தாலும் கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த துணியில் செய்யப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சாயம் உபயோகப்படுத்தியது’ என்று ‘மெசேஜ்' சொன்னார். (என்னடா.. டிரெஸ் ஒரு மார்க்கமா இருக்கேன்னு மொதல்ல இருந்தே யோசிச்சிட்டு இருந்தேன்).
அடுத்ததாக ‘பாலாஜி’ உறங்கி எழுந்து சண்டையிட்ட விவகாரத்திற்குள் வந்தார் கமல். அன்றைக்கு ஆவேசமாக சண்டையிட்ட பாலாஜி, இன்று ‘பச்சைப்புள்ள’ போல முகத்தை வைத்துக் கொண்டு தன் தரப்பு நியாயங்களையெல்லாம் விளக்கமாக சொன்னார். (பாலாஜி பேசியபோது ரியோ தந்த எக்ஸ்பிரஷன்களையெல்லாம் வைத்து தனியாக ஒரு ‘குறும்படமே’ உருவாக்கலாம்).
"நேர்மைக்கும் ஆணவத்திற்கும் இடையில் மெல்லிய கோடுதான் இருக்கிறது. ஆனால் நிறைய வித்தியாசம் இருக்கிறது" என்று கமல் சொன்னது ஒருபக்கம் சரியானதாகத் தெரிந்தாலும் "அன்பு எப்படி கிடைச்சாலும் அதை வாங்கிப் போட்டுக்கங்க... அது உத்தியாகவே இருந்தாலும்" என்று இன்னொரு பக்கம் சொன்ன உபதேசம் ஏற்புடையதல்ல.
ஏனெனில் போலித்தனமாக காட்டப்படுகிற அன்பு என்பது எப்போதும் ஆபத்தானது. அதன் பின்னால் ஒளிந்திருக்கும் கத்தி எப்போது வேண்டுமானாலும் பாயலாம். அர்ச்சனாவையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். சபையில் பேசும் போது ‘அன்னை தெரசா’ மாதிரியே முகத்தை வைத்துக் கொள்கிற அர்ச்சனா, தனது குழுவுடன் தனிமையில் பேசும் போது அசலான முகம் வெளியே வருவதைக் கவனிக்கலாம்.
“உங்க டீமிற்கு சார்பா பேசும் போது... இதற்கு அப்புறம் உங்கள் கதி... அதாவது உங்கள் நிலைப்பாடு...” என்று வார்த்தைகளில் பொடி கலந்து ரியோவை வாரத் துவங்கினார் கமல். அவர் குத்திக் காட்டுவது ரியோவிற்குப் புரிந்து விட்டது. “அவங்க திடீர்னு ஒண்ணு சேர்ந்தது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஏன்னா சண்டையும் வார்த்தைகளும் அத்தனை உக்கிரமாக இருந்தது. அவங்க இணைஞ்சது ஓகே... ஆனா எனக்கு டைம் வேணும்னு ஒதுங்கிட்டேன்" என்று ரியோ சொன்ன பதில் நேர்மையானது.
“ரொம்ப சீரியஸா போயிட்டோம். சரி... காமெடி டிராக்கிற்கு வருவோம்" என்று வேல்முருகனை பிறகு கமல் ஊறுகாயாக பயன்படுத்திக் கொண்டது அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை. ‘அடிச்சிடுவாரோன்னு பயமா இருக்கு’ என்று வேல்முருகன் சிரித்துக் கொண்டே சொன்னாலும் அவர் மீது அனுதாபம்தான் தோன்றியது. கமலும் இதைப் பற்றி எதுவும் சொல்லாதது முறையற்ற விஷயம்.
‘அன்பு ஒரு ஸ்ட்ராட்டஜியாக இருந்தாலும்’ என்கிற கமலின் கமென்ட் நிச்சயம் அர்ச்சனாவை நோக்கி எய்யப்பட்ட அம்பு. அந்த கமென்ட் தனக்கு நெருடலாக இருந்ததை அர்ச்சனா பிறகு ரியோவிடம் சொல்ல, "இல்ல... பாலாஜி அப்படி எங்கயோ பேசியிருக்கான் போல" என்று (தவறாக) விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் ரியோ.
**
அகம் டிவியாக உள்ளே வந்தார் கமல். (‘உள்ளே போகலாமா?’ என்று டிஜிட்டல் பார்வையாளர்களிடம் ஒவ்வொரு முறையும் கமல் அனுமதி கேட்கிறாரே... ‘போகாதீங்க... என்று ஒருவர் சொல்லி விட்டால் என்னவாகும்?’ என்று முன்பு எழுதியிருந்தேன். கேட்டு விட்டதோ.. என்னமோ? கமல் இப்போதெல்லாம் அப்படி அனுமதி கேட்பதில்லை).
அடுத்ததாக ‘ஆரி’யின் சூடான விவகாரம். "‘சுவாரஸ்யம் இல்லாத பங்கேற்பாளர், சிறந்த பங்கேற்பாளர்’ போன்வற்றையெல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள், யாரெல்லாம் வாக்களித்தீர்கள்? என்று கமல் விசாரணையை ஆரம்பிக்க சபையில் குழப்பம் நிலவியது. ‘சோமிற்கு’ யாரெல்லாம் வாக்களித்தீர்கள் என்ற போது அதிக அளவில் தடுமாற்றங்கள் நிகழ்ந்தன.
"இவ்ளோ குழப்பத்திற்கு நடுவுலதான் வாக்களிக்கிறீங்களா?" என்று கமல் கேட்டது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி இந்திய வாக்காளர்களுக்கும் பொருந்தும். ‘இங்க மெல்லிய அரசியல் இருக்குதோ?’ என்று வாழைப்பழத்தில் ஊசியை கமல் செருக, "ஆமாம் சார்... இங்க ஃபேவரிட்டிஸம் இருக்கு” என்று சனம் முதலில் ஆரம்பிக்க அதை ஆவேசமாகத் தொடர்ந்தார் ஆரி.
“ஆரியை விடவும் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளர்கள் இங்க இல்லவே இல்லையா என்ன... ஏன் ஒவ்வொரு முறையும் ஆரியைச் சுட்டிக் காட்டுகிறீர்கள்?" என்று கமல் கேட்ட போது கேமரா ஷிவானி பக்கம் க்ளோஸப்பிற்குச் சென்றது குறும்பு. மூக்கு விடைக்க பதற்றத்துடன் தெரிந்தது ஷிவானியின் முகம்.
என்னளவில் சுவாரஸ்யம் குன்றிய போட்டியாளர்களாக ரமேஷ், ஷிவானி, ஆஜித், சோம், வேல்முருகன் என்று முதல் பட்டியலும் அடுத்த நிலையில் சம்யுக்தா, கேப்ரியல்லா, சனம், நிஷா என்று அடுத்த நிலை பட்டியலையும் சொல்ல முடியும்.
ஆக... இத்தனை பெரிய பட்டியலை வைத்துக் கொண்டு ஆரி மட்டும் தொடர்ந்து சுட்டப்படுவது நிச்சயம் பாரபட்சமானது. அவர் புத்திசாலித்தனமாக உரையாடுவது, ஆனால் செயலில் குறைவாக இருப்பது மற்றவர்களுக்கு அதிக எரிச்சலைத் தந்திருக்கலாம்.
கமல் கேட்ட கேள்விகளை புரிந்து கொள்ளாமல் ரம்யா போன்ற சிலர் விழிக்க, ‘அவர் என்ன சொல்ல வர்றார்னா...’ என்று டிஸ்கவரி சேனல் தமிழ் மாதிரி மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார் ஆரி.
"இங்க 'ஃபேவரிட்டிஸம்’லாம் இருக்கு சார்... அப்ப எப்படி சார் விளையாட்டு நியாயமா நடக்கும்?” என்று அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டார் சனம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக சேர்ந்தாலே அதில் நான்கு அரசியல் வந்து விடும். பதினாறு பேருக்குள் அது எப்படி நிகழாமல் இருக்கும்?
‘அதெல்லாம் இருக்கக்கூடாது’ என்று முதலில் சொன்ன கமல் பிறகு சுதாரித்துக் கொண்டு, "அது அப்பட்டமா தெரியப் போகுதா... இல்ல லாகவமா செய்யப் போறீங்களான்றது உங்க கையில்தான் இருக்கு... ஏன்னா மக்கள் அதை ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க” என்றார்.
உரையாடலின் போக்கில் அடுத்த தலைப்பிற்கு லாகவமாக நகர்வது கமலின் சிறப்புகளில் ஒன்று. அதற்கேற்ற பகடியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வார். அதைப் போலவே ‘முந்திரிக்கொட்டைக்கும்’ நகர்ந்தார்.
சனத்திற்கும் பாலாஜிக்கும் நிகழ்ந்த உரையாடலின் இறுதியில் ‘நீ பண்ணதுதான் முந்திரிக்கொட்டைத்தனம்’ என்று பாலாஜியை நோக்கி சனம் தந்த கவுன்ட்டர் ‘நச்’ ரகம். அப்படியே போகிற போக்கில் சனம் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார் கமல்.
மறுபடியும் அகம். “ஏன் வீட்டுக்குப் போறேன்-னு அடம்பிடிக்கறீங்க?” என்று அர்ச்சனாவிடம் விசாரித்தார் கமல். ஏனெனில் அந்த இடைவேளையில் வீட்டுக்குப் போவதைப் பற்றி ரியோவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா.
அர்ச்சனாவின் இந்த மனமாற்றத்திற்கு பாலாஜி, ஆரி போன்றோரிடம் நிகழ்ந்த சண்டை காரணமாக இருக்குமோ என்று பார்த்தால் இல்லை. சிறிய அளவு ‘எலுமிச்சம்பழம்’தான் காரணமாக இருந்தது.
அர்ச்சனா வீட்டிற்குள் நுழையும் போது அத்தனை ஆர்ப்பாட்டமாக நுழைந்தார். அதுவரை ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த சுரேஷை கலாய்த்தார். ரியோவைப் பின்னுக்குத் தள்ளினார். இவர் ஒரு வலிமையான போட்டியாளராக இருப்பார் என்று அப்போது நாம் கருத வேண்டியிருந்தது.
ஆனால் புலித்தோல் போர்த்திய பூனையாக அர்ச்சனா இருந்திருக்கிறார் என்பது பிறகுதான் தெரிய வருகிறது. சிறிய மனஸ்தாபங்களுக்கு கூட அவர் கண்கலங்கி விடுகிறார். மீடியா துறையில் அதிக அனுபவமுள்ள அர்ச்சனாவிற்கு ‘பிக்பாஸ்’ வீட்டின் உள்ளே இப்படியெல்லாம் இருக்கும் என்று எதிர்பாராமலா வந்திருப்பார்? ஆச்சர்யமாக இருக்கிறது.
“யானைன்னு நாம நெனச்சவங்க எல்லாம் பின்னாடி பூனையா மாறிடறாங்க" என்று இதைத்தான் கமலும் குறிப்பிட்டார். "Carnivorous-லாம் தயிர்சாதமா மாறிடறாங்க. இதைப் போலவே நடுவில் சிலரின் குணாதிசயங்களும் மாறி விடுகின்றன” என்று சுரேஷை அடுத்து வம்பிற்கு இழுத்தார் கமல்.
அர்ச்சனாவின் வரவிற்குப் பிறகு சுரேஷ் சற்று அடக்கி வாசிக்கிறார். சனத்துடன் நிகழ்ந்த சர்ச்சைக்குப் பிறகு இன்னமும் அடங்கிவிட்டார். கமல் இதை சரியாக சுட்டிக் காட்டினாலும் ‘மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக’ சுரேஷ் இதை ஒப்புக் கொள்ளவில்லை. "அடங்கியிருப்பதுதான் இப்பத்திக்கு என் ஸ்ட்ராட்டர்ஜி. ஆனா இப்பதான் அதிக சண்டை நடக்குது. எதிர்பாராதவங்கள்லாம் சண்டை போடறாங்க... எனக்கு ஜாலியா இருக்கு" என்று சமாளித்தார் சுரேஷ்.
‘பதினொன்னு–ன்ற நம்பர் குழப்பமா இருக்கு. அதனால அதை பத்தா குறைச்சுட்டேன்’ என்ற கமல் ‘கணக்குல நான் பாதி புலி.. பதுங்க மட்டும்தான் தெரியும்’ என்று சொன்ன வசனத்தில் இருந்த subtle நகைச்சுவை அட்டகாசம். எத்தனை பேர் இதையெல்லாம் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை. (சொந்தமா... ஸ்கிரிப்ட்டா?!)
எவிக்ஷன் பட்டியலில் மீதமிருந்த பத்து நபர்களையும் ஜோடியாக உட்காரச் சொன்னார். ஒவ்வொரு ஜோடிக்கும் ஜாலியாக கமன்ட் அடித்துக் கொண்டிருந்தார் ரியோ. அனிதாவும் சுரேஷூம் ஓர் அணியாக அமர வைக்கப்பட்டதுதான் அதிக நகைச்சுவை. இந்த ஜோடிகளில் ஒருவர் காப்பாற்றப்படுவார் என்று சொல்லி விட்டு சுண்டல் விநியோகிப்பது போல் பட்டியலை அறிவித்தார் கமல். இந்த வகையில் ரியோ, ரம்யா, பாலாஜி, அனிதா மற்றும் ரமேஷ் ஆகியோர் வாக்குகளின் மூலம் காப்பாற்றப்பட்டனர். (ரமேஷூமா... என்ன கொடுமை சரவணன்?!).
பாலாஜி காப்பாற்றப்பட்ட தகவலை கேள்விப்பட்டதும் அரசியல்வாதி போல சுற்றிலும் கும்பிட்டு, ‘மான் கராத்தே’ பாணியில் ‘உங்கள் ஓட்டு எனக்கே’ என்று கெத்து காட்டினார். அனிதா காப்பாற்றப்பட்ட அறிந்ததை போது ‘பெரியார் விருது’ வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கமல் சென்ற பிறகு மக்கள் உள்ளே பேசிக் கொண்டிருந்தார்கள். ‘எவ்ளோ கன்டென்ட் கொடுத்திருப்பேன். வெறும் அஞ்சு நிமிஷம் தூங்கினதுக்கு எவ்ளோ கலாட்டா பண்ணாங்க... இப்ப பார்த்தீங்களா... அவங்களுக்கு கிடைச்ச ஆப்பை’ என்று சம்யுக்தாவிடம் பாலாஜி பெருமையடித்துக் கொண்டிருக்க,
இன்னொரு பக்கம், "இப்ப புரிஞ்சுதா... இங்க டீம் இருக்குன்னு. கமல் சாரே சொல்லிட்டார். சோம் நல்ல பையன்தான். ஆனா அப்பாவியா இருக்கான்” என்று அனிதாவிடம் ஸ்பேஸ் விடாமல் பேசிக் கொண்டிருந்தார் ஆரி.
ஆக... எவிக்ஷன் பட்டியலில் மீதமிருப்பவர்கள் ஐந்து பேர். இதில் யார் வெளியேறுவார்? டேப்ரிகார்டர் பட்டன் ஆஃப் செய்யப்படும் என்பது ஒரு க்ளூ.
கமன்ட் பாக்ஸில் வந்து உங்களின் யூகங்களைச் சொல்லுங்கள்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/anitha-emotional-aari-scores-bigg-boss-tamil-season-4-day-27-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக