Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2020

கோலியின் பெங்களூரு இந்த முறையும் ப்ளே ஆஃப் போகாதா... 3 இடங்களுக்கு 6 அணிகள் மோதினால்?! #IPL2020

இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது 2020 ஐபிஎல். முதல்கட்டப்போட்டிகளில் தொடர் வெற்றிகளைப்பெற்று டேபிள் டாப்பர்களாக முன்னேறிய டெல்லியும், பெங்களூருவும் தொடர் தோல்விகளோடு கீழேவிழந்து கொண்டிருக்க, வழக்கம்போல மும்பை இந்தியன்ஸ் ப்ளேஆஃபுக்கு முதல் ஆளாக முன்னேறிவிட்டது.
MI | மும்பை இந்தியன்ஸ்

மும்பையின் நம்பர் 1 இடத்தை யாரும் இனி பிடிக்கமுடியாது. மும்பை ப்ளேஆஃபுக்குள் நுழைந்துவிட்டது, சென்னை ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து எப்போதே வெளியேறிவிட்டது. ஆனால், மற்ற மூன்று இடங்களைப் பிடிக்க ஆறு அணிகளுமே மோதுவதால் செம த்ரிலிங்கான கட்டத்தை எட்டியிருக்கிறது ஐபிஎல் 2020. எல்லா அணிகளுக்குமே தலா ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையில் இன்றைய பஞ்சாப் வெர்சஸ் சென்னை போட்டியும், கொல்கத்தா வெர்சஸ் ராஜஸ்தான் போட்டியும் மிக மிக முக்கியமானப் போட்டிகளாக மாறியிருக்கின்றன.

பெங்களூருவின் நிலை என்ன?!

நாளை (02-11-2020) டெல்லியுடன் மோதுகிறது பெங்களூரு. இரண்டு அணிகளுமே 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றிபெற்று, 6 போட்டிகளில் தோல்வியடைந்து 14 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. இந்தச் சூழலில் நாளையப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ, அந்த அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து ப்ளே ஆஃபுக்குள் முன்னேறிவிடும். ஒருவேளை டெல்லி வெற்றிபெற்றுவிட்டால், பெங்களூரு ப்ளே ஆஃபுக்குள் தகுதிபெற மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கவேண்டும். சென்னைக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாபும், மும்பைக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத்தும் வெற்றிபெற்றுவிட்டால் பெங்களூரு அணி ப்ளே ஆஃபுக்குள் நுழையமுடியாது.

#IPL2020

பஞ்சாப் அல்லது ஹைதராபாத் அணிகளில் எந்த ஒரு அணி தோற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு ப்ளேஆஃபுக்குள் நுழைவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதற்கு பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி/தோல்வியில்லாமல் கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டி முடிவடையவேண்டும். சென்னையிடம் பஞ்சாப் தோற்று, மும்பையிடம் ஹைதராபாத் தோல்வியடைந்தால் பெங்களூரு அணி டெல்லியிடம் தோல்வியடைந்தாலும் ப்ளேஆஃபுக்குள் 14 புள்ளிகளுடனேயே எந்த சிரமும் இல்லாமல் நுழைந்துவிடும்.

டெல்லியின் கதை என்ன?!

கடைசியாக நடந்த நான்கு போட்டிகளிலும் டெல்லி தோல்வியடைந்திருப்பதைவிட அந்த அணியின் பெரும் பிரச்னையே மூன்று போட்டிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்திருப்பதுதான். 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி, 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என எல்லாமே பெரிய தோல்விகள் என்பதால் ரன்ரேட் அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது. பெங்களூருவுக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், டெல்லியின் ப்ளே ஆஃப் இடம் உறுதி. ஆனால், பெங்களூருவிடம் தோல்வியடைந்துவிட்டால், அடுத்த அணிகளின் வெற்றி தோல்விகள்தான் டெல்லியின் தலையெழுத்தை தீர்மானிக்கும். ஹைதராபாத், பஞ்சாப் அணிகளின் ரன்ரேட் டெல்லியைவிட சிறப்பாக இருப்பதால், அந்த அணிகள் தங்களது கடைசிப்போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால், டெல்லியால் ப்ளேஆஃபுக்குள் நுழையமுடியாது. பெங்களூருவுக்கு எதிராக டெல்லி தோல்வியடைந்து, பஞ்சாபோ, ஹைதராபாத்தோ ஏதோ ஒரு அணி தங்கள் கடைசிப்போட்டியில் தோல்வியடைந்தால் மட்டுமே டெல்லியால் ப்ளே ஆஃபுக்குள் நுழையமுடியும்.

#IPL2020 | SRH

ஹைதராபாத் என்ன ஆகும்?!

இந்த சீசன் முழுக்கவே ரோலர் கோஸ்டரில் விளையாடிக்கொண்டிருந்தது ஹைதராபாத். திடீரென பெரிய வெற்றிகள் பெறுவது, 126 ரன் டார்கெட்டைக்கூட சேஸ் செய்யமுடியாமல் தோல்வியடைவது என ஹைதராபாத்தின் பயணம் இந்த 2020 ஐபிஎல்லில் கன்சிஸ்டென்ட்டாக இல்லை. இப்போது கடைசிப்போட்டி மும்பை இந்தியன்ஸுடன். டெல்லி, பெங்களூருவுக்கு இருக்கும் வாய்ப்புகள் எல்லாம் ஹதராபாத்துக்கு இல்லை. மும்பையுடனான கடைசிப்போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃபுக்குள் நுழைந்துவிடுவார்கள். தோல்வியடைந்தால் ஹைதரபாத் அடுத்த ஃப்ளைட்டை இந்தியாவுக்குப் பிடிக்கவேண்டியிருக்கும்.

ராஜஸ்தான் என்ன செய்யப்போகிறது?!

கொல்கத்தாவுடன் கடைசிப்போட்டியில் விளையாடுகிறது ராஜஸ்தான். பென் ஸ்டோக்ஸின் ஆல் ரவுண்ட் பர்ஃபாமென்ஸ்களால் கடைசியாக நடந்தப்போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது ராஜஸ்தான். ஆனால், ராஜஸ்தானுக்கான ப்ளே ஆஃப் வாய்ப்புகள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. பஞ்சாப், ஹைதரபாத் அணிகள் தங்களது கடைசி போட்டிகளில் தோல்வியடைந்து, இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தாவை, ராஜஸ்தான் வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆஃப் இடம் உறுதி. ஒருவேளை பஞ்சாபோ அல்லது ஹைதராபாத்தோ ஏதோ ஒரு அணி வெற்றிபெற்று, ஒரு அணி தோல்வியடைந்தால், பெங்களூரு - டெல்லி அணிகளுக்கு எதிரானப்போட்டியில் தோல்வியடையும் அணியைவிட ராஜஸ்தானின் ரன்ரேட் அதிகம் இருக்கவேண்டும். ஒருவேளை பஞ்சாப், ஹைதராபாத் என இரண்டு அணிகளுமே தங்களது கடைசிப்போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால், கொல்கத்தாவை ராஜஸ்தான் பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்கவேண்டும். அப்போதுதான் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானால் ப்ளேஆஃபுக்குள் நுழையமுடியும்.

#IPL2020

பஞ்சாப் என்னாகும்?!

டெல்லி, பெங்களூருவின் சமீபத்திய தோல்விகள், பஞ்சாபுக்கு பெரிய ரன்ரேட்டைக் கொடுத்திருக்கின்றன. அதனால், இன்றையைப் போட்டியில் சென்னையை, பஞ்சாப் தோற்கடித்துவிட்டால் நேரடியாக நாளை நடைபெறும் டெல்லி வெர்சஸ் பெங்களூரு போட்டியில் தோல்வியடையும் அணிக்கு மேல் பஞ்சாப் இருக்கும். அதேசமயம் ஹைதராபாத், மும்பை அணியை தோற்கடித்துவிட்டால் அவர்கள் ப்ளேஆஃபுக்குள் நுழைய, பஞ்சாப் கால்குலேட்டர் கணக்குகளை நம்பி காத்திருக்கவேண்டும். ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் பெரிய வித்தியாசங்களில் தோல்வியடையவேண்டும். ஆனால், அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதால் சென்னைக்கு எதிரான போட்டிதான் பஞ்சாபுக்கு வாழ்வா சாவா போட்டி. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் ப்ளே ஆஃப்க்குள் நுழையலாம். தோல்வியடைந்தால் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டதாகவே அர்த்தம்.

Also Read: மும்பையை மிரட்ட ஒரு சென்னை இல்லையே... என்னப்பா டெல்லி... இப்படி மட்டையா மடங்கிட்டீங்க?! #DCvMI

KKR

கொல்கத்தாவின் கதையும் கலவரம்தான்!

ராஜஸ்தான் என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலைமைதான் கொல்கத்தாவுக்கும். பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் தங்கள் கடைசிப்போட்டியில் தோல்வியடைந்து, ராஜஸ்தானுக்கு எதிரானப்போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் நான்காவது அணியாக கொல்கத்தா ப்ளே ஆஃபுக்குள் நுழைந்துவிடும். ஒருவேளை இன்று பஞ்சாப் சென்னையைத் தோற்கடித்தாலோ அல்லது ஹைதராபாத் மும்பையைத் தோற்கடித்தாலோ கொல்கத்தா மீண்டும் கால்குலேட்டர்களைத் தேடி ஓடவேண்டும். ஆனால், கால்குலேட்டர்களை எப்படி உருட்டினாலும் கொல்கத்தாவுக்கான வாய்ப்புகள் குறைவுதான். அதனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ராஜஸ்தானை தோற்கடிக்கவேண்டும். பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் தோற்கவேண்டும்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-six-teams-battling-for-3-spots-who-are-all-can-go-through

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக