பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட பப்ளிக் அஃபையர்ஸ் மையம் 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலை வெளியிடும். இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். இந்த அமைப்பு இந்த ஆண்டிற்கான பப்ளிக் அஃபையர்ஸ் குறியீடு-2020-ஐ (Public Affairs Index-2020) சமீபத்தில் வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் தென் மாநிலங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்திருக்கின்றன.
மாநிலங்களின் வளர்ச்சி, சிறந்த நிர்வாகத் திறன், நிலைத்தன்மை போன்ற காரணிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த குறியீட்டின் அடிப்படையில், 1.388 புள்ளிகளுடன் கேரளா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தமிழகம் 0.912 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 0.531 புள்ளிகளுடன் ஆந்திரா மூன்றாம் இடத்திலும், 0.468 புள்ளிகளைப் பெற்று கர்நாடகா நான்காவது இடத்திலும் இருக்கிறது. அதேபோலப் பட்டியலில் கடைசியாக -1.461 எதிர்மறை புள்ளிகளைப் பெற்று உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலிருக்கிறது.
சிறிய மாநிலங்கள் கோவாவுக்கு முதலிடம்:
சிறிய மாநிலங்களின் வரிசையில், 1.745 புள்ளிகளுடன் கோவை முதலிடத்திலும், மேகாலயா 0.797 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இமாச்சலப்பிரதேசம் 0.725 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. அதேபோலச் சிறிய மாநிலங்களின் வரிசையில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாநிலங்களாக மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தரகாண்ட் (-0.277) ஆகியவை இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
யூனியன் பிரதேசங்கள்:
யூனியன் பிரதேசங்கள் பட்டியலைப் பார்க்கும் போது, 1.05 புள்ளிகளைப் பெற்று சண்டிகர் முதலிடத்திலும், புதுச்சேரி 0.52 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து லட்சத்தீவுகள் 0.003 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. யூனியன் பிரதேசங்களின் வரிசையில், (-0.69), (-0.50), (-0.30) என்ற எதிர்மறை புள்ளிகளுடன் முறையே தாதர் மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான் & நிக்கோபார், ஜம்மு - காஷ்மீர் ஆகியவை இடம்பிடித்துள்ளன.
source https://www.vikatan.com/news/india/kerala-and-tamil-nadu-are-the-best-in-governance-what-does-public-affairs-index-say
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக