Ad

சனி, 4 டிசம்பர், 2021

Doctor Vikatan: கைகளிலும் கால்களிலும் வடியும் அதீத வியர்வை; இதற்கு தீர்வு உண்டா?

எனக்கு கைகள் மற்றும் கால்களில் அளவுக்கதிமாக வியர்வை வருகிறது. பதற்றமாக இருக்கும்போது மட்டுமன்றி எல்லா நேரத்திலும் இப்படி வியர்வை வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?

- விஜய் அருண் (விகடன் இணையத்திலிருந்து)

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

``உங்களுக்கு இருக்கும் இந்தப் பிரச்னைக்கு `பால்மோப்ளான்ட்டர் ஹைப்பர்ஹிட்ரோசிஸ்' (Palmoplantar Hyperhidrosis) என்று பெயர். மக்கள்தொகையில் ஒன்று முதல் மூன்று சதவிகித மக்களை பாதிக்கும் பிரச்னை இது.

பரம்ரையாகச் சிலருக்கு இந்த பாதிப்பு தொடரலாம். உடல்ரீதியாக அதிகப்படியான வேலை மற்றும் ஸ்ட்ரெஸ் இரண்டின் காரணமாகவும் இந்தப் பிரச்னை வரக்கூடும்.

முதல் வேலையாக நீங்கள் சரும மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களுக்கு இருக்கும் பிரச்னையை உறுதிசெய்து அதற்கான காரணம் அறிந்து, சரியான சிகிச்சையையும் பரிந்துரைப்பார். இரவு படுக்கச் செல்வதற்கு முன் கைகளையும் கால்களையும் சுத்தமாகக் கழுவவும்.

Also Read: Doctor Vikatan: இனப்பெருக்கப் பாதை இன்ஃபெக்ஷன்; என்னதான் தீர்வு?

கைகள் உலர்ந்ததும் அலுமினியம் குளோரைடு ஹெச்ஸா ஹைட்ரேட் திரவத்தை உள்ளங்கைகள் மற்றும் பாதங்களில் தடவிக்கொண்டு இரவு முழுக்க அப்படியே விடவும். அடுத்தநாள் காலையில் கைகளையும் கால்களையும் கழுவிவிடலாம்.

வியர்வை சுரப்பது குறையத் தொடங்கும்போது மெள்ள மெள்ள அலுமினியம் குளோரைடு ஹெச்ஸா ஹைட்ரேட் திரவத்தை உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில் தினமும் தடவிக்கொள்ளலாம். வியர்வை கட்டுப்பட ஆரம்பித்ததும் வாரத்தில் 3 நாள்கள், அதன்பிறகு வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை என குறைத்துக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் நிறுத்திவிடலாம்.

Hands (Representational Image)

Also Read: Doctor Vikatan: மழைக்காலத்தில் தொற்றுநோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

இதே பிரச்னைக்கு போடாக்ஸ் ஊசி செலுத்திக்கொள்வதும் பலன் தரும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் போடப்படும் இந்த ஊசியின் பலன், ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஊசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

பதற்றத்தையும் ஸ்ட்ரெஸ்ஸையும் குறைக்கும் யோகா, தியானம் போன்ற உத்திகளையும் கடைப்பிடிக்கவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-of-sweating-in-palms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக