Ad

சனி, 4 டிசம்பர், 2021

``எங்க பிள்ளைங்க வாழ்க்கையாவது மாறணும்னு ஆசைப்படுறோம்" - பிராட்வேயிலிருந்து ஒலிக்கும் குரல்கள்!

மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. நாங்கள் ஆறு பேர்... தருண், விஜயா, சந்தியா, மேஹா, சிவபாலன், கோபிநாத்... ஆறு பேரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள். எங்கள் பயிற்சிக்கு மத்தியிலான களப்பணி, பிராட்வேயில் ஒதுக்கப்பட்டிருந்தது. வாகனத்தில் ஏறும்வரை களத்தில் என்ன இருக்கும் என்பது தெரியவில்லை.

‘ஸ்மார்ட்’ பத்திரிகையாளர்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தைக் கடந்து பிராட்வே, ரத்தன் பஜாரில் ஒரு பெட்ரோல் பங்க் வாசலில் வாகனம் நின்றது. மழை சற்று ஓய்ந்து கனத்த தூறல் விழுந்துகொண்டிருந்தது. "நீங்க விகடன்ல இருந்து வர்றீங்களா?" என்றபடி எங்களை வரவேற்றார் ஒரு இளைஞர். "என் பேரு மெட்ராஸ் மிரன்... நான் பாடலாசிரியர்... சார்பெட்டா பரம்பரை, பாரிஸ் ஜெயராஜ் படங்கள்ல எல்லாம் பாட்டு எழுதியிருக்கேன். 'மூக்குத்தி மூக்குத்தி', 'சிக்கனு மட்டனு', 'ஸ்டவ்வு மேல கடாயி'... கானாபாட்டெல்லாம் கேட்டிருப்பீங்களே... அதெல்லாம் நான் எழுதினதுதான்..." என்று கலகலப்பாக அறிமுகம் செய்துகொண்ட மிரன், "வாங்க வீட்டுக்குப் போய் உக்காந்து பேசுவோம்" என்றபடி சாலையை கிராஸ் செய்தார். அவரைத் தொடர்ந்தோம்.

ரத்தன் பஜாரில் வரிசையாக மின்விளக்கு கடைகள் இருக்கின்றன. அவற்றின் முகப்பில் குழந்தை குட்டிகளோடு ஆண்களும் பெண்களுமாக பலர் அமர்ந்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் துணிகளால் சிறுசிறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் எல்லோரும் நனைந்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டு அமரச் சொல்கிறார்.

"வீடுன்னு சொன்னீங்க..." - ஆறு பேரும் மிரனை கேள்வியோடு பார்த்தோம்.

பிராட்வே

"ஆமாம்... இதுதான் எங்க வீடு... இன்னைக்கு நேத்துல்ல... நாலு தலைமுறையா இந்த பிளாட்பாரத்துலதான் இருக்கோம். பிராட்வேயில மட்டும் 500 குடும்பங்கள் இப்படி ரோட்டோல கிடந்து அல்லல்படுது. இங்கே வாழ்ற எல்லாரும் பஜார்ல பூ விக்குறது, பழம் விக்கிறது, மூட்டை தூக்குறது, தள்ளுவண்டியில ஓட்டல் நடத்துறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சு பிழைக்கிறாங்க. வீடு கொடுங்கன்னு அரசாங்கத்துக்கிட்ட கேட்டா, இங்கிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால பெரும்பாக்கத்துலயோ, கண்ணகி நகர்லயோ கொடுக்கிறாங்க. அங்கே போயி எப்படி பிழைக்கிறது... அதுதான் போனது போகட்டும்ன்னு இங்கேயே கெடந்து வாழப் பழகிட்டோம்..."

மிரன் பேசிக்கொண்டிருக்கும்போதே மழை வலுக்கத் தொடங்கிவிட்டது. அருகிலிருந்த இளைஞர்கள் தாங்கள் நனைந்தபடி பெரிய குடைகளைக் கொண்டு வந்து எங்களுக்குப் பிடித்தார்கள்.

"பரவால்லன்னா... உங்களுக்கும் சேர்த்துப் பிடிச்சுக்கோங்க..." என்றோம்.

"நீங்கள்லாம் எங்களோட விருந்தாளிங்க... நாங்க நனைஞ்சாப் பரவாயில்லை... நீங்க நனையக்கூடாது" என்றார், சாயமேற்றிய தலைமுடிகொண்ட ஒரு அண்ணா.

பிராட்வே

கல்லூரியில் புள்ளிங்கோ வீடியோக்களைப் பார்ப்பதுண்டு. அவர்களின் பேச்சு, பாட்டு, தலைமுடி, பார்த்து பொதுபுத்தியில், சென்னை இளைஞர்கள் என்றாலே மனதுக்குள் ஒரு எதிர்மறை பிம்பம் வந்துவிட்டது. அடாவடி, மிரட்டல், அச்சம் என... ஆனால் எதார்த்தம் வேறு மாதிரியிருக்கிறது. அத்தனை அன்பாக, அக்கறையாக எங்களை அரவணைத்து நிற்கிறார்கள்.

மிரன் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யத் தொடங்கினார்.

"இவர் பேரு வினாயகம்... கானா பாட்டுக்காரர். யூடியூப்ல கானா வினாயகம்ன்னு போட்டீங்கன்னா முப்பது சாங்ஸ் இருக்கும். சினிமாவுல கூட பாடியிருக்கார். ஆனா இன்னும் ஒரு படமும் வெளியே வரலே... இவரு தப்புசெட் ஜெயராம். இவரு தப்பு வாசிச்சார்ன்னா நம்மையறியாம எழுந்து ஆடுவோம். சார்பட்டா, பாரிஸ் ஜெயராஜ், ரகிட...ன்னு நிறைய படங்கள்ல வாசிச்சிருக்கார். இவங்க ரெண்டு பேரையும் நீங்க இன்ஸ்டாவுல பாத்திருக்கலாம். 'டோலு போலு ராப்பர்ஸ்'. எல்லா சமூகப் பிரச்னைகளுக்கும் ராப் போடுவாங்க. இவர் டிரெண்ட் கானா சஞ்சய். யூடியூப்ல இருக்கார். இவர் பேரு ஹரிஷ் டிபி. டிபின்னா என்னன்னு உங்களுக்கு டவுட் வரலாம். அவங்க அம்மா டிபன்கடை நடத்தினாங்க. அதோட நினைவா பேருக்குப் பக்கத்துல டிபின்னு சேத்துக்கிட்டார். இவரு டான்ஸர். சினிமாவுல ஆடியிருக்கார். கல்யாணம், வரவேற்பு நிகழ்ச்சிகள்ல வெல்கம் டான்ஸ் ஆடுவார்..."

மிரான் ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய, ஒருத்தர், "மாப்ளே... நானே என்னை அறிமுகப்படுத்திக்கிறேன்..." என்றார்.

பிராட்வே

"எம்பேரு அன்பு. நாங்க வியாசைத் தோழர்கள்ன்னு ஒரு அமைப்பு வச்சிருக்கோம். வியாசர்பாடின்னா வெட்டு, குத்து, ரவுடிசம்ன்னு தானே நினைச்சிருப்பீங்க. நாங்களும் மனுஷங்கதான். கொரோனா நேரத்துல எங்க ஆட்டோக்கள்ல எல்லாம் ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்திக்கிட்டு நோய்வாய்ப்பட்டவங்களை ஆஸ்பத்திரியில கொண்டுபோய் சேர்த்தோம். நானூறு பேருக்கு மேல ஆட்டோவுல கொண்டுபோய் காப்பாத்தியிருக்கோம். அதில்லாம ஒரு இரவுப்பள்ளியும் நடத்துறோம். எங்க புள்ளைங்க நிறைய பேரு அங்கே படிக்கிறாங்க..." என்றார் பெருமிதத்துடன்.

இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. யாருக்கும் வீடில்லை. எல்லோருமே சாலையோரம் வசிக்கிறார்கள்.

எல்லோரின் கலையும் அவர்கள் வாழ்க்கையைப் பேசும் விதமாகவே இருக்கிறது. கானா வினாயகம் சாலையோர இளைஞன் ஒருவனின் காதலைப் பாட, டிரெண்ட் கானா சஞ்சய், சாலையோர மக்களின் துயர வாழ்க்கையை கானாவாக பாடி கலங்க வைத்தார். ஜெயராம் தப்பு வாசிக்க, ஹரிஷ் அதற்கேற்ப டான்ஸ் ஆடினார்.

மழை கொட்டித்தீர்க்கிறது. அந்த நண்பர்கள் மேலும் சில குடைகளை எங்கள் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். கடைகளின் முகப்பில் குழந்தைகளோடு ஒதுங்கியிருக்கிறார்கள் பெண்கள்.

பிராட்வே

மிரன் தன் மனைவியை அறிமுகம் செய்கிறார்.

"இவ பேரு சித்ரா. இவங்க குடும்பமும் தலைமுறையா ரோட்டோரத்துல வாழ்றவங்கதான். சின்ன வயசுல இருந்து லவ்வு. பெத்தவங்கக்கிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதுதான் எங்க குடில். மழை வந்தா கடையோரத்துல படுப்போம். வெயிலடிச்சா ரோட்டோரத்துல படுப்போம். மித்ரன், ஜினிதா, காலா பீம்ஜி ராவண்... மூணு பிள்ளைங்களுக்கும் நான் கொடுத்தது இந்த பிளாட்பார வாழ்க்கையைத்தான்" - மௌனமாகிறார் மிரன்.

சாலையோர வாழ்க்கையில் பெருந்துயரங்களைச் சுமப்பவர்கள் பெண்கள்தான். கழிவறைக்குச் செல்வது முதல் உறங்குவதுவரை எல்லாமும் அவர்களுக்கு சவால்.

"காலையில எழுந்திருக்கிறதுல இருந்து பிரச்னைதான். கழிவறைக்குப் போகனும்னா பப்ளிக் பாத்ரூமுக்குத்தான் போகனும். அவசரத்துக்குப் போகமுடியாது. வரிசையில நிக்கனும். இப்போ பக்கத்துல இருந்த டாய்லெட்டை இடிச்சுட்டாங்க. அதுக்கு ரொம்ப தூரம் நடந்துபோக வேண்டியிருக்கு. பீரியட் டைம் எல்லாம் கொடுமையாத்தான் இருக்கும். ஆனா பழகிப்போச்சு. சிலநேரம் கடைகாரங்க நல்லவிதமா பேசுவாங்க. சில நேரம் விரட்டுவாங்க. அதையும் சகிச்சுக்கிட்டுத்தான் இருக்கனும். புள்ளைகளையெல்லாம் இந்த ரோட்டுல இருந்துதான் பெத்தெடுத்திருக்கோம். இதையெல்லாம் உங்களால கற்பனைகூட செஞ்சு பாக்கமுடியாது..." என்று வெறுமையாகச் சிரிக்கிறார் சித்ரா.

பிராட்வே மக்கள்

"குளிக்க, டாய்லெட் போக... எதுக்கெடுத்தாலும் பணம்... பணம் இல்லேன்னா ரோட்டோரத்துலகூட வாழமுடியாது. வயசுப்புள்ளைகளை வச்சுக்கிட்டு ரோட்டுல வாழ்றது ரொம்பக் கொடுமைம்மா... இந்த ரோட்டு வாழ்க்கை எப்போதான் மாறுமோ தெரியலே..." என்கிற கவிதாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு பெண் பிளஸ்டூவும் இன்னொரு பெண் பதினோறாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நாங்கள் இங்கு சந்தித்த பெரும்பாலான பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்களாகவோ, கணவனை இழந்தவர்களாகவோ இருக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை மாறவில்லை.

"இது சாபக்கேடும்மா... எவ்வளவு உழைச்சாலும் இங்கேதான் எங்க பொழைப்பு. எங்களுக்கு அட்ரஸ்கூட இல்லை. நாடோடிகள் மாதிரிதான் வாழ்க்கை போகுது. மழை பேஞ்சா வந்து போர்வை, பிரெட், பழங்கள் கொடுத்து போட்டோ எடுத்து பேப்பர்ல போடுவாங்க. அதுக்குப்பெறகு யாரும் எங்களைத் திரும்பிக்கூடப் பாக்கமாட்டாங்க. செத்தாக்கூட இதோ இந்த பிளாட்பாரத்துல கொஞ்ச நேரம் வச்சிருந்துட்டு தூக்கிப்போட்டுருவாங்க. இதோ பக்கத்துல ஒரு ஒயின்ஷாப் இருக்கு. குடிச்சுட்டு இந்த இடத்துல வாந்தி எடுத்து வச்சுட்டுப் போயிருவானுங்க. பாட்டிலை உடைச்சுப் போடுவானுங்க. பொம்பளைங்க உக்காந்திருந்தா சலம்புவானுங்க. எங்க பிள்ளைங்க வாழ்க்கையாவது மாறனும்ன்னு ஆசைப்படுறோம்... நடக்காது போல..." அவநம்பிக்கையாகப் பேசுகிறார் ராதிகா.

பிராட்வே

மழை அடித்துப் பெய்கிறது. மழைக்குத் தலை கொடுத்து உற்சாகமாக விளையாடுகின்றன குழந்தைகள். நண்பர்கள் தாங்கள் நனைந்தபடி நாங்கள் நனையாமல் இருக்க குடை பிடித்தபடியே நிற்கிறார்கள். சித்ரா, மழையில் நனைந்தபடி எங்களுக்கு தேநீர் வாங்கிவந்து தருகிறார்.

எங்கள் இதழியல் பணியின் முதல் களம்... வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும். "நிறைய பேர்க்கிட்ட பேசியிருக்கோம்மா... இதுவரைக்கும் எதுவும் நடக்கலே... நீங்களாவது பாத்து ஏதாவது செய்யிங்க" கைகளைப் பற்றிக்கொண்டு நளினி சொன்ன வார்த்தைகள் இப்போது வரைக்கும் நெஞ்சில் நிற்கிறது.

பிராட்வே
நிச்சயம் ஏதாவது செய்தாகவேண்டும்!


source https://www.vikatan.com/social-affairs/miscellaneous/vikatan-student-reporters-spot-visit-at-broadway

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக