Ad

சனி, 4 டிசம்பர், 2021

ராஜ்கிரா பர்ஃபி | ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர் | புதினா ஓமப்பொடி - மழைக்கால வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

மழைக்கு இதமாக சூடாக, கரகர, மொறுமொறுவென எதையாவது எதிர்பார்க்கும் வயிற்றையும் மனதையும்' ஓவர் தீனி உடம்புக்கு ஆகாது... நொறுக்குத்தீனியெல்லாம் ஆரோக்கியத்துக்கு நல்லதில்ல...' என்று சமாதானம் சொல்லி அடக்குகிறீர்களா?

எல்லா நொறுக்குத்தீனிகளும் ஆரோக்கியமற்றவை என்று யார் சொன்னது? அவற்றையே ஆரோக்கிய வெர்ஷனில் மாற்றி உங்கள் வயிற்றையும் மனதையும் குளிரச் செய்யுங்கள்...

தேவையானவை:

ராஜ்கிரா பொரி - ஒன்றரை கப்
துருவிய வெல்லம் - ஒரு கப்
முந்திரி - கால் கப் (விருப்பப்பட்டால்)
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

ராஜ்கிரா பர்ஃபி

செய்முறை:

ஒரு கடாயில் நெய், வெல்லம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடாக்கவும். பாகு நுரைத்து ஒரு கம்பிப் பதம் வந்தவுடன் ராஜ்கிரா பொரி, உடைத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி நெய் தடவிய டிரேயில் ஊற்றி, துண்டுகள் போடவும். பர்ஃபி வட்டமாக வேண்டுமென்றால் சிறிய டப்பா மூடி அல்லது வட்டமான குக்கி கட்டரால் கட் செய்து எடுக்கவும்.

குறிப்பு:

* ராஜ்கிரா விதை பயன்படுத்துவதாக இருந்தால் ஒரு கப் அளவு எடுத்துக்கொள்ளவும். ராஜ்கிரா விதையை வெறும் வாணலியில் பொரித்தால் அது நன்கு பொரியும். எல்லா விதைகளையும் பொரித்துக்கொண்டு பெரிய கண்ணுள்ள சல்லடையில் சலித்தால் பொரி மேலே நிற்கும் விதை கீழே விழும். ராஜ்கிரா பொரி கிடைக்காதவர்கள் இவ்வாறு செய்துகொள்ளலாம்

* ராஜ்கிரா என்பது முளைக்கீரை விதையாகும். இது நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ராஜ்கிரா பர்ஃபி வட மாநிலங்களில் மிகப் பிரபலமான ஒன்று. இங்கும் ஆர்கானிக் கடைகளில் கிடைக்கிறது. பொரியாகவும் கிடைக்கிறது; விதையாகவும் கிடைக்கிறது.

* பாகு வெல்லமாக வாங்கிக்கொள்ளவும். பாகு வெல்லம்தான் பர்ஃபிக்கு நன்றாக இருக்கும்.

நெய் சேர்க்காமல் வெல்லத்தில் ஒரு கம்பிப் பதம் பாகு வைத்து பின் பொரியைச் சேர்த்தும் பர்ஃபி செய்யலாம்.

தேவையானவை:

ரோல்டு ஓட்ஸ் - ஒரு கப்
பாதாம், முந்திரி - தலா 10
வேர்க்கடலை - 20
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 20
கறிவேப்பிலை - 10
பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறிக்கொள்ளவும்)
கொப்பரைத் தேங்காய் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்

ஓட்ஸ் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸர்

செய்முறை:

ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.

2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, கிஸ்மிஸ், கொப்பரைத் தேங்காய் என்று இதே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுக்கவும். வறுத்தவற்றை டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை வடியவிடவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து, பின்னர் மிளகுத்தூள், உப்பு போட்டுக் கிளறவும். பின்னர் வறுத்து வைத்துள்ளவை எல்லாவற்றையும் சேர்க்கவும். கடைசியாகப் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

விருப்பப்பட்டால், தட்டையான அவலை வறுத்து இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப இனிப்பு, காரம் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

பால் - அரை லிட்டர்
தாமரை விதை - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) - 10
பிஸ்தா, பாதாம், முந்திரி - தலா 8
குங்குமப்பூ - சிறிதளவு
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
ஜாதிப்பூ, ஜாதிக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை

லோட்டஸ் சீட் புடிங் (தாமரை விதை கீர்)

செய்முறை:

வாணலியில் நெய்யைச் சூடாக்கி அதில் தாமரை விதைகளைப் போட்டு வறுக்கவும். அடுப்பைக் குறைத்து வைத்து மிதமான தீயில் தாமரை விதை மொறுமொறுப்பாகும் வரை, அதாவது 5 நிமிடங்கள் வறுக்கவும். கையில் எடுத்து அழுத்திப் பார்த்தால் உடைய வேண்டும். அதுவரை வறுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றில் சிறிதளவு அலங்கரிக்க எடுத்துக்கொண்டு மீதியுள்ளவற்றை கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, பொடித்து வைத்துள்ள பொடி, ஏலக்காய்த்தூள், ஜாதிப்பூ, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். பின்னர் வறுத்து வைத்துள்ள தாமரை விதையைக் கைகளால் ஒன்றிரண்டாக உடைத்து (மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கலாம்) பாலில் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் குங்குமப்பூ, நெய்யில் வறுத்த திராட்சை மற்றும் உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை மேலே தூவி அலங்கரித்துச் சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம். கீர் திக்காக வேண்டுமென்றால் கண்டெண்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.

குறிப்பு:

தாமரை விதை சத்துகள் நிறைந்தது. வடமாநிலங்களில் நவராத்திரி மற்றும் தீபாவளியன்று தாமரை விதை கீர் செய்வார்கள். விரத காலங்களிலும் இந்த கீர் செய்து சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க:

புதினா இலைகள்- ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
ஓமம் - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

புதினா ஓமப்பொடி

செய்முறை:

மிக்ஸியில் புதினா, பச்சை மிளகாய், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, வெண்ணெய் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர், புதினா அரைத்த தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும். முறுக்கு பிழியும் குழலில் ஓமப்பொடி அச்சைப் போட்டுப் பிசைந்த மாவை வைத்து ஓமப்பொடியாகச் சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும் (மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். இல்லையென்றால் ஓமப்பொடி கருகிவிடும்). ஆறியவுடன் நொறுக்கி காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

குறிப்பு:

அரைத்த விழுதை அப்படியே மாவில் சேர்த்துப் பிசைந்தால் அது ஓமப்பொடி அச்சில் மாட்டிக்கொண்டு பிழிய வராது. அதனால் அரைத்த விழுதை வடிகட்டிக்கொள்ளவும். ஓமம் சேர்க்காமல் வெறும் புதினா மட்டும் சேர்த்தும் செய்யலாம்.



source https://www.vikatan.com/food/recipes/rajgira-burfi-oats-dry-fruit-mixer-lotus-seed-kheer-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக