முதல் குழந்தை சிசேரியன் என்றால், இரண்டாவது பிரசவமும் நிச்சயமாக சிசேரியனாகதான் இருக்குமா?
- மேனகப்பிரியா தாமோதரன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
``எல்லோருக்கும் இதற்கு ஒரே மாதிரியான பதிலைக் கொடுக்க முடியாது. இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்குமா, பிறக்காதா என்று தெரிந்து கொள்வதற்கு முன், முதல் பிரசவத்தில் ஏன் சிசேரியன் செய்யப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும்.
முதல் பிரசவத்தில், non recurrent indications என்று சொல்லக்கூடிய திரும்பத்திரும்ப நிகழாத பிரச்னைகளுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், இரண்டாவது பிரசவத்தில் நார்மல் டெலிவரிக்கு முயற்சி செய்யலாம்.
குழந்தையின் தலை கீழே இல்லாமல், பிட்டப்பகுதி கீழே இருக்கும் நிலை, குழந்தை குறுக்கே இருப்பது போன்ற காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தாலோ, குழந்தை வயிற்றுக்குள் மலம் கழித்துவிட்டாலோ, குழந்தைக்கு உள்ளே மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பது தெரிந்தாலோ, குழந்தையின் இதயத்துடிப்பில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலோ, பிரசவவலி வரவில்லை, வலியைத் தூண்டும் மருந்து கொடுத்தும் வலி வரவில்லை... போன்ற காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், இரண்டாவது பிரசவத்தை சுகப்பிரசவமாக்க முயற்சி செய்யலாம்.
அதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரே ஒரு குழந்தைதான் இருக்கிறது, தலை கீழே உள்ள நிலையில் இருக்கிறது, தாய்க்கு இரண்டாவது கர்ப்பத்தில் வேறு எந்தச் சிக்கலும் இல்லை, ஒருமுறைதான் சிசேரியன் நடந்திருக்கிறது, அதற்கான தையலும், கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில் தான் போடப்பட்டிருக்கிறது, கர்ப்பப்பையில் வேறு எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் வெஜைனல் பர்த் ஆஃப்டர் சிசேரியன் (Vaginal Birth After Cesarean Delivery (VBAC) முறைக்கு முயற்சி செய்யலாம்.
எல்லோருக்கும் இப்படி முதல் சிசேரியனுக்குப் பிறகு நார்மல் டெலிவரி ஆகிவிடுமா என்றால் இல்லை. முதலில் சிசேரியன் ஆனவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு VBAC முறையில் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு இருக்கிறது.
Also Read: Covid Questions: அடுத்த மாதம் பிரசவம்; பிறக்கும் குழந்தைக்கு தொற்று வராமல் எப்படிப் பாதுகாப்பது?
ஆனாலும் அதில் ரிஸ்க் அதிகம். VBAC வெற்றிபெற்றால் நல்லது. ஒருவேளை அது தோல்வியடைந்து எமர்ஜென்சியாக சிசேரியன் செய்யவேண்டி வந்தால், தாய்க்கும் குழந்தைக்கும் நிறைய பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. எனவே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்து இந்த விஷயத்தில் முடிவெடுப்பது நல்லது.
VBAC முறை, அதற்கான வசதிகளும் கட்டமைப்பும் உள்ள மருத்துவமனையில்தான் செய்யப்பட வேண்டும். 24 மணி நேரமும் சீனியர் மகப்பேறு மருத்துவரும் மயக்கவியல் மருத்துவரும் உள்ள, ரத்த வங்கி உள்ள, ரத்தம் கிடைக்கும் வசதியுள்ள மருத்துவமனையாக இருக்க வேண்டியது அவசியம்.
VBAC முயற்சி செய்யும்போது கர்ப்பப்பையின் முந்தைய தையல் விட்டுப் போகலாம். அதனால் தாய், சேய் இருவருக்கும் பிரச்னைகள் வரலாம். அதிக ரத்தப்போக்கும், செப்சிஸ் எனும் பாதிப்பும் வரலாம். எமர்ஜென்சியாக சிசேரியன் செய்யவேண்டிய நிலை ஏற்படலாம். எனவே கவனம் தேவை.
முதல் பிரசவம் சிசேரியன் என்றால் சில காரணங்களுக்காக அடுத்த பிரசவத்தை நார்மலாக்க முயற்சி செய்யக்கூடாது.
நஞ்சு கீழே இருக்கும் நிலை, ஏற்கெனவே ஒருமுறை கர்ப்பப்பை அழற்சி ஏற்பட்டிருப்பது, முந்தைய சிசேரியனில் ஏதோ காரணத்துக்காக மேல் பகுதியில் தையல் போடப்பட்டிருப்பது போன்ற நிலைகளில், சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யக்கூடாது.
Also Read: Doctor Vikatan: மொபைல் உபயோகிப்பதால் கை விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன; சரிசெய்ய முடியுமா?
அப்படிச் செய்தால் கர்ப்பப்பை தகர்வு ஏற்படவும், அதிக ரத்தப்போக்கு ஏற்படவும், தாய்க்கும் சேய்க்கும் பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் VBAC முறையைத் தவிர்த்து விடுவதே பாதுகாப்பானது.
முதல் மற்றும் அடுத்த பிரசவங்களுக்கு இடையே அதிக இடைவெளி விடாதவர்கள், பிரசவ தேதியைத் தாண்டியும் வலி வராதவர்கள், தாய் 40 வயதைக் கடந்தவராகவோ, பருமனாகவோ இருப்பது, குழந்தையின் சைஸ் பெரிதாக இருப்பது, முந்தைய தையல் மிகமெலிதாக இருப்பது போன்ற நிலைகளில் VBAC முறை தோல்வியடையலாம் என்பதால் சிசேரியன் செய்துகொள்வதே சிறந்தது.
தாய் 35 வயதுக்குள் இருந்து, பருமனாக இல்லாமல், குழந்தை பெரிதாக இல்லாமல், வேறு பிரச்னைகள் இல்லாமல், சரியான நேரத்துக்கு பிரசவ வலியும் வந்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு இரண்டாவது பிரசவம் நார்மலாக வாய்ப்புகள் மிக அதிகம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/will-the-2nd-baby-delivery-also-be-cesarean-if-the-1st-one-was-cesarean
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக