Ad

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

``மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!” - ஆரோவில் விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ்

புதுச்சேரிக்கு அருகில் தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஆரோவில் சர்வதேச நகரம். இந்த நகரத்தின் அனைத்து பணிகளும் ‘ஆரோவில் ஃபவுண்டேஷன்’ மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும். அதன் தலைவர் பதவிக் காலம் கடந்த 2021 நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக தமிழக ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டார். அதேபோல நிர்வாகக் குழு உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட 8 பேர் நியமிக்கப்பட்டனர். புதிய உறுப்பினர்கள் கலந்துகொண்ட முதல் நிர்வாகக் குழு கூட்டம் நவம்பர் 2-ம் தேதி நடைப்பெற்றது. அதையடுத்து கிரவுன் என்ற திட்டத்தின் கீழ் ஆரோவில் பகுதியில் சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டும் பணி துவங்கியது. அதற்கு ஆரோவில்லில் வசிக்கும் ஒரு பகுதியினரும், அப்பகுதி பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆரோவில் சர்வதேச நகரம்

இந்நிலையில்தான் ஆரோவில் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் சர்ச்சைக்குரிய கிரவுன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அங்கு வாழும் மக்களின் எதிர்ப்பையும் மீறி 500-க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கும், ஆரோவில் பசுமைப் பரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்க்கூடிய ஆரோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3,930 ஏக்கர் நிலப் பரப்பில் ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த பன்னாட்டு நகரத்தில் 1,150 ஏக்கரில் நகரப் பகுதியும், 2,780 ஏக்கர் பரப்பளவில் பசுமைப்பகுதியும் அமைந்துள்ளன. ஆரோவில் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால், சர்ச்சைக்குரிய கிரவுன் எனப்படும் திட்டத்திற்கான சாலை அமைப்பதற்காக அங்குள்ள மரங்களை அடியோடு சாய்க்கும் நடவடிக்கைகளை பன்னாட்டு நகர வளர்ச்சிக்குழு மேற்கொண்டிருக்கிறது. ஆரோவில் நகரத்தின் மையப்பகுதியில் 500 மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ள நகர வளர்ச்சிக் குழு, அதன் ஒரு கட்டமாக நவம்பர் 4-ம் தேதி மட்டும் ஜே.சி.பி எந்திரங்களின் உதவியுடன் 30 பெரு மரங்களை சாய்த்திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதையேற்று மரங்களை வெட்டும் பணி கைவிடப்படுவதாக அறிவித்த நகர வளர்ச்சிக் குழு நேற்று மீண்டும் மரங்களை வெட்டும் பணியை தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

மரங்கள் - கோப்புப் படம்

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நகர வளர்ச்சிக் குழுவின் இந்த போக்கு சரியானதல்ல. ஆரோவில் நகரத்தில் எந்தத் திட்டத்தை செயல்படுத்தினாலும், அதற்கு ஆரோவில் குடியிருப்பாளர்கள் அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்திற்கு அத்தகைய ஒப்புதல் எதுவும் பெறப்படவில்லை. மரங்களை வெட்டினால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மரங்களை வெட்டுவதால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்ததையடுத்து கிரவுன் திட்டத்திற்கான சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க அங்கு வாழும் மக்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நிர்வாகத்தில் உள்ள சில குழுக்கள் தங்கள் விருப்பப்படி சாலை அமைப்பதற்காக காடுகளை அழிப்பதாகத் தெரிகிறது.

ஆரோவில் பன்னாட்டு நகரத்தின் சிறப்பே அதன் அமைதியும், பசுமையும் தான். ஆரோவில் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியும், பரபரப்பும் நிறைந்தவை என்றாலும் கூட பன்னாட்டு நகரத்திற்குள் அவற்றின் சுவடுகளை பார்க்க முடியாது. வளர்ச்சியால் ஏற்படும் எந்த சீரழிவும் ஆரோவில் நகரத்திற்குள் இதுவரை நுழைந்ததில்லை. இயற்கையுடன் இணைந்து, குறைந்த நுகர்வு, குறைந்த கழிவு என்ற நோக்கத்துடன் ஆற்றல் வளங்களை வீணாக்காமல் வாழ வேண்டும் என்பது தான் ஆரோவில் நகரின் தத்துவம் ஆகும். அங்கு மகிழுந்துகள் கூட ஒரு கட்டத்திற்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. மிதி வண்டி தான் அதிகம் பயன்படுத்தப்படும் ஊர்தி ஆகும். அந்த அளவுக்கு அங்கு அமைதி பாதுகாக்கப்படுகிறது. ஆரோவில் நகரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வாழ முடியும் என்றாலும், இதுவரை 54 நாடுகளைச் சேர்ந்த 2,814 பேர் மட்டுமே அங்கு வாழ்கின்றனர்.

Also Read: ``அந்தமானிலிருந்து கப்பலில் வேட்பாளர்களை இறக்கியிருப்பேன்!" - கடலூரில் கடுகடுத்த ராமதாஸ்

பசுமை சொர்க்கம் என்று போற்றப்படும் ஆரோவில் நகரத்தின் காடுகளை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அழிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஆரோவில் நகரத்தில் 500 மரங்களை சாய்க்கப்படுவது சகித்துக் கொள்ள முடியாததாகும்; இது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. புவி வெப்பமயமாதல் குறித்த அச்சம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. புவிவெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தவும், அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்கவும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் ஆரோவில் நகரத்தில் 500 பெரிய மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, ஆரோவில் நகரத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆணையிட வேண்டும். தமிழக அரசும் இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/pmk-ramadoss-statement-regarding-arovil-tree-cutting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக