Ad

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

மதுரை: `பல லட்சம் ரூபாயில் நிழற்குடை அமைத்தும் பயன் இல்லை..! -பராமரிப்பு இன்றி மக்கள் அவதி

மதுரை தமுக்கம் மைதானத்தின் தமிழன்னை சிலைக்கு அருகிலும், எதிர்புறத்திலும் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. தற்போது பயணிகளின் நிழற்குடை சரியான பராமரிப்பின்றி பொது மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாநகரம் மதுரை. இம்மாநகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல வரலாறுகளும் , அடையாளச்சின்னங்களும் உள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க மாநகரில் அதன் அழகை குறைக்கும் விதமாக அசுத்தங்கள் நிரம்பி இருக்கின்றன.

மதுரை
மதுரை

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது 1981 ஜனவரி மாதத்தில் மதுரையில் 5 வது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றிய தலைவர்களின் நினைவினை போற்றும் வகையில் அவர்களின் மார்பளவு சிலைகளை மதுரை பகுதியில் அடையாள சின்னங்களாக அமைக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் திருவள்ளுவர், தொல்காப்பியர், தமிழ்தாத்தா உ.வே. சாமிநாத அய்யர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற பலருக்கும் மதுரையில் உள்ள ஒவ்வொரு பகுதிகளில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை

அதே காலகட்டத்தில், தமுக்கம் மைதான நுழைவு வாயிலில் தமிழன்னை தேரில் அமைந்திருப்பது போன்ற சிலையும் அதன் அருகில் சங்கரதாஸ் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் மதுரைக்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு மகிழவும் சிறந்த இடமாக விளங்குகின்றன. மிகவும் பிரபலமான தமுக்கம் மைதானத்தில் உலக தமிழ் மாநாடு, பல அரசியல் கட்சிகளின் மாநாடுகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என பல நடைபெற்றதுண்டு. குறிப்பாக சித்திரை திருவிழா மற்றும் கோடைகால கண்காட்சியும் இந்த மைதானத்தில் நடைபெறும். அப்போது ஏராளமான மக்கள் ஒன்று கூடுவார்கள்.

இப்படி பரபரப்பாக இருக்கும் தமுக்கம் மைதானம் முன்பும் அதற்கு எதிர்புறமும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக கடந்த 2017-2018 ம் ஆண்டில் ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் பயணிகளின் பேருந்து நிறுத்த நிழற்குடையை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. ராஜன்செல்லப்பா கட்டிக்கொடுத்தார். இதன் மூலம் கர்பிணிப்பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பலரும் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. நிழற்குடையானது நாளடைவில் சரியான பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. நிழற்குடைக்கு உள்ளே switch board வசதி கூட இல்லை.

மதுரை

இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு அரட்டை அடித்து கொண்டும், pubg, free fire போன்ற விளையாட்டுகளை விளையாடும் இடமாகவும் இதனை பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் மது அருந்துபவர்களும் இந்நிழற்குடையை பயன்படுத்துவதால் இரவு நேரங்களில் பொது மக்கள் அச்சத்துடனேயே அக்கட்டடத்தின் அருகில் நின்று பேருந்து ஏறுகிறார்கள்.

நிழற்குடைக்கு அருகாமையில் e-toilet அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகாமையில் கூட செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றமும் அதனை சுற்றி குப்பைகளும் போடப்பட்டு அருவருக்கத்தக்க நிலையில் உள்ளது.

மேலும் தமுக்கம் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் உள்ள கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில்( பெரியார் பஸ் ஸ்டாப்பிலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் வழியில்) தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர். ஆனால் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மலை நேரங்களில் தரை தளம் சமமாக இல்லாததால் தண்ணீர் தேங்கிவிடுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் அதிகமாக ஏற்படுகின்றன.

Also Read: விகடன் செய்தி எதிரொலி: வெளிச்சம் பிறந்தது; சீரானது பாரிமுனை பேருந்து நிலையம்! - அமைச்சர் நடவடிக்கை

இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களையும் சுற்றியும் மீனாட்சி கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அமெரிக்கன் கல்லூரி போன்ற பல இடங்கள் உள்ளன. இதனால் அதிகமான பயணிகள் பேருந்து நிறுத்தத்திற்கு வருவார்கள்.

தமுக்கம் பேருந்து நிறுத்தத்தில் மொத்தம் நான்கு பாகமாக பேருந்து நிழற்குடைகள் உள்ளன. ஒரே இடத்தில் இத்தனை பேருந்து நிறுத்தங்கள் உபயோகமற்றதாக உள்ளது.

தமுக்கம் பேருந்து நிறுத்தத்தின் தினசரி பயணிகளின் ஒருவரான அஹமத், ``பல லட்சம் செலவில் நிழற்குடை அமைத்தும் பொது மக்களுக்கு பயனில்லாமல் இருக்கிறது. e-toilet அருகில் கூட செல்ல முடியவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. சில ஆண்கள் நிழற்குடைக்கு பின்புற வெளியில் சிறுநீர் கழித்து விடுகின்றனர். இதனால் பிற மக்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. தமிழன்னையின் சிலைக்கு அருகில் இப்படி அசுத்தமாக உள்ளது. மாநகராட்சி ஆணையர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

- மாணவர் பத்திரிகையாளர்



source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-bus-stand-without-any-maintenance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக