Ad

சனி, 4 டிசம்பர், 2021

டெல்டாவை மிஞ்சும் ஒமிக்ரான்! - கொரோனா அப்டேட் தரும் உலக சுகாதார நிறுவனம்

'வலிமை' அப்டேட்டை விட அதிக அப்டேட் நமக்குத் தருகிறது கொரோனா. லேட்டஸ்ட் அப்டேட்டான ஒமிக்ரான் உருமாற்ற வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனம் தரும் தகவல்கள்:

* இப்போது டெல்டா வைரஸ்தான் உலகில் 99% கொரோனா தொற்றுக்குக் காரணமாக இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்த இடத்தை ஒமிக்ரான் பிடித்துவிடும்.

* இப்போதைய தொற்று வேகத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது ஒமிக்ரான். எனவே, விரைவில் உலக அளவில் தொற்று எண்ணிக்கை இருமடங்காக உயரலாம்.

* என்றாலும், 'கொரோனா சிகிச்சையில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். பயப்படத் தேவையில்லை' என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சீஃப் சயின்டிஸ்ட் சௌம்யா சுவாமிநாதன்.

கொரோனா

* 'இப்போது இருக்கும் தடுப்பூசிகளே இதிலிருந்தும் காக்கும். தேவை என்றால் மூன்றாவது பூஸ்டர் டோஸ் போடலாம். ஒமிக்ரானுக்கும் ஏற்றது போல தடுப்பூசியை மேம்படுத்தலாம்' என்கிறார் சௌம்யா.

* 'கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் ஒமிக்ரான் பரவலைத் தள்ளிப் போடலாம். ஆனால், தடுக்க முடியாது. ஒமிக்ரான் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதே இதை எதிர்கொள்ளும் வழி' என்பது சௌம்யாவின் வாதம்.

* பயோ என் டெக் நிறுவனத்தின் தலைவர் உகுர் சாஹின், ''புதிய உருமாற்றங்களை சமாளிக்கும்விதமாக புது கொரோனா தடுப்பூசியை நாம் உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என்கிறார்.

* இந்தியாவில் பயண வரலாறே இல்லாத பெங்களூரு டாக்டர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. அவர் எந்த அறிகுறியும் இல்லாமல் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

* ''விமான நிலையங்களைக் கண்காணிக்கிறோம். ஆனால், ஏற்கெனவே நம் சமூகத்தில் ஒமிக்ரான் தொற்று இருப்பதையே இது உணர்த்துகிறது'' என்கிறார், செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா.

* ''இந்தியாவின் பெரு நகரங்களில் முறையாக சோதனை செய்தால், இன்னும் பல ஒமிக்ரான் நோயாளிகளைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இது ஆபத்தில்லாத உருமாற்றமே'' என்கிறார் ராகேஷ் மிஸ்ரா.

* ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸுடன் கொரோனா வைரஸ் உறவாடியே இந்தப் புதிய ஒமிக்ரான் உருமாற்றத்தை அடைந்திருக்கிறது என்கிறார்கள் அமெரிக்க உயிரியல் நிபுணர்கள்.

* 'இதுவரை உலகெங்கும் நிகழ்ந்த உருமாற்றங்களில் ஒமிக்ரான் தான் மிக வேகமாகப் பரவும் வகை. குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்' என்கிறது தென் ஆப்ரிக்கா.

மும்பை விமானநிலையம்

* தென் ஆப்ரிக்க டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி. இவர்தான் ஒமிக்ரான் தொற்றுள்ள நோயாளியை முதன்முதலில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தவர். 30 வயது இளைஞர் ஒருவரே அந்த முதல் நோயாளி.

* ''பார்ப்பதற்கு அவர் ஆரோக்கியமாகவே தெரிந்தார். களைப்பு, உடல்வலி, தலைவலி, தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமே இருந்தன. இருமலோ, சுவை மற்றும் வாசனை இழப்போ இல்லை'' என்கிறார் அவர்.

* அந்த இளைஞரின் குடும்பத்தில் எல்லோருக்குமே ஒமிக்ரான் தொற்று இருந்தது. இதேபோன்ற அறிகுறிகள்தான். எனினும், 'எல்லோருக்குமே ஒமிக்ரான் தொற்று இப்படித்தான் இருக்கும் என சொல்லமுடியாது' என்கிறார் டாக்டர் கோட்ஸி.

* முகக்கவசம், தனிமனித இடைவெளி, தடுப்பூசி... ஒமிக்ரான் உள்ளிட்ட எல்லா கொரோனா தொற்றுகளையும் தடுக்கும் ஆயுதங்கள் இவைதான்.


source https://www.vikatan.com/health/healthy/is-omicron-dangerous-than-delta-who-gives-new-details

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக