சுச்சி தலைவிரி கோலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த நேரம் பிக்பாஸின் ஜாதகக் கட்டங்களில் ஏதோவொரு சாதகமான அசைவுகளை ஏற்படுத்தியிருக்கும் போல. இன்று பல சூடான சண்டைகள் நடைபெற்றன. ‘எதை எடுப்பது... எதை விடுப்பது’ என்று பிக்பாஸ் எடிட்டிங் ரூம் சந்தோஷத்துடன் திணறியிருக்கும். சுச்சியின் வரவால் ‘இது செம ஹாட் மச்சி’ என்கிற உற்சாக மொமன்ட்டில் இருக்கிறார் பிக்பாஸ்.
இன்றைய நிகழ்வுகளுக்குள் செல்வதற்கு முன்னால் சில விஷயங்கள்.
பிக்பாஸ் வீட்டில் முன்பெல்லாம் போட்டியாளர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு தடையுண்டு. அதற்கு தண்டனையும் இருந்தது. ‘நகரங்களைத் தாண்டி கிராமப்புற மக்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்’ என்பது போல் கமல் இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனால் இப்போதோ, கெளதம் மேனன் படம் போல சகட்டு மேனிக்கு ஆங்கிலம் இறைகிறது. ஏதோ அவார்டு படம் போல அதற்கு சப்-டைட்டில் எல்லாம் போடுகிறார்கள்.
சுச்சி உள்ளே வந்ததில் இருந்து ஒரே ஆங்கிலம்தான். அவர் ஏதோ பிக்பாஸில் பி.ஹெச்டி செய்தது போல மக்கள் வரிசையாக வந்து அவரிடம் அருள்வாக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். விடிய விடிய இந்த அருள்வாக்கு திருவிழா நடைபெற்றது.
முன்பெல்லாம் புது போட்டியாளர்கள் வீட்டிற்குள் தங்களின் அபிப்ராயங்களைச் சொல்லக்கூடாது என்பது போல ஒரு விதியிருந்தது. அது பழைய போட்டியாளர்களின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால். இப்போது அந்த விதியும் காற்றில் பறந்து விட்டது.
நாள் 29-ல் என்ன நடந்தது?!
சுச்சியை தனியாக ஒதுக்கிய ரியோ, “என் ராசிக்கு என்ன வந்திருக்குன்னு பாருங்க” என்று ஆவலாக கேட்க “நீங்க இதுவரை உங்க பிரச்னைக்கு மட்டும்தான் கோபப்பட்டிருக்கீங்க. இனிமே சனம் மாதிரி மத்தவங்க பிரச்னையிலயும் மூக்கை நுழைச்சு அடிச்சு ஆடுங்க. ஏழு கல் விளையாட்டுல நீங்க வந்தாலே மக்கள் உறைஞ்சு போயிடறாங்க. வெளிய போனப்புறம் நீங்க அந்த கேம்ல ஃபோகஸ் பண்ணீங்கன்னா இன்டர்நேஷனல் பிளேயர் ஆகிடலாம்” என்றெல்லாம் சுச்சி அடித்துவிட, புரிந்தது போலவே தலையாட்டி விட்டு விபூதியை பிரசாதமாக வாங்கிக் கொண்டு பவ்யமாக கிளம்பினார் ரியோ.
அடுத்த பக்தராக வந்தவர் சுரேஷ். “நீங்க வாக்குமூல அறைல போயி ஒப்பாரி வெச்சப்புறம் மறுபிறவி எடுத்திட்டீங்க” என்று சுச்சி அருளாசியை ஆரம்பித்தவுடன் ‘அதான் என் ஸ்ட்ராட்டர்ஜி’ என்று கெத்தை விடாமல் மல்லுக்கட்டினார் சுரேஷ். (பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படும் நாளில் கூட ‘ஹே ஹே... இதுதான் என் ஸ்ட்ராட்டர்ஜி’ என்று சுரேஷ் அனத்திக் கொண்டேயிருப்பார் போல). ‘சூப்பர் சிஷ்யா’ என்று அவருக்கும் அருளாசி வழங்கி அனுப்பி வைத்தார் சுச்சியம்மன்.
கிச்சன் டேபிளில் புது கேப்டன் சாம் தன்னுடைய கெத்தை காட்ட ஆரம்பித்தார். “இங்க குரூப்பிஸம் இருக்குன்னு சொல்றாங்க. அதை பிரேக் பண்ணணும். இனிமே காலைல பல்லு வெளக்கறீங்களோ இல்லையோ... முதல் வேலையா ஒவ்வொருத்தரும் ‘கட்டிப்பிடி’ வைத்தியம் செய்றது அவசியம். இனிமே கொட்டிக்கறதா இருந்தா டைமுக்கு வாங்க. காலைல ரேஷன் கடைல வாங்கின அரிசி ரேஷன் முறைலதான் கிடைக்கும்" என்றெல்லாம் புதிய விதிகளை அவர் அள்ளி இறைக்க, “நான் தண்டால் எடுத்தப்புறம்தான் சுண்டல் சாப்பிட வருவேன். யாரும் தலையிடக்கூடாது” என்று எதிர்வாதம் செய்ய முயன்றார் ஆரி.
“ஏம்ப்பா சும்மாவே இருக்கீங்க... ஏதாவது பண்ணுங்க” என்கிற அட்வைஸ் தரப்பட்டதாலும் எவிக்ஷன் பிராசஸ் சூடு பிடித்திருப்பதாலும் ஒவ்வொருவரும் தங்களின் இருப்பை அழுத்தமாக காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இத்தனை ரணகளத்திலும் ஷிவானி மிக்ஸர் பாக்கெட்டை கீழே வைப்பதாக இல்லை.
சில பேர் பொறுப்பிற்கு வந்த பிறகுதான் அதுவரை அடங்கியிருந்த பழைய பூதங்கள் எல்லாம் உற்சாகமாக கிளம்பி விடும். அப்படியொரு ராசி அவர்களுக்கு. ‘ஏண்டா பொறுப்புக்கு வந்தோம்’ என்று ஆகிவிடும். சாமின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. பழைய கேப்டன் அர்ச்சனாவின் மீதுள்ள கோபத்தையும் இணைத்து புது கேப்டன் சாமிடம் காட்டத் தொடங்கினார் ஆரி. ''இனிமே என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள். கேப்டன்-ன்னு சொன்னா எனக்கு அது விஜயகாந்த் மட்டும்தான்” என்று கைகளை முறுக்கி கண்கள் சிவக்க கோபமானார்.
அடுத்ததாக அனிதாவிற்கு அருள் வாக்கு தந்து கொண்டிருந்த சுச்சியம்மன், “நீங்க அழறதுக்கு யாரும் வெளில எரிச்சல் ஆகவேயில்லை” என்று சொன்ன போது பிக்பாஸ் கட்டடமே அதிர்ச்சியில் ஒருமுறை குலுங்கியது. சுச்சி வெளியில் பார்த்து விட்டு வந்திருப்பது, தமிழ் பிக்பாஸா அல்லது தெலுங்கு பிக்பாஸா ?!
அனிதாவின் ‘லொடலொட’ பேச்சையும் மூன்று நாளைக்கு ‘ஸ்பேஸ்’ விடாமல் மூக்கு சிந்துவதையும் சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து கொண்டாடுகிறார்கள். இவையெல்லாம் சுச்சியின் கண்களுக்குத் தெரியவில்லையா அல்லது ‘இந்தப் பெண்ணை இன்னமும் ஏற்றி விட்டு வேடிக்கை பார்ப்போம்’ என்கிற உத்தியா என்று தெரியவில்லை. இதைக் கேட்டுவிட்டு அனிதா தனது பண்டரிபாய் வேடத்தை இன்னமும் எக்ஸ்ட்ரா சதவிகிதம் கூட்டி விடுவாரோ என்பதுதான் இப்போதைய திகில்.
பாலாஜியும் சனமும் கார்டன் ஏரியாவில் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக நடித்துக் கொண்டிருந்தார்கள். ‘உன்னை எனக்குப் பிடிக்காது’ என்று ஒருவர் சொல்ல, ‘உன்னை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது' என்று இன்னொருவர் சொல்ல... இப்படியாக அரைமணி நேரத்திற்கு மேல் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். ‘நீ ஏன் வெளில போகலைன்னு எனக்கு வருத்தமா இருக்கு. என் லிஸ்ட்லயே நீ இல்ல... கெளம்பு... காத்து வரட்டும்’ என்று பாலாஜி அலப்பறை செய்ய “ஏன்... நீ போ” என்று பதிலுக்கு மல்லுக்கட்டினார் சனம்.
இப்படி விளையாட்டும் சீரியஸமுமாக பேசிச் செல்லும் போது பாலாஜியின் பின்பக்கத்தில் விளையாட்டாக எட்டி உதை்தார் சனம். அப்போது அவருக்குத் தெரியவில்லை, அவர் எட்டி உடைத்த இடமும் தருணமும் கொழுத்த ராகுகாலத்துடன் தொடர்புடையது என்று. டாம் & ஜெர்ரி மாதிரி ஒருவரையொருவர் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தாலும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமலும் இருக்கிறார்கள்.
சுச்சியின் அடுத்த டார்கெட் அர்ச்சனா. “பாலாஜி பத்திய கிண்டலுக்கு வீட்டுக்குள்ள சிரிச்சுட்டு அடுத்த ரெண்டாவது நிமிஷத்துல வெளியே வந்து ‘நான் உன் அம்மாடா'-ன்னு ஏன் சீன் போட்டீங்க?” என்று ‘அன்னை அர்ச்சனா’ வேடத்தை வெளிப்படையாக கலைத்துப் போட்டார் சுச்சி.
"அது காமெடி சீன்... இது சென்ட்டிமென்ட் சீன்… சரிடா பாலாஜி. நான் இனிமே உன் அம்மா இல்ல... அது கேன்சல்... இனி உன் கேமை நீ விளையாடு... என்னை காலி பண்ணு" என்று சலித்துக் கொண்ட அர்ச்சனா, “அப்படியிருந்தாகூட நான் அன்பை கொடுத்துக்கிட்டேதான்டா இருப்பேன்” என்று மீண்டும் சென்ட்டியை கையில் எடுத்தார். ஏதோ அன்பிற்கே ஹோல்சேல் ஏஜென்ட் அர்ச்சனாதான் என்பது போல் ஆகி விட்டது. இனி ‘அன்பே சிவம்’ என்பதை ‘அர்ச்சனா’ என்று மாற்றி விடலாம்.
“நீ இந்த வீட்டோட கிருஷ்ணன். உன்னைச் சுற்றி எப்போதும் கோபியர்கள் மயில் டானஸ் ஆடுவது பார்க்க ரம்மியமாக இருக்கிறது" என்பதாக பாலாஜியை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் சுச்சி. "நான் ஷிவானி கிட்ட தெளிவா சொல்லிட்டேன். இது ஒரு ஸ்ட்ராட்டர்ஜி மட்டும்தான்னு. நான் எமோஷனை வெச்சு விளையாட மாட்டேன்" என்று ஜாக்கிரதையாகப் பேசினார் பாலா. (பழைய சீஸன் ஆரவ் – ஓவியா, மருத்துவ முத்தம் பஞ்சாயத்தெல்லாம் பாலாவிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்).
"அவங்க உன்னை யூஸ் பண்ணிக்கும் போது நீயும் பண்ணிக்கலாம்... தப்பேயில்லை" என்று கியரை மாற்றினார் சுச்சி.
“யோவ் பிக்பாஸூ... போய் உன் ஓனரை வரச் சொல்லு" என்கிற மிகையான தன்னம்பிக்கை நிலையில் பாலாஜி இப்போது உலாவுகிறார். யாரைப் பார்த்தாலும் ‘நான்தான் உன்னை ஜெயிக்க வைச்சேன்’ என்று ஈகோவோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்.
எனவே அதே போதையில், “தாத்தா... மியூசிக் சேர் விளையாட்டுல நீங்களா ஜெயிச்சேன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா? நான்தான் உங்களை ஜெயிக்க வெச்சேன்" என்று சொல்லிவிட சுரேஷ் அதை தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டார். மட்டுமல்லாமல் புது வரவு சுச்சி முன்பாக இதைச் சொன்னது அவரின் கூடுதல் கோபத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது.
போகிறவர்கள், வருகிறவர்களிடம் எல்லாம் ‘பாலாஜி இப்படிச் சொல்லிட்டான்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார் சுரேஷ். சிஷ்யர்கள் தங்களை மீறி முன்னேறும் போது சில குருமார்கள் 'ஆடுகளம்' பேட்டைக்காரனாகி விடுவார்கள். அதை தன்னுடைய தன்மானத்திற்கு சவாலாக எடுத்துக் கொள்வார்கள். சுரேஷூம் அந்த மனநிலையில்தான் இருக்கிறார் போல. ‘கூட இருந்துக்கிட்டே குழி தோண்டக்கூடாது’ என்று பாலாஜியை ஜாடை மாடையாக திட்டிக் கொண்டிருக்கிறார்.
**
நாள் 29 விடிந்தது. ‘என் உச்சி மண்டலை சுர்ருங்குது’ என்கிற பாடலின் வரி இன்று பெரும்பாலோனோருக்குப் பொருந்தும். அந்த அளவிற்கு மண்டைச் சூட்டுடன் அலைந்தார்கள். ஷிவானியின் பாணியை நகலெடுத்து வீட்டிற்குள் தனியாக சாமியாடிக் கொண்டிருந்தார் புது வரவு சுச்சி.
பாலாஜியை எழுப்பி பல்தேய்த்து விட்டு முகம் கழுவி உடை மாற்றி விடும் ஸ்பெஷல் டெபுடேஷனில் ஷிவானியை பணியமர்த்தியிருக்கிறாராம் புது கேப்டன் சாம். ‘அய்யாங்... நான் செய்ய மாட்டேன்’ என்று ஷிவானி சிணுங்கினாலும் சந்தோஷத்துடன் செய்வார்தான் போலிருக்கிறது.
“ஏண்டா தம்பி... இந்த வீட்லதான் இருக்கியா?” என்கிற வசனத்தைக் கேட்டு கேட்டு ஆஜித்திற்கு வெறி ஏறியிருக்கும் போல. மட்டுமல்லாமல் கடந்த வார எவிக்ஷனில் மயிர்இழையில் தப்பித்து விட்டார். எனவே அவர் பாட்டு கிளாஸ் எடுக்கும் போது ‘நொய்.." நொய்’ என்று பேசிக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘சும்மா இருக்க மாட்டீங்களா?” என்று கத்தி விட்டார். விளையாட்டுப் போக்கில் சனத்தை ‘தறுதலை’ என்று பாலாஜி சொல்லி விட மெளனக் கோபத்துடன் விலகி நின்றார் சனம்.
அயல்மொழிக்காரர்களுடன் புழங்குகிறவர்களுக்கு எப்போதுமே ஒரு பாதுகாப்பற்ற உணர்ச்சி இருக்கும். அவர்கள் உள்ளூர் மொழியில் செய்யும் சாதாரண கிண்டலுக்கு கூட ‘என்னமோ அசிங்கமா திட்றானோ’ என்று தோன்றி கோபத்தை ஏற்படுத்தி விடும். சனமும் இந்த நிலையில்தான் இருக்கிறார் போலிருக்கிறது. அதிலும் தன்னுடைய பிரியமான எதிரியான பாலாஜி சொல்லும் வார்த்தைகளில் ஏதாவது விஷமம் கலந்திருக்கிறதோ என்று டிக்ஷனரியைப் புரட்ட ஆரம்பித்தார்.
‘தறுதலை’ என்கிற வார்த்தை சனத்தை ரொம்பவும் தொந்தரவு செய்து விட்டதால், அவரது வழக்கம் போல, ஆறு மாதம் கழித்து வந்து அதைப் பற்றி பாலாஜியிடம் விசாரித்தார். சனத்தின் வார்த்தைகளின் தொனி கடுமையாக சென்றாலும் ஒரு கட்டம் வரைக்கும் பொறுமையைக் கடைப்பிடித்த பாலாஜி, அதற்குப் பிறகு பொறுக்க முடியாமல் பதிலுக்கு எகிறிக் கொண்டு செல்ல இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம் நடந்தது.
‘குஷி’ படத்தின், ‘என் இடுப்பை நீ பார்த்தே... இல்ல நான் பார்க்கலை’ காட்சிக்குப் பிறகு ஹிட் ஆன காட்சி இதுவாகத்தான் இருக்க வேண்டும். “ஏன் என் பின்பக்கத்துல நீ உதைச்சே?” என்று பாலாஜி எகிற, முதலில் அதை அமைதியாகக் கடந்துபோக நினைத்த சனம், கொஞ்ச நேரத்தில் சூடாகி ‘பதிலுக்கு நீயும் உதைச்சுக்கோ” என்று பல முறை சொன்னார்.
‘இனிமே என் கூட பேசாத’ என்பதுதான் பாலாஜியின் தரப்பு. ஆனால் சனத்தினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. வலிமை மிக்க போட்டியாளரான பாலாஜியின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு விலகியிருக்க அவர் விரும்பவில்லை. ஆனால் சண்டையிடாமலும் அவரால் இருக்க முடியவில்லை.
நேற்று இரவு சனம் தன்னை பின்பக்கத்தில் விளையாட்டாக எட்டி உதைக்கும் போது ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டாரா பாலாஜி? அப்படி ஸ்போர்ட்டிவாக இருந்தால் ஏன் தறுதலை என சனத்தை சொன்னார்? பாலாஜி சொன்னது போல் இதைப் பற்றி சனம் தனியாக விசாரித்திருந்தால் பாலாஜி விளக்கம் அளித்திருக்கலாம். மன்னிப்பு கூட கேட்டிருக்கலாம். ஆனால் பொதுச்சபையில் சனம் கேட்டதால், 'ஆண் குறில் அல்ல நெடில்' என்கிற ஈகோ பாலாஜிக்கு வந்துவிட்டது. கையை எல்லாம் ஓங்கிக்கொண்டு சனத்தை நோக்கி பாலாஜி போனது கடுமையான கண்டனத்துக்குரியது.
பாலாஜிக்கும் சனத்திற்கும் இடையிலான சண்டையை கிட்டத்தட்ட எல்லோருமே தடுப்பதுபோல் தடுத்து, ஒதுங்குவதுபோல் ஒதுங்கி இருக்க சனத்துக்காக எதிரியைப் பழிதீர்க்க உள்ளே வந்தார் ஆரி. “அவங்க உன்னை விட வயசுல பெரியவங்க... மரியாதையா சண்டை போடு’ என்று சொல்ல “யப்பா... டேய்.… இவனைக் கூப்பிட்டுட்டு போங்கடா... அட்வைஸ் பண்ணியே கொல்றான்" என்று சூடானார் பாலாஜி.
சனம் தன்னை ‘அவன் இவன்’ என்று சொல்லும்போது தான் ஏன் பதிலுக்கு ‘அவ இவ’ என்று கேட்கக்கூடாது என்பது பாலாஜியின் வாதம். ‘அவன் இவன்’ திரைப்படத்தைக் கூட பார்க்காத அளவிற்கு அந்த வார்த்தைகளின் மீது பாலாஜிக்கு கடும் அலர்ஜி வேறு இருக்கிறது. அதை சனம் சொல்லலாமா?
"அடேய் பாலாஜி... உன் ராஜதந்திரத்துல தீய வைக்க.. என்னை ஏண்டா கேப்டன் ஆக்கினே” என்று சாம் மனதிற்குள் ஆயிரம் முறை புலம்பியிருப்பார் போலிருக்கிறது. பாவம். இன்று முழுவதும் சொம்பை தூக்கிக் கொண்டு பஞ்சாயத்து செய்யவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.
“தர்றதுக்கு எனக்கு ஆயிரம் கன்டென்ட் இருக்கு. நான் ஒண்ணும் உன்னை நம்பியில்ல” என்று பாலாஜியை நோக்கி சனம் கத்தியதுதான் இந்தச் சண்டையின் ஹைலைட். ("யம்மா... தாயி... ஆயிரம் கூட வேணாம். ஒரு நூறையாவது இறக்கிப் போடும்மா” என்று உள்ளுக்குள் இருந்து பிக்பாஸ் இறைஞ்சிக் கொண்டிருக்கலாம்).
‘என்னால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள்’ என்கிற பாலாஜியின் ஸ்டேட்மென்ட் சுரேஷை ரொம்பவும் தொந்தரவு செய்துவிட்டது. அடிபட்ட புலி மாதிரி உறுமிக் கொண்டிருந்தார். மிக்சர் பாக்கெட்டுடன் பாவமாக அமர்ந்திருந்த ஷிவானியை நோக்கி ‘உயிருள்ள ஜடமா இது... commodity-ஆ என்ன?’ என்றெல்லாம் கத்தி விட்டுப் போக “என்ன ஆச்சு இந்த பெருசுக்கு?” என்று சாமும் ஷிவானியும் திகைத்து அமர்ந்திருந்தார்கள். "அது ஏண்டா என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்டே?” என்கிற மாதிரியே புரியாமல் ஷிவானி அமர்ந்திருந்தார்.
சுரேஷின் கோபமும் அனத்தலும் புரியாதவர்களுக்கான பொழிப்புரை இது:
“நீயும் ஷிவானியும் இணைந்து உலவுவதைப் பார்க்க அழகாக இருக்கிறது. அது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவையைச் சேர்க்கும். இதை நீங்க தொடரலாம்" என்றொரு ரொமான்ட்டிக் ஆலோசனையை பாலாஜியிடம் முன்இரவில் சொன்னார் சுச்சி.
இதை சுரேஷ் தவறாகப் புரிந்து கொண்டாரோ அல்லது பாலாஜியின் மீதுள்ள கோபத்தால் வேண்டுமென்றே திரித்தாரோ தெரியவில்லை. “இப்படியெல்லாம் லவ் டிராக்கிற்கு ஐடியா தரணுமா... இதெல்லாம் ஒரு பொழப்பா... த்தூ...” என்று திட்டுகிற நிலைக்கு சுரேஷ் சென்று விட்டார்.
இதன் மூலம் பாலாஜி மற்றும் சுச்சி ஆகிய இருவரையும் ஒரே ஆயுதத்தால் சுரேஷ் அடிக்க முயல்கிறாரா என்று பார்க்க வேண்டும். ஆனால் இந்த கிராஸ் ஃபயரில் மாட்டிக் கொண்ட பரிதாப ஜீவன் என்று ஷிவானியைச் சொல்ல வேண்டும்.
அது சரி, சுச்சி மீது ஏன் சுரேஷிற்கு கோபம் வர வேண்டும்? அது இன்னொரு டிராக். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் மாதிரி இன்று பிக்பாஸ் வீட்டில் பல டிராக்குகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து வெடித்தன.
‘தாத்தா... தக்காளி கொழ கொழன்னு இருக்கு... பாருங்க... தூக்கிப் போடலாமா... இல்ல யூஸ் ஆகுமா?” – இப்படியொரு கேள்வியை புன்னகை அரசி ரம்யா கேட்டு புதிய பஞ்சாயத்திற்கு காரணமாக அமைந்தார்.
“தூக்கிலாம் போட வேண்டாம்... உடனே எடுத்து தொக்கு பண்ணி வெச்சிடலாம்" என்று சோஃபாவில் சயனம் கொண்டபடியே சுரேஷ் சொல்ல, “எழுந்து வந்து பாருங்க... அங்க இருந்தே சொல்லாதீங்க.. அது அழுகிப் போயிடுச்சு” என்று எரிச்சலான தொனியுடன் சுச்சி சொல்ல, சுரேஷுக்கு பிபீ ஏறியது.
"இது முதல் எச்சரிக்கை. இனிமே அந்தப் புது பொண்ணு என்கிட்ட ராங் பண்ணிச்சின்னா வண்டை வண்டையா கேட்பேன்” என்று கேப்டன் சாமிடம் சபதம் எடுத்துக் கொண்டிருந்தார் சுரேஷ்.
‘நம் சிஷ்யர்கள் எல்லாம் முன்னே சென்று கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் நாம் அமைதியாக இருந்தால் நம் தலையில் தக்காளி அரைத்து விடுவார்கள்’ என்கிற எண்ணம்தான் சுரேஷ் பழைய அவதாரத்தை கையில் எடுப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
வந்த முதல் நாளிலேயே ஏதாவது ஸ்கோர் செய்யலாம் என்று சுரேஷிடம் வெடித்த சுச்சி, சுரேஷ் அடைந்த கொலைவெறி காண்டைப் பார்த்தவுடன் ‘ச்சீ... மனுஷனா இந்தாளு’ என்று ஒதுங்கி விட்டார். சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் வெர்ஷனை மட்டும்தான் வெளியில் பார்த்திருப்பார். முழு வெர்ஷனை வீட்டுக்குள் பார்த்ததால் மிரண்டு விட்டார் போல.
ஆக... அனைத்து லேயர்களையும் கவர் செய்து விட்டேன் என்றே நினைக்கிறேன்.
**
அடுத்ததாக திங்கட்கிழமையின் வில்லங்க வைபவம். நாமினேஷன் சடங்கு. இம்முறை எடிட்டிங் டீம் ஓவர்டைமில் வேலை செய்து ‘ப்ரமோவில் காட்டுவது போலவே’ சட்சட்டென்று பெயர்களை மாற்றி மாற்றிக் காட்ட ஃபாலோ செய்து குறிப்பெழுதிக் கொள்ள சிரமமாக இருந்தது.
வழக்கம் போல் ‘அட்வைஸ்’ ஆரியும் ‘ஆங்க்ரி பேர்ட்’ அனிதாவும் பட்டியலின் முதல் இடத்தைப் பிடித்தார்கள். இந்த வீட்டில் குரூப்பிஸம் இல்லை என்கிற பிடிவாத ஸ்டேட்மென்ட்டை ரியோ கூட விட்டு விடுவார் போலிருக்கிறது. நிஷா விட மாட்டேன்கிறார். “ஆரி இங்க வரும் போது டிரெஸ் கூட எடுத்து வராம வெறுமனே வாயை மட்டும்தான் எடுத்து வந்திருக்கிறார் போல” என்பது போல் பாலா அடித்த கமென்ட் தனியாகத் தெரிந்தது.
தான் இயல்பாக சொன்னதை கேவலமான முறையில் திரித்துச் சொன்ன சுரேஷின் மீது கொலைவெறியில் இருந்தார் சுச்சி. எனவே அவரை நாமினேட் செய்தார்.
ஆக நாமினேட் ஆனவர்களின் பட்டியல்: ஆரி, அனிதா, பாலா, சனம், அர்ச்சனா, சோம் மற்றும் சுரேஷ்.
“என்னது.. இந்த லிஸ்ட்ல என் பெயர் இல்லையா? நம்பவே முடியலை... இதுல ஏதோ சதியிருக்குன்னு நெனக்கறேன்” என்று சந்தோஷக் கூச்சலுடன் குழந்தை மொழியில் கத்தி இன்னொரு ‘அனிதா’வாக மாறினார் ரியோ. இதைப் போலவே இந்த வாரம் தப்பித்ததில் ஆஜித்திற்கும் மகிழ்ச்சி.
இல்லை... அனைத்து லேயர்களும் கவர் ஆகவில்லை. இன்னுமொன்று இருக்கிறது. ஒரு பஞ்சாயத்திற்கான திரியை ஏற்றி வைத்து விட்டு பிறகு அட்மாஸ்ஃபியர் ஆர்டிஸ்ட் போல் பின்னணியில் உலவுவதை ரமேஷ் ஒரு பொழுதுபோக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
“ஏம்மா... புது கேப்டன். ரூம் எல்லாம் குப்பையா இருக்கு... என்னான்னு கேட்க மாட்டீங்களா?” என்று சாமை உசுப்பேற்றி விட... அப்போதுதான் சொம்பிற்கு ஓய்வு கொடுத்து விட்டு ‘அக்கடா’ என்று உட்கார்ந்திருந்த கேப்டன் வெறுப்புடன் சொம்பை தூக்கிக் கொண்டு மறுபடியும் கிளம்பினார். அவர் பஞ்சாயத்திற்கு சென்றது ஆரியிடம். எனவே அது சீக்கிரம் முடியுமா என்ன? பெருக்கும் விஷயமானது பெருக்கல் வாய்ப்பாடு போல நீண்டு கொண்டே சென்றது.
ஆரியின் தரப்பில் கேட்கப்படும் விஷயம் நியாயமாகத்தான் தெரிகிறது. “பழைய ஹவுஸ்கீப்பிங் டீம் தனது வேலைகளை முடித்து விட்டு சுத்தமான நிலையில் புது அணியிடம் ஒப்படைப்பதுதானே நியாயம். அது போல் தரச் சொல்லுங்கள்" என்று ஆரி கேட்க பழைய அணியிடம் போய் பேச முடியாமலும் புதிய அணியிடம் மல்லுக் கட்ட முடியாமலும் திணறினார் சாம்.
‘இனிமே நெத்தில அடிச்ச மாதிரி குறைகளைச் சுட்டிக் காட்டுவேன்’ என்று கடந்த வாரம் சபதம் எடுத்த ஆரி, இப்போது சாமிடம் இருக்கும் பழைய மனஸ்தாபங்களையெல்லாம் இணைத்து தூசு தட்டி கலந்து அடித்துக் கொண்டிருந்தார். ஆரி, நான் கடவுள் ‘ஆர்யா’ மோடிற்கு மாறி உக்கிரமான முகத்தைக் காண்பிக்க திகைத்துப் போனார் சாம்.
ஆரிக்கும் சாமிற்கும் இப்படியாக ரணகளமான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது தூரத்தில் ஓர் உருவம் அமைதியாக துணிகளை காய வைத்துக் கொண்டிருந்ததை கேமரா காட்டியது. அது ரமேஷ். இந்தப் பிரச்னைக்கு திரி கொளுத்திப் போட்டவரே அந்தப் புண்ணியவான்தான்.
‘புதிய வரவானது போட்டியாளர்களின் மனவோட்டங்களில் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்கிற ‘வாய்ஸ் ஓவருடன்’ இன்றைய நாள் முடிந்தது.
முட்டை, பொங்கல், சப்பாத்தி... இன்று தக்காளி... அடுத்த முறை எந்த உணவுப் பொருள் பஞ்சாயத்திற்குக் காரணமாக இருக்கும் என்கிற அரிய விஷயத்தை காத்திருந்து அறிந்து கொள்வோம்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/housemates-riot-bigg-boss-season-4-day-29-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக