கடந்த 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். ஆனால், இந்த வெற்றி குறித்து அமெரிக்கத் தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதேபோல், தேர்தல் தோல்வியை ட்ரம்ப் தரப்பும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலுக்கு எதிராகப் பல்வேறு மாகாணங்களில் ட்ரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. அதேநேரம், ஜோ பைடன் வென்றதாக அந்நாட்டு ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால், ரஷ்யா, சீனா தரப்பில் இருந்து வாழ்த்துத் தெரிவிக்கப்படவில்லை.
Also Read: இந்தியாவுக்கு புதிய வாசல்களைத் திறப்பாரா ஜோ பைடன்? - சவால்களும் எதிர்பார்ப்பும்
இந்தநிலையில், ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவிக்காதது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசியிருக்கிறார். அரசு தொலைக்காட்சி வாயிலாக ரஷ்ய மக்களிடம் பேசிய புதின், ``அமெரிக்க மக்களின் நம்பிக்கையைப் பெற்ற எந்தவொரு தலைவருடனும் பணியாற்ற ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் அங்கீகாரம் அல்லது தேர்தல் வெற்றி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே, ஒரு வேட்பாளர் மீது அந்த நம்பிக்கை ஏற்படும்’’ என்று தெரிவித்தார்.
மேலும், ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவிக்காததற்கு எந்தவொரு தனிப்பட்ட காரணமும் இல்லை என்று கூறிய புதின், அது வழக்கமான அரசு நடைமுறைதான் என்றும் குறிப்பிட்டார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறும் நோக்கில் ரஷ்ய உளவுத் துறை தேர்தல் நடைமுறைகளில் குறுக்கீடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ட்ரம்ப் தரப்பு, ரஷ்யா என இருதரப்புமே தொடர்ந்து மறுத்து வந்தன.
source https://www.vikatan.com/government-and-politics/international/russian-president-putin-speaks-about-not-congratulating-joe-biden
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக