Ad

புதன், 11 நவம்பர், 2020

திருவிடைமருதூர் குருபகவான் சந்நிதியில் குருப்பெயர்ச்சி சிறப்பு சங்கல்பவழிபாடு! கலந்துகொள்வது எப்படி?

குருப்பெயர்ச்சி 2020 - 21

நிகழும் சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.11.2020 அன்று சுக்லபட்ச பிரதமை திதி, சம நோக்குள்ள அனுஷம் நட்சத்திரம், சரத் ருதுவில், சுக்கிரன் ஓரையில், பஞ்சபட்சிகளில் கோழி ஊன் தொழில் புரியும் வேளையில், தட்சிணாயனப் புண்ய காலத்தில், இரவு 9 மணி 34 நிமிடத்தில், மிதுன லக்னத்தில் - நவாம்சச் சக்கரத்தில் கும்ப லக்னத்தில், பிரகஸ்பதி எனும் குருபகவான் தன் சொந்த வீட்டிலிருந்து சர வீடாகிய சனி பகவானின் வீடான மகர ராசிக்குள் நுழைகிறார்.

குருப்பெயர்ச்சி

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும் குருப்பெயர்ச்சி நாளில் 12 ராசிக்காரர்களுமே குரு பகவானை தரிசித்து வழிபடுவது நலமளிக்கும். மேஷம், கடகம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ராஜயோகத்தை வழங்குவார். ரிஷப ராசி லக்னகாரர்களுக்கு நன்மையையும் சுணக்கமும் கிடைக்கலாம். மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளுக்கு சில தடைகளும் சிரமங்களும் உண்டாகலாம். மகரம், கும்ப ராசிகளுக்கு சமமான பலன் தருவார். எனவே அதற்கேற்ப வழிபாடுகளும் பரிகார பூஜைகளும் செய்து கொள்வது நலமளிக்கும். தமிழகமெங்கும் பல்வேறு குரு ஸ்தலங்கள் உள்ளன. அவற்றுள் திருவிடைமருதூர் மிகவும் முக்கியமானது. கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 9 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடைமருதூர்.

பிரணவப் பிராகாரத்தில் அருளும் சாம்பவி தட்சிணாமூர்த்தி

திருவிடைமருதூர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வேறெங்கும் காண முடியாத வித்தியாச கோலம் கொண்டவர். பிரணவப் பிராகாரத்தில் ‘சாம்பவி தட்சிணாமூர்த்தி’ என்ற வடிவில் மகா வரப்பிரசாதியாக உள்ளவர். முயலகனை அதாவது அஞ்ஞானம்; சோம்பல் போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து ராஜ அலங்காரத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி திருக்கோலம் இங்கு மட்டுமே உள்ளது. தட்சிணாமூர்த்தி பெருமானின் 24 வடிவங்களில் இந்த வடிவம் தொன்மையானது என்பர்.

நவகிரகங்களில் தேவகுருவான பிரகஸ்பதிக்கும் மேலான குரு வடிவம் கொண்டவர் தட்சிணாமூர்த்தி பெருமான். பிறப்பிலா பெருமானாக தென்முகக் கடவுள் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற ரிஷிகளுக்கு போதிப்பவர். அஞ்ஞானம் நீக்கி ஞானத்தை போதிக்கும் இவரை வரும் குரு பெயர்ச்சி நாளில் திருவிடைமருதூரில் வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி குறைகள் விலகி நீங்காத செல்வத்தையும் புகழையும் பெறுவார்கள் என்பது ஐதிகம்.

திருவிடைமருதூர் லிங்கேஸ்வரர்

சிறப்பு சங்கல்பம் செய்ய தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

திருவிடைமருதூர் மகிமைகள்

ஒருவன் தான் செய்த பாவங்கள் மட்டுமின்றி அவனுடைய முந்தைய தலைமுறையினர் செய்த எல்லா பாவங்களையும் கூட நீக்கிக் கொள்ள உதவும் ஒரே தலம் திருவிடைமருதூர் என்று புராணங்கள் கூறுகின்றன. காசிக்கு நிகரான 6 தலங்களில் ஒன்றாகவும், சப்த ஸ்தான ஆலயங்களில் ஒன்றாகவும், பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்றாகவும் இந்த திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம் விளங்கி வருகிறது.

மருத மரத்தைத் தல விருக்ஷமாகக் கொண்ட மூன்று தலங்களில் இது இடையில் அமைந்துள்ளதால் திரு இடை மருதூர் என்றானது. வடக்கே முதலில் ஸ்ரீசைலம் என்ற மல்லிகார்ஜுனம், இடையில் இந்த திருவிடைமருதூர் என்ற மத்தியார்ஜுனம், கடைசியில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகேயுள்ள திருப்புடைமருதூர் என்னும் புடார்ஜுனம் அமைந்துள்ளன. இவை தலைமருது, இடைமருது, கடைமருது என்று போற்றப்படுகின்றன.

குருவுக்குச் செய்த துரோகத்தை நீக்க சந்திரன் தனது 27 மனைவிகளோடு இங்கு வந்து அருள் பெற்றான். அதனால் இது சந்திர தலமாகவும் உள்ளது. 27 மனைவியரும் நட்சத்திரங்களாகி 27 லிங்கங்களில் இங்கு கலந்ததால் இது அனைத்து நட்சத்திர பரிகார தலமாகவும் விளங்குகிறது.

அகத்தியருக்கு அருள் காட்சி அளித்து இங்கு எழுந்தருளிய அம்பிகை பிருகச் சுந்தர குஜாம்பிகை என்றும் பெருநலமுலையம்மை என்றும் வணங்கப்படுகிறாள்.

20 ஏக்கர் பரப்பளவில் ஏழு கோபுரங்கள், ஏழு பிராகாரங்கள், ஏழு கிணறுகள் கொண்டு இக்கோயில் விளங்குகிறது. 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் லிங்கங்கள், 12 ராசிகளைக் குறிக்கும் மகா மண்டபத் தூண்கள் என இங்கு ஒவ்வொன்றுமே சிறப்பானவை.

மருத நிலத்தின் அடையாளமான மருத மரம் சிறப்பான நோய் தீர்க்கும் ஒளஷதமாக விளங்குவது. இதனால் இங்கு வந்து தரிசிப்பவர்களின் சகல நோய்களும் தீரும் என்பதும் நம்பிக்கை.

இங்குள்ள விநாயகர் ‘ஆண்ட விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். இவரை வணங்கினால் ஆட்சி போகம், பதவி உயர்வு பெறலாம்.

பிரமாண்டமான இந்த அழகும் வரலாற்றுப் பெருமைகளும் சொல்லில் சொல்ல முடியாதவை. இந்த ஆலயத்தின் மூன்று பிராகாரங்களும் சிறப்பானவை. வெளியே உள்ள அஸ்வமேதப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுமாம். இடையில் உள்ள கொடுமுடிப் பிரகாரத்தைச் சுற்றினால் கயிலையை சுற்றிய பலன் கிட்டுமாம். உள்ளே இருக்கும் மூன்றாம் பிரணவப் பிராகாரத்தைச் சுற்றினால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டுமாம்.

சிறப்பு சங்கல்பம் செய்ய தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியைக் கருவறை மூர்த்தமாகக் கொண்டு அவரைச் சுற்றியுள்ள பரிவாரக் கோயில்களாக திருவலஞ்சுழி - விநாயகர், சுவாமிமலை - முருகர், திருவாரூர் - சோமஸ்கந்தர், சிதம்பரம் - நடராஜர்

ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி, திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர், திருசேய்நலூர் - சண்டிகேஸ்வரர், சீர்காழி - பைரவர், சூரியனார்கோவில் - நவக்கிரகம் என்று இந்த கோயிலின் பிரமாண்டத்தைக் கூறுவார்கள்.

மருத மரத்தடியே தோன்றிய சுயம்பு லிங்க மூர்த்தியான மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே பூஜித்துக்கொண்டு அதன் மூலம் சிவ பூஜா விதிகளை சப்தரிஷிகளுக்கு போதித்த தலமிது. இங்கு மார்க்கண்டேய ரிஷிக்கு அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்து அருளினார். என்பதால் தம்பதி நலனுக்கு இந்த ஆலயம் சிறப்பானது.

கொல்லூருக்கு அடுத்து இங்கு மட்டுமே பிரசித்தியான மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதிக்கு தெற்கே இந்த மூகாம்பிகை சந்நிதி உள்ளது. மூகாசுரனை சம்ஹரித்த சாபம் நீங்க மூகாம்பிகை இங்கு வந்து நிவர்த்தி பெற்றாராம்.

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தை மகாலிங்கேஸ்வரர் நீங்கியதால் இது சகல தோஷங்களும் நீக்கும் தலமாக விளங்குகிறது. வரகுணனைத் துரத்தி வந்த பிரம்மஹத்தி இன்றும் கிழக்கு வாசலிலேயே தங்கி உள்ளது. பாண்டியன் தோஷங்கள் நீங்கி சுவாமியின் ஆணைப்படி மேற்கு வழியாக வெளியேறினான். இதனால் இன்றும் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சுவாமியை தரிசித்து தோஷங்கள் நீங்கி, மேற்கு வாசல் வழியாக வெளியேறும் நிகழ்வு நடைபெறுகிறது.

இங்கு மட்டுமே தினமும் காலை வேளைகளில் மூன்று முறை தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டோர் பாவங்கள் நீங்கி சிறப்பான வாழ்வைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தேவார மூவர் மாணிக்க வாசகர் பட்டினத்தார் கருவூரார் அருணகிரிநாதர், காளமேகப் புலவர் பாடிய தலமிது. பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம் இது. திருநாவுக்கரச ஸ்வாமிகள் பாடிய பதிகப் பாடலின்படி பூச நாளில் இந்த கோயிலுக்கு வருவது சிறப்பானது எனப்படுகிறது. மேலும் இந்த ஆலயம் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பானது என்கிறார்கள்.

தற்போது எழும்பியிருக்கும் ஆலயம் 1,200 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். தருமை ஆதீனத்தின் ஆளுகையில் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. வேறெந்த ஆலயத்துக்கும் இல்லாத வகையில் இங்கு 32 தீர்த்தங்கள் உள்ளன. அதில் கல்யாணத் தீர்த்தம் எனப்படும் பூசத் தீர்த்தம் சிறப்பானது. தைப்பூசத் திருநாளில் இங்கு நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம். இங்குள்ள தீர்த்தங்களின் பெருமைகூற தனியே ஒரு புராணமே எழுதலாம் என்ற அளவுக்குப் பல திருக்கதைகள் உள்ளன என்கிறார்கள் பக்தர்கள்.

தட்சிணாமூர்த்தி

தபோவனம், ஜோதிநகர், சர்வ தீர்த்தபுரம், வில்வாரணியம், லிங்கவனம், மாக்ஷேத்திரம், மருதவனம், சண்பகாரணியம், சத்திபுரம், தரும விருத்திபுரம், முத்தி புரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம், தோஷ நிவர்திபுரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. இங்கு பார்வதி, விநாயகர், முருகர், கோடி ருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், திருமகள், சரஸ்வதி என சகல தேவர்களும் வந்து வழிபட்டுள்ளனர்.

இங்கு மட்டுமே ஈசனுக்குப் பூசைகள் நடந்த பிறகே கணபதிக்கு பூசைகள் செய்யப்படுகிறதாம்.

சிவ ரகஸ்யம், ஸ்காந்தம், லிங்கப்புராணம், பிரமகைவர்த்தம், தேவாரம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நாடகம், மும்மணிக் கோவை போன்ற பல புராண இலக்கியங்கள் இந்த ஊரின் பெருமையைக் கூறுகின்றன. இங்கு வழிபட்டே பட்டினத்தாருக்கு ஈஸ்வர அம்சமே மகனாக, மருத வாணனாகத் தோன்றியது என்பர்.

மகிஷாசூரனை மிதித்தப்படி இருக்கும் துர்க்கையின் சிலை இங்கு வித்தியாசமான அமைப்பு எனலாம். திருவாரூருக்கு அடுத்தபடியாக தொழுத கை கீழ் இறங்காத வண்ணம் ஏகப்பட்ட சந்நிதிகள் இங்குள்ளன. வரகுண பாண்டியனுக்கும் இங்கே ஒரு சிலை இருப்பது விசேஷம்.

உலகில் பிரளயமே உண்டானாலும் இருள் ஆண்ட முடியாத தலமாக இந்த திருவிடைமருதூர் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஆம், அன்னை சக்தி விளையாட்டாக ஈசனின் திருக்கண்களை மூடி விட சகல லோகங்களும் இருந்து விட்டதாம். ஆனால் மகாலிங்க மூர்த்தி மட்டும் ஜெகஜோதியாக ஒளிவிட்டு எழுந்தருளி இருந்தாராம். இதனால் இது ஜோதி புரம் என்றும் போற்றப்படுகிறது.

ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர், சொக்கநாதர் ஆலயங்கள் அமைந்து நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் கூறப்படுகிறது. இதில் மேற்கே எழுந்தருளியுள்ள சொக்கநாதர் ஆலயம் சிறப்பானது. இன்றும் மழையின்றி பஞ்சம் உண்டாகும் காலங்களில் இப்பெருமானுக்கு வழிபாடு செய்து மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாடி வழிபட்டால் அன்றே மழை பொழியும் அதிசயம் நடைபெறுகிறது.

கிழக்கு மட வீதியில் உள்ள நாயடியார் கோயில்தான், திருவோட்டை நாயின் மீது எறிந்து பத்திரகிரியார் முக்தி பெற்ற திருவிடம் எனப்படுகிறது. பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் சந்நிதிகள் கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் உள்ளது. தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய இங்குதான் ஓடுகின்றது.

பிரமஹத்தி, நட்சத்திர தோஷம், சந்திர திசை - புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனி திசை, ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்ற சகல தோஷங்களும் நீங்கி நலம் பெற இந்த ஆலய தரிசனம் பெரிதும் உதவும். மேலும் மனோ வியாதிகள் நீங்கும், திருமண வரம், குழந்தை வரம் கிட்டும். வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு போன்ற வரங்களையும் அருள்பவர் மகாலிங்க சுவாமி.

குருப்பெயர்ச்சி

சிறப்பு சங்கல்பம் செய்ய தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

தஞ்சை அரசின் ஆட்சி உரிமையை இழந்த பிரதாப சிம்மன் என்னும் அரசனின் காதலியான அம்முனு என்பவள், தாங்கள் மீண்டும் ஆட்சியைப் பெறவும் தங்கள் திருமணம் நிறைவேறவும் இங்கு வந்து லட்ச தீபம் ஏற்றினாள். மேலும் தானே பாவை விளக்கைத் தாங்கி நின்று அதுபோலவே ஒரு திருவிளக்கை செய்து கொடுத்ததும் தன் பிராத்தனையை நிறைவேற்றினாள். அந்த விளக்கு இன்றும் இந்த ஆலயம் பிரார்த்தனை நிறைவேற்றும் தலமென்பதைச் சொல்லியவாறே பிராகாசித்து வருகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவிடை மருதூரில் வாசகர்களின் நல்வாழ்வை எண்ணி உங்கள் சக்தி விகடன் குருப் பெயர்ச்சி பரிகார பூஜையை நடத்தவுள்ளது. அதன்படி 15.11.2020 அன்று விசேஷ பூஜைகளும் ஹோமமும் நடைபெறவுள்ளது. உங்கள் வசதிக்காக இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த வைபவத்தில் நீங்களும் கலந்து கொண்டு உங்கள் குடும்ப மற்றும் நண்பர்களின் நலன் வேண்டி சிறப்பு சங்கல்பம் செய்து கொள்ளலாம்.

இந்த குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமத்தை நேரடி முகநூல் பதிவிலும் கண்டு தரிசிக்கலாம். உங்களுக்காக நாங்கள் செய்யும் சிறப்பு அர்ச்சனையை பின்னர் வீடியோ வடிவிலும் காணலாம்.

சிறப்பு சங்கல்பம் செய்ய தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/functions/sakthi-vikatan-conducting-gurupeyarchi-special-sangalpam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக