Ad

புதன், 11 நவம்பர், 2020

தள்ளிப்போன பள்ளிகள் திறப்பு... அரசின் அறிவிப்பும் பின்னணியும்!

'கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து, அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்' என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதும் தமிழகத்தில், பள்ளிகளைத் திறக்க வேகவேகமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது தமிழக அரசு. ஒருவழியாக 9-12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நவம்பர் 16-ம் தேதி திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

2020 | கொரோனா

தமிழகத்தில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தவிர, கொரோனா இரண்டாம் அலை வீசும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. கூடவே, நம் கண் எதிரே, பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பெருவாரியான மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருக்கும்போது தமிழக அரசு இப்படியொரு முடிவை எடுப்பது சரிதானா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இப்படி பலமுனைகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வரவே, சுதாரித்த அரசு, 'பெற்றோர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளைப் பெற்றபிறகு அரசு இதுகுறித்து முடிவெடுக்கும்' என அறிவித்தது. அதன்படி கடந்த 9-ம் தேதி தமிழகத்தின் பெருவாரியான பள்ளிகளில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில், பெருவாரியான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க எதிர்ப்புத் தெரிவித்ததாகவே, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில், பள்ளிகள் திறக்க எதிர்ப்புத் தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கில் கருத்துத் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றமும், 'டிசம்பருக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமே' என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கிடையே, ''நவம்பர் 12-ம் தேதிக்குள் முதல்வர் இதுகுறித்து அதிகாரபூர்வமாக கருத்துத் தெரிவிப்பார்'' என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனும், ''நவம்பர் 12-ம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேதி அறிவிக்கப்படும்'' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மறு உத்தரவு வரும்வரை பள்ளிகள் திறப்பு கிடையாது என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பது ஒத்தி வைக்கப்படுகிறது, கல்லூரிகள் டிசம்பர் 2 முதல் இயங்க அனுமதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

''தமிழக அரசு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டதே மிகவும் தவறான அணுகுமுறை'' என்கிறார், குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியருமான சுடரொளி.

சுடரொளி

அவர் பேசும்போது,''கொரோனா குறித்து, உலக சுகாதார நிறுவனம் என்ன எச்சரிக்கை விடுத்திருக்கிறது, நம் நாட்டின் சுகாதார அமைப்புகள் என்னென்ன கருத்துக்களை முன்வைத்திருக்கின்றன, நம் மாநிலத்தில் கொரோனா பரவலின் நிலை என்ன ஆகிய தகவல்கள் அரசாங்கத்திடம்தான் இருக்கின்றன. அதனால், அரசுதான் இந்த விஷயத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குப் பாதகமில்லாத வகையில் முடிவெடுக்க வேண்டும். தவிர எந்தத் தகவல்களும் கொரோனா குறித்த போதிய மருத்துவ அறிவும் இல்லாத பெற்றோர்களிடமும் கருத்து கேட்டிருக்கத் தேவையில்லை. அதேபோல, மாணவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தாலும் அவர்கள் 'தீவிர நோய் பரப்பாளராக' (Super spreader) இருப்பார்கள். எனவே, அவர்களின் மூலம் ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

பள்ளிகளைத் திறக்க, முதலில் பள்ளிகள் அனைத்தும் சுத்தமாக தயார் செய்யப்பட்டிருக்கின்றனவா, அனைத்துப் பள்ளிகளிலும் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா... சமூக இடைவெளியைப் பின்பற்ற குறைவான மாணவர்களையே வகுப்பறையில் அமர வைக்கமுடியும் என்கிற நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா... தமிழகத்தில், அரசுப் பேருந்துகளில் கூட்டமாகப் பயணித்து பள்ளிகளுக்குச் செல்லும் நிலைதான் பெரும்பாலான மாணவர்களுக்கு உள்ளது. தற்போதைய கொரோனா காலகட்டத்தில் அது சரியாக வருமா, அதைத் தவிர்க்க சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டுள்ளனவா?

இதுதவிர, கொரோனா நெருக்கடியால். பெரும்பாலான மாணவர்கள் மன ரீதியாக பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்களை உளவியல் நீதியாக தயார் செய்யவேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. அதற்கு முதலில் ஆசிரியர்களுக்கு உளவியல் முதலுதவிக்கான பயிற்சிகளை வழங்கவேண்டும். அதை ஆன்லைனிலேயே தற்போது வழங்கலாம். இப்படி, அனைத்து விஷயங்களையும் தயார் செய்த பிறகு, நோய்த்தாக்கம் மற்றும் அதன்மீதான பயம் மாணவர்களுக்குக் குறைந்த பிறகு பள்ளிகளைத் திறக்கலாம்'' என்கிறார் அவர்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

தொடர்ச்சியாக, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது,

''2020-2021 கல்வி ஆண்டுக்கு, வகுப்பு வாரியாக குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது‌. பாடத்தைக் குறைப்பது, பள்ளி திறப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவைத் தமிழ் நாடு அரசு அறிவித்தது. அந்தக்குழு அறிக்கை தந்ததா, இல்லையா... என்ற தகவல் கூட இது வரை வெளியாகவில்லை. பாடத்திட்டம் குறைக்கப்படுமா, குறைக்கப்படாதா.... என்கிற கேள்விக்கு இது நாள் வரை தெளிவான பதில் இல்லை. பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் பள்ளிகளைத் திறக்கச் சொல்வது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும். அது குறித்த தெளிவான அறிவிப்பைப் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். தவிர, சுகாதாரப் பேரிடரின் காரணமாகத்தான் பள்ளிகள் மூடப்பட்டன. அப்படியிருக்க, பேரிடரின் தன்மையைச் சுகாதாரத்துறைதான் கணிக்க முடியும். அரசு இதில் அவசரம் காட்டக்கூடாது'' என்கிறார் அவர்.

Also Read: அமைச்சர் செங்கோட்டையனின் தடாலடி அறிவிப்புகளும் தடுமாறும் மாணவர்களும்! 

' கல்விக் கட்டணங்களை வசூலிக்க முடியவில்லை என தனியார் பள்ளிகள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகத்தான் அரசு இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது. அதனால்தான், அமைச்சர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசிவருகிறார்'' என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு.

எனவே, மேற்கண்ட விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அதேபோல கல்லூரிகள் திறப்பு குறித்துப் பேச உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம் அவரும் அழைப்பை எடுக்கவில்லை.

வைகைச்செல்வன்

கடைசியாக, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய செய்தித் தொடர்பாளருமாகிய வைகைச்செல்வனைத் தொடர்புகொண்டு பேசினோம்,

''தனியார் பள்ளிகள் யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. இப்போதாவது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டால்தான், தேர்வுகள் வைத்து இந்தாண்டுக்கான ரிசல்ட்ஸ் போடமுடியும். பள்ளி திறக்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் உடனடியாக அனைத்து வசதிகளும் தயார் செய்யப்படும். அதுகுறித்து யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. பாடங்களைக் குறைப்பது தொடர்பான விஷயங்கள் பரீசிலனையில் இருக்கின்றன. தேவை ஏற்பட்டால் கண்டிப்பாகக் குறைக்கப்படும். ஆனால், தற்போதைய சூழல்படி பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார்'' என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/education/tn-government-postpones-school-opening

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக