Ad

புதன், 11 நவம்பர், 2020

``இந்தக் கடை வேலை மட்டும் முடிஞ்சிட்டா பொழச்சிக்கிடுவோம்!" - கலங்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

புதுக்கோட்டை அருகே தாந்தாணியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முருகன். மனைவி, இரு மகள்கள் எனச் சிறிய குடும்பம். தியேட்டருக்குப் படம் பார்க்க வருபவர்களின் வாகனங்களுக்கு டோக்கன் போட்டுப் பாதுகாக்கும் வேலை முருகனுக்கு. கூன் விழுந்த முதுகோடு, ஒரு காலை தன் கையால் தாங்கியவாறு வீட்டிலிருந்து 2 கி.மீ தூரம் உள்ள எரிச்சிக்கு நடந்து சென்று, அங்கிருந்து பேருந்தில் சென்று தியேட்டரில் வேலைபார்த்து வந்தார். லாக்டௌனால் தியேட்டர் வேலை இல்லாமல்போக, பல மாதங்களாக வருமானம் இழந்திருக்கிறது அக்குடும்பம்.

ஒருவேளைச் சாப்பாட்டுக்கே யாசகம் பெற்றுச் சாப்பிடும் சூழலில் தவித்துக்கொண்டிருந்தது முருகனின் குடும்பம். முருகனின் மனைவி புவனேஸ்வரி இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தவித்துக்கொண்டிருந்தார். இவர்களைப் பற்றி அறிந்த நாம், `யாசகம் பெற்று ஒருவேளைச் சாப்பாடு... தவிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த விகடன் வாசகர்கள் சிலர் முன்வந்து அவர்களுக்கு உதவினர். வாசகர்கள் மூலம் ரூ.33,800 கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு சாப்பாட்டுக்குத் தேவையான முதல்கட்ட உதவிகளைச் செய்தததோடு, அவர்கள் வீட்டின் முன்புறத்தில் ஒரு சிறு பெட்டிக்கடை துவங்குவதற்கான பணிகளையும் முடுக்கினோம்.

அதோடு, ரஜினி மக்கள் மன்றம், சூர்யா ரசிகர் மன்றம், வள்ளலார் காப்பகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களிலிருந்தும் அரிசி, பருப்பு உள்ளிட்ட ஒரு வருடத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் உதவியாகக் கிடைத்தன. குறிப்பாக, முருகனின் வாழ்வாதாரத்துக்கு உதவ முன்வந்த அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் குழு, `முருகன் மளிகைக்கடை அமைத்தால், அதற்குத் தேவையான சரக்கை எங்களால் முடிந்த அளவு வாங்கிக்கொடுக்கிறோம்' என்று அக்கறையுடன் தெரிவித்தனர்.

பெட்டிக்கடைக்கான கட்டடம்

இதையடுத்து, வாசகர்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சிறிய அளவிலான மளிகைக் கடையை முருகனுக்காகக் கட்டும் பணியைத் தொடங்கினோம். 60% பணிகள் முடிந்துள்ள நிலையில், பணப் பற்றாக்குறையால் பணி பாதியில் நிற்கிறது. மண் அடித்தல், தளம் போடுதல், பூசுதல், கதவு அமைத்தல், ரேக்குகள் அமைத்தல் உள்ளிட்ட இன்னும் சில வேலைகள் இருக்கின்றன. ``இந்த வேலைகள மட்டும் முடிச்சுக் கொடுத்துட்டா போதும், பொழச்சிக்கிடுவோம்" என்கிறது அந்தக் குடும்பம்.

முருகனின் மனைவி புவனேஸ்வரி, ``அவரோட இளகின மனசுக்காகத்தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவருக்கு முதுகுல கூன். ரெண்டும் பொம்பளப் புள்ளைங்க. மாற்றுத்திறனாளியா இருந்தாலும் எங்களை நல்லாதான் பார்த்துக்கிட்டாரு. கொரோனாவால வேலைவெட்டி இல்லாமப் போனதால ரொம்ப வறுமை ஆகிடுச்சு. ரேஷன் அரிசியை வடிச்சிடுவோம். குழம்புக்குப் பக்கத்து வீட்டுலதான் யாசகமா வாங்குவோம். எங்களோட நெலமையைப் பார்த்துக் கொடுத்திடுவாங்க.

முருகனுக்கு உதவி செய்தவர்களின் விவரம்

கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும் இதுதான் எங்களோட நெலமை. இப்போ, முகம் தெரியாத சொந்தங்களால ஒரு வருஷத்துக்குத் தேவையான சாப்பாடு பொருள்கள் கிடைச்சிருக்கு. இந்தக் கடை வேலையை முடிச்சுக் கொடுத்துட்டா போதும், அதை வெச்சு பொழச்சிக்கிடுவோம்" என்கிறார்.

கடை வேலை முடிய கரங்கள் கிடைக்கட்டும்!

Note:

இவருக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியை முருகனுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்



source https://www.vikatan.com/news/general-news/pudukkottai-man-murugan-needs-help-to-finish-his-shop-construction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக