Ad

சனி, 21 நவம்பர், 2020

கொரோனாவுக்குப் பின் பெண்களின் நிதி நிர்வாகம் மாறியிருக்கிறதா... ஓர் அலசல்!

கொரோனாவின் பிடியில் உலகமே சிக்கித் தவித்தாலும் மனிதர்கள் இடையேயான தொடர்பு கொஞ்சம்கூடக் குறையவில்லை. இத்தனை நாளும் ஒலி மூலமான சந்திப்பு மட்டும் நிகழ்ந்துகொன்டிருக்க, இப்போது ஒலியும் ஒளியுமாக விர்ச்சுவல் மீட்டிங். நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஜூம், கூகுள் போன்ற அமைப்புகள் தளம் அமைத்துத் தர, தனிநபர் முதலீடுகள் (Personal Finance) சார்ந்த எனது மீட்டிங்குகளும் களைகட்டின. அவற்றில் பொக்கிஷமாக நான் கருதுவது பெண்களுக்காக நடத்தப்பட்ட மீட்டிங்குகளைத்தான்.

share market

உலகப் பொருளாதார அமைப்பு (World Economic Forum) பெண்கள் பங்களிப்பில்லாமல் உலகப் பொருளாதாரம் முன்னேற வாய்ப்பில்லை என்று கவலை தெரிவித்துள்ளது. நல்லவேளையாக, நம் நாட்டில் பெண்களின் நிதியறிவை முன்னேற்றும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் முன்னணியில் இருப்பவை கல்லூரிகளும், சாஃப்ட்வேர் கம்பெனிகளும்.

ஆனால், கடந்த மாதம் ஒரு பாரம்பர்யமான தயாரிப்பு நிறுவனம் தங்கள் கம்பெனியில் வேலை செய்யும் பெண்களின் நிதியறிவு முன்னேற்றம் கருதி, ஜூம் ஆப்பில் என்னுடன் ஏற்பாடு செய்த ஒரு கலந்துரையாடல் நம் சமூகமே பெண்களைப் பொருளாதாரத்தில் முன்னேற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதைக் காட்டியது.

பெண்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொதுவாக சில அம்சங்களைப் பார்க்க முடியும். ஆண்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் அவர்களின் அறிவுத் தரம் (Knowledge Level) அநேகமாக ஒரே அலைவரிசையில் இருக்கும். பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் விழிப்புணர்வு அதிக அளவு ஏற்றத்தாழ்வுடன் இருக்கிறது. இது உலகளாவிய உண்மை. காரணம், வாழ்வு சார்ந்த நிதியறிவில் அவர்களில் பலர் இப்போதுதான் கால் பதிக்கிறார்கள். சில நிதிச் சொற்களை அவர்கள் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அவர்களுக்கும் புரியும்படி, ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கும் போரடிக்காமல் நிகழ்ச்சியை எடுத்துச் செல்வதுதான் நிஜமான சவால்.

சேமிப்பு

அடுத்த சவால், நிதியறிவு என்றால் அது ஆண்களின் உலகம் என்ற எண்ணம் பல பெண்களின் மனதில் வேறூன்றி இருப்பது. ஒரு காலத்தில் அது உண்மையும்கூட. அப்போதெல்லாம் முதலீடு என்றாலே அது வீடுதான் என்றிருந்த காலகட்டம். ஒரு மனை வாங்கி வீடு கட்ட நாலு இடம் அலைந்து திரிய வேண்டும்; புரோக்கர், பில்டர், விற்பனை செய்பவர் என்று பலரைச் சந்திக்க வேண்டும்; பத்திரங்கள் சரிபார்க்க வக்கீலை நாட வேண்டும். பதிவு செய்ய ரெஜிஸ்திரார் ஆஃபீஸ் செல்ல வேண்டும். இப்படிப் பல இடங்களுக்கும் செல்ல இரு சக்கர / நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டத் தெரிய வேண்டும்.

இன்றுள்ளது போல இன்டர்நெட் மூலம் வீடு தேடும் வசதியோ, ஓலா, ஊபர் வாகனங்களோ இல்லாத நிலையில் ஆண்கள் இந்தப் பொறுப்பை ஏற்றனர். இப்படி, வங்கி முதலீடு மற்றும் கடன், அரசு / கம்பெனி பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என்று பணம் சார்ந்த எல்லா இடங்களிலும் ஆண்களே புழங்க நேர்ந்ததால், நிதியறிவு பெண்களுக்குக் கிடைக்காமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.

ஆனால், இன்று பல வலைதளங்கள் மூலமாக ஆன்லைனிலேயே அத்தனை விதமான முதலீடுகளையும் பரிசீலிக்கவும், மேற்கொள்ளவும் உதவி செய்யும் வசதிகள் இருப்பது பற்றி எடுத்துரைத்ததும், கலந்துகொண்ட பெண்களின் ஆர்வமும், உற்சாகமும் அதிகரித்தன.

Woman

பொதுவாகவே சேமிக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகம். தங்கள் ரகசிய சேமிப்புகள் கொரோனா காலத்தில் கைகொடுத்ததாகச் சிலர் பெருமிதம் அடைந்தனர். ஆனால், சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் வித்தியாசம் புரியாமல் வங்கி சேவிங்ஸ் அக்கவுன்ட்டிலேயே பணத்தை முடக்கி வைத்திருந்த பலரும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி அறிய ஆர்வம் காட்டினர். ஒரு சிலர், பெற்றோரின் ரிட்டயர்ட்மென்ட் பணத்தை எதில் முதலீடு செய்வது நல்லது என்று கேட்டறிந்து கொண்டனர்.

இத்தகைய மீட்டிங்குகளில் கலந்துகொண்ட அத்தனை பெண்களும் ஆவலாகக் கேட்டது, தங்கத்தின் விலை ஏற்றம் பற்றிதான். இன்னும் ஏறுமா, எந்த விதத்தில் வாங்குவது நல்லது, ஆர்.பி.ஐ கோல்ட் பாண்ட் சிறந்ததுதானா என்று கேட்டவர்களுக்கு, ஒரு போர்ட்ஃபோலியோவில் 5% முதல் 10% வரை தங்கம் இருப்பது நல்லது என்ற விஷயம் திருப்தியளித்தது.

தற்சமயம் வீடு வாங்குவது சரியா அல்லது வாடகை வீட்டிலேயே காலம் தள்ளலாமா என்பதில் ஆரம்பித்து. வங்கிகளின் பாதுகாப்புத்தன்மை நீடிக்குமா, அரசு மற்றும் தனியார் கம்பெனி பாண்டுகளின் வட்டி விகிதம் என்ன என்பது போன்ற பல கேள்விகளுடன் உரையாடல்கள் நீண்டன. ஜூம் ஆப்பில் அல்லது கூகுள் மீட்டில் நடந்த உரையாடல்கள் என்பதால், அவ்வப்போது குழந்தைகள் அம்மாக்களின் கவனத்தை ஈர்க்க முயல்வதும், அம்மாக்கள் அவர்களைச் சமாளித்துக்கொண்டே மீட்டிங்கையும் கவனிப்பதும் பெண்களுக்கு நிதி நிர்வாகத்தில் இருக்கக்கூடிய சவால்களைக் காட்டுவதாக இருந்தது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் குடும்ப வருமானம் குறைந்து கடன்களைத் திருப்பிக் கட்ட இயலாமல் சிலர் அவதிப்பட்டதும் அவர்களின் கேள்விகளில் புரிந்தது.

Rupees

குறித்த நேரம் தாண்டியும் நீண்ட அந்த உரையாடல்கள் எனக்கும் சில விஷயங்களை உணர்த்தின.

1. எமர்ஜென்சி ஃபண்டின் முக்கியத்துவம் பெண்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இதுவரை தெரியாமல் இருந்தவர்களும் கொரோனா காலத்தில் தெரிந்துகொண்டார்கள்.

2. வங்கி முதலீடுகள், அரசு / கம்பெனி பாண்டுகள், மியூச்சுவல் ஃபண்ட் இவற்றில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம், பங்குச் சந்தையில் இல்லை. ஓரிரு பெண்களே அது பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். பெண்களின் இயல்பான ஜாக்கிரதை உணர்வு காரணமாக இருக்கலாம்.

3. அதே ஜாக்கிரதை உணர்வின் காரணமாகச் சிறுசிறு முதலீடுகளைத் தொடங்கவே விரும்புகிறார்கள். பெரிய அடி எடுத்து வைக்கத் தயங்குகிறார்கள்.

4. தாய்மார்கள் இன்ஷுரன்ஸ் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க விரும்புகிறார்கள்.

5. பெண் குழந்தைகளின் கல்வியைவிட திருமணத்துக்காக சேமிக்கும் மனப்பான்மை இன்னும் இருக்கிறது.

மொத்தத்தில், ஆறை நூறாக்கும் திறனைப் பெறும் கனவு பெண்களுக்கும் இருக்கிறது; இதில் குடும்பங்களும், நிறுவனங்களும்கூட அவர்களுக்குத் துணை நிற்கின்றன. ஆகவே, அவர்கள் கனவு நனவாகும் நாள் தூரத்தில் இல்லை.



source https://www.vikatan.com/business/finance/is-women-saving-and-investment-patterns-are-changing-now

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக