Ad

புதன், 11 நவம்பர், 2020

`ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஜெயிப்பதற்கான மந்திரம் இதுதான்!' - வழிகாட்டிய வல்லுநர்

விவசாயம், லாபகரமான தொழிலாக அமைய வேண்டுமென்றால், ஒருங்கிணைந்த பண்ணையம் மிகவும் அவசியம். பயிர் சாகுபடியோடு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்டவையில் ஈடும்படும்போது ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவாக, பயன் அளிக்கிறது. இதனால் செலவு மற்றும் உழைப்பு குறைந்து, பல வழிகளிலும் கூடுதல் லாபம் கிடைக்கிறது. கால்நடை மற்றும் தாவரங்களின் கழிவுகள் அதிகமாகக் கிடைத்து உரமாகப் பயன்படுவதால், நிலத்தின் வளம் அதிகரிக்கிறது. இதன் காரணமாகத்தான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்துள்ள விவசாயிகள், நீடித்த நிலைத்த வெற்றியைப் பெற்று, உத்தரவாதமான வருமானம் பார்க்கிறார்கள். இதுபோல் நாமும் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாமே என்ற எண்ணம் தற்போது பலருக்கும் மேலோங்கி வருகிறது. ஆனால், இதை எப்படி உருவாக்க வேண்டும் என்ற சரியான வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.

இளஞ்செழியன்

இந்நிலையில்தான் இதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விவசாயத்தில் உழைப்புக்கேற்ற லாபம் ஈட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கும் வழிகாட்டும் வகையில் பசுமை விகடன் ஏற்பாட்டில் `ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் நேரலை (ஆன்லைன்) பயிற்சி கடந்த நவம்பர் 8-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நடைபெற்றது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நன்கு அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயியும், பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வருமான இளஞ்செழியன் இந்நிகழ்ச்சியில் களப்பயிற்சியுடன் வழிகாட்டினார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் இவரது ஒருங்கிணைந்த பண்ணையம் அமைந்துள்ளது. 31 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் இந்தப் பண்ணையத்தில், நெல், தென்னை, தீவனப்புல் உள்ளிட்ட இன்னும் பலவிதமான பயிர்களும், ஆடு, மாடு, கோழி, வாத்து, புறா, முயல், மீன் ஆகியவற்றையும் வளர்க்கிறார் இளஞ்செழியன். இதன் மூலம் இவர் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வருகிறார். இவரது அனுபவங்களை 10.11.2020 தேதியிட்ட இதழில் `வேளாண் கல்லூரி முதல்வரின் அசத்தல் அனுபவ பாடம்' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இவர் நேரலை மூலம் களப்பயிற்சி அளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தால் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக, திண்டுக்கல் காந்தி கிராமம் வேளாண் அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் உதயகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பயனுள்ள பல கருத்துக்களை வழங்கினார். ரஷ்யாவில் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், அங்குள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அமைப்பு முறைகள் குறித்தும் அங்குள்ள விவசாயிகள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடி முறைகள் குறித்தும் பல ஆச்சர்ய தகவல்களை வழங்கினார். களப்பயிற்சி அளிக்கத் தொடங்கிய இளஞ்செழியன் ``31 ஏக்கர்ல வருஷத்துக்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் எடுக்க முடியுமானு பலரும் ஆச்சர்யமா கேட்குறாங்க. மூணு போகம் நெல் சாகுபடி செய்றோம். இதுக்கு வெளியில காசு கொடுத்து ரசாயன உரங்கள் வாங்கிப் போட்டால், இந்தளவுக்கெல்லாம் லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை.

தென்னை

Also Read: ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடுக்கடுக்கான பலன்கள்... ரஷ்ய அனுபவங்களைப் பகிரும் விஞ்ஞானி!

ஆடு, மாடு, கோழி, புறா, முயல்... இதோட கழிவுகளையும், இலை தழைகளையும் அதிகமா பயன்படுத்துறோம். இதனால்தான் எங்களுக்குச் செலவு பெரிய அளவுல மிச்சமாகுது. விவசாயிகள் உயிர் உரங்களோட நன்மைகளைப் பத்தி நிறைய தெரிஞ்சக்கணும். இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் பயிர்கள் இன்னும் செழிப்பா ஆரோக்கியமா வளரும்" என்றவர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தி, இதன் பயன்களை அறிவியல்பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் விவரித்தார். சாகுபடி நிலத்தில் அசோலா, நீலப்பச்சைப்பாசி பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.

ஆடு, கோழி, முயல், புறா, மீன் வளர்ப்பு முறைகள் குறித்தும் தெளிவுபடுத்திய இளஞ்செழியன், நிறைவாக, ``விவசாயிகள் தங்களோட பகுதிக்கு ஏற்ற மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையத்தைத் திட்டமிடணும். என்னோட மண்ணுக்கு நெல்லுதான் ஏத்த பயிர். கொள்முதல் நிலையங்கள்ல விற்பனை செஞ்சிக்கிறேன். ஒரு சில பகுதிகள்ல, தென்னை, நிலக்கடலைனு அந்தந்த சூழலுக்கு ஏற்ற பயிரை பிரதானமாக வச்சிக்கிலாம். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைச்சிட்டா போதும்... தானாக ஈஸியா வருமானம் வந்துடும்னு நினைக்கக் கூடாது.

ஒருங்கிணைந்த பண்ணையம்

கடுமையான உழைப்பும் கண்காணிப்பும் அவசியம். சிலர் எடுத்ததுமே பெரிய அளவுல முதலீடு பண்ணி நஷ்டத்தை சந்திக்கிறாங்க. அது தவறானது. படிப்படியாக, நேரடி அனுபவத்தின் மூலமாகத்தான் ஒருங்கிணைந்த பண்ணையத்தை விரிவுபடுத்தணும்” எனத் தெரிவித்தார். நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவாக விடையளித்து நிகழ்வை நிறைவு செய்தார்.



source https://www.vikatan.com/news/agriculture/farmer-ilanchezhiyan-shares-his-experience-and-tips-of-integrated-farming

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக