மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோபத்தை மத்திய அரசுக்கு உணர்த்தியதில் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு பெரும் பங்குண்டு. கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் பஞ்சாப் மாநில விவசாயிகள். காரணம் அங்கு செயல்பட்டு வரும் மண்டி அமைப்புதான். நெல், கோதுமை போன்றவற்றுக்குச் சரியான விலை கிடைப்பதால், பஞ்சாபின் உற்பத்தி முழுவதும் மண்டிகளையே நம்பி இருக்கிறது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களால் இந்த மண்டி முறை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அச்சமடைந்துள்ளனர்.
இதனால் பஞ்சாபில் உள்ள விவசாய சங்கங்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. நாள்தோறும் சுமார் 5,000 விவசாயிகள் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட யுக்தி ரயில்களை மறிப்பதுதான். இல்லையென்றால் தண்டவாளத்திலேயே படுத்துக்கொள்கின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது இந்த அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தின் வழியாகச் செல்லும் 1,350 ரயில்களை ரத்து செய்துவிட்டது ரயில்வே நிர்வாகம். இதனால் இந்திய ரயில்வேக்கு 1,200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில், சரக்குகள் ரயில் இரண்டின் இயக்கமும் தடைப்பட்டுள்ளதால் ரயில்வே துறைக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பஞ்சாப் விவசாயிகளிடம் அத்தியாவசிய சரக்கு ரயில்களை அனுமதிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சில இடங்களில் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் போராட்டங்கள் ஓயவில்லை. இதைத் தொடர்ந்து இடையில் பஞ்சாப் விவசாயிகளை மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆனால், அமைச்சர்கள் வராததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
எப்படியும் போராட்டங்கள் ஓய்ந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தது மத்திய அரசு. ஆனால், போராட்டங்கள் ஓயாததால் நாளை மறுநாள் நவம்பர் 13-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேச்சு வார்த்தையில் விவசாய சங்க பிரதிநிதிகளோடு மத்திய வேளாண் மற்றும் உழவர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/central-govt-invites-protesting-farm-unions-of-punjab-for-talks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக