அமெரிக்கத் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதால், அவரது பூர்வீகக் கிராமமான திருவாரூர் மாவட்டம் பைங்காநாடு துளசேந்திரபுரம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் ஊரே உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்பகுதி மக்கள் மிகுந்த பெருமித கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்கள். இவரது தாய்வழி தாத்தா கோபாலன், இக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானதால் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அக்ரஹாரத் தெருவில் வாழ்ந்திருக்கிறது, கோபாலனின் குடும்பம். ஆங்கிலேயே ஆட்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய கோபாலன் சென்னைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.
Also Read: US Election 2020: `அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன்!’ - முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ்
அவரது மூத்த மகள் சியாமளா, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்டு ஜெ ஹாரிஸைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களது மகள்தான் கமலா ஹாரிஸ். அரசியல், பொருளாதாரம், சட்டம் என பலதுறைகளில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், கல்போர்னியா தலைமை வழக்கறிஞர், செண்ட் உறுப்பினர் என படிபடியாக உயர்ந்து, தற்போது அமெரிக்கத் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸூக்கும் பைங்காநாடு துளசேந்திரபுரத்திற்கும் என்ன சம்பந்தம்? பல ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாத்தா இங்கு வாழ்ந்துள்ளார். அவர் இங்கிருந்து சென்று நீண்டகாலம் ஆகிவிட்டது. அப்படியிருக்கும்போது கமலா ஹாரிஸின் வெற்றியை ஏன் இப்பகுதி மக்கள் இவ்வளவு சந்தோஷமாக கொண்டாட வேண்டுமென சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் வசித்தாலும் கூட, அவருக்கும் துளசேந்திரபுரம் கிராமத்துக்கும் இடையேயான பந்தம் தற்போது வரை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
Also Read: `இது தொடக்கம்தான்... முடிவு அல்ல!’ - கமலா ஹாரிஸ்; விழாக்கோலம் பூண்ட மன்னார்குடி கிராமம்
இங்குள்ள இவரது குலத் தெய்வ கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமா ள் கோயில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு இக்கோயிலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார் கமலா ஹாரிஸ். தங்களது கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டதை மிகவும் பெருமிதமாக கருதிய பைங்காநாடு துளசேந்திரபுரம் மக்கள், ஊர் முழுவதும் பல இடங்களில் வாழ்த்துப் பேனர்கள் வைத்து கொண்டாடினார்கள்.
கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற இங்குள்ள ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயிலில் ஊர்மக்கள் ஒன்றாக கூடி, சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடத்தினார்கள். வீடுகளின் முன்பு வாழ்த்துக் கோலம் இட்டார்கள்.
இந்நிலையில்தான் தற்போது கமலா ஹாரிஸின் வெற்றி இப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் இப்பகுதி மக்கள், ``உலக வல்லரசு நாட்டோட துணை அதிபராக எங்க ஊர் பெண் தேந்தெடுக்கப்பட்டிருக்குறத நினைக்குறப்ப, ரொம்பவே பெருமையா இருக்கு. ஒருங்கிணைந்த தஞ்சை மாட்டத்தைச் சேர்ந்தவங்க, அரசியல் தலைவராக, புகழ்பெற்ற சினிமா நடிகராக வர்றதையே நாங்க ரொம்ப பெருமையா நினைப்போம்.
அதுவும் எங்க கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண், அந்த அமெரிக்காவுக்கே துணை அதிபராக வந்திருக்காங்கனா, சாதாரண விஷயமா? எங்களோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எங்க ஊர் மக்களோட பிரார்த்தனை வீண்போகலை. கமலா ஹாரிஸ் வெற்றிக்கொடி நாட்டிட்டாங்க.’’ ஊர் முழுவதும் ஒருமித்த குரலில் நெகிழ்ச்சியும் உற்சாகமும் வியாபித்திருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/us-vc-elect-kamala-harriss-ancestral-village-people-burst-cracker-on-her-victory
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக