மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாள் விழாவை, தமிழகம் முழுக்க அவரது கட்சி தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடினார்கள். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின், கரூர் மத்திய நகரச் செயலாளர் முருகேசன், தனது பேருந்தில் கமல் சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி, அந்தப் பேருந்தில் தொண்டர்களோடு நகர் முழுக்க நகர் வலம் வந்து, வித்தியாசமான முறையில் கொண்டாடியிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 66-வது பிறந்த தினம், கடந்த 7ஆம் தேதி, தமிழகம் முழுக்க அவரது தொண்டர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அடுத்த வருடம், சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னோட்டமாக கமல்ஹாசனின் பிறந்ததினத்தை, அவரது கட்சித் தொண்டர்கள் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
Also Read: `அரசுப் பள்ளியில கல்வி சிறப்பா இருக்கும்னு உணரனும்!' - மாணவிக்கு சால்வை அணிவித்த தலைமை ஆசிரியை
அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் கரூர் மத்திய நகரச் செயலாளராக இருக்கும் முருகேசன் என்கிற கணேசன், தனது பேருந்தில் கமல் சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி, வித்தியாசமாகக் கொண்டாடினார். முருகேசன், சௌந்தர்யா என்ற பெயரில் டூரிஸ்ட் பேருந்துகளை, கடந்த இருபது வருடங்களாக வாடகைக்கு விடும் தொழிலைச் செய்துவருகிறார்.
அதில், ஒரு பேருந்தில்தான், கமலின் போட்டோ, மக்கள் நீதி மய்யத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள், கமல்ஹாசனின் அரசியல் வாசகங்கள், கமலுக்குப் பிறந்த நாள் வாழ்த்து வாசகங்கள் என அனைத்தையும் ஸ்டிக்கர் போல தயார் செய்து, நான்கு பக்கங்களிலும் ஒட்டினார். தொடர்ந்து, காலை தொடங்கி இரவு வரை, அந்த பேருந்தை கரூர் நகரம் முழுக்க இயக்கி, ஒவ்வொரு ஸ்டாப்பிலும் மக்களுக்கு இனிப்பு வழங்கி, கமலின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார்.
Also Read: பிக் பாஸில் கட்சிக்கொடி, பிரசார வாகனம் ரெடி... மக்களுடனேயே கூட்டணி - வெல்வாரா கமல்?#TNElection2021
இதுகுறித்து, முருகேசனிடம் பேசினோம். ``நான் கமலின் தீவிர ரசிகன். அதனால், தொடர்ந்து மன்றப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். பொதுமக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்துவந்தேன். அதன்காரணமாக, மக்கள் நீதி மய்யத்தில் கரூர் மத்திய நகரச் செயலாளராக பதவி கொடுத்தாங்க. அதனால், கரூரில் கட்சியை வளர்க்கும் பணிகளில் திறம்பட செயலாற்றிவருகிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில், கமலை ஆட்சியில் அமர்த்திப் பார்க்க அத்தனை முயற்சிகளையும் செய்துவருகிறோம். அந்த வகையில், கடந்த 7-ம் தேதி கமலின் 66-வது பிறந்தநாள் விழாவை வித்தியாசமாக கொண்டாட நினைத்தேன். எனது பேருந்தில் கமல், கட்சியின் பெயர், கமலின் அரசியல் கூற்றுகள், அவருக்கு நாங்கள் தெரிவிக்கும் பிறந்தநாள் வாழ்த்து, மாநில, மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் என அனைத்தையும் ஸ்டிக்கராகத் தயாரித்து, அதை பேருந்து முழுக்க ஒட்டினோம். அந்த பேருந்தில் தொண்டர்களை ஏற்றிக்கொண்டு, கரூர் நகரம் முழுக்க வலம் வந்தோம்.
வெங்கமேடு, பேருந்து நிலையம், காந்தி கிராமம், திருமாநிலையூர், ராயனூர், பசுபதிபாளையம், பைபாஸ் சாலை, தான்தோன்றிமலை என்று எல்லா பகுதிகளுக்கும் சென்றோம். மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் பேருந்தை நிறுத்தி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினோம். தொடர்ந்து, இந்தப் பேருந்தை இரண்டு நாள்கள் இதுபோல் இயக்கிவிட்டு, அதன்பிறகு பேருந்தில் இருந்து ஸ்டிக்கரை அகற்றிருவோம். இந்த வித்தியாசமான முயற்சி மக்களிடம் நல்லா ரீச் ஆச்சு. `நாங்களும் கமல் ரசிகர்தான். அவருக்கு எங்கள் முழுஆதரவு உண்டு'னு நிறைய பேரு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. தொடர்ந்து, இதுபோல் வித்தியாசமாகச் செயலாற்றி, கரூரில் கமலின் செல்வாக்கை உயர்த்துவேன்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/karur-mnm-cadres-celebration-on-kamalhassans-birthday
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக