Ad

திங்கள், 9 நவம்பர், 2020

`என் புகைப்படம் வேண்டாம்’... எச்சரித்த சகாயம் ஐ.ஏ.எஸ் - என்ன நடக்கிறது மக்கள் பாதை அமைப்புக்குள்?

''என் பெயரையோ, புகைப்படத்தையோ இனி பயன்படுத்தக்கூடாது'' என மக்கள் பாதை அமைப்பு நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார், நேர்மையான அதிகாரி என மக்கள் மத்தியில் பெயரெடுத்தவரும் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்துவருபவருமான சகாயம் ஐ.ஏ.எஸ்.

தனது நேர்மையான செயல்பாடுகளால் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த, சகாயம் ஐ.ஏ.எஸ் தமிழக முதல்வராக வரவேண்டும் என்கிற கோரிக்கையோடு, 2015-ம் ஆண்டு, கிட்டத்தட்ட 5,000 இளைஞர்கள் பேரணியாகச் சென்று சகாயம் ஐ.ஏ.எஸ்ஸைச் சந்தித்தனர். அவரிடம் தாங்கள் ஆரம்பிக்கப்போகிற இயக்கத்துக்கு வழிகாட்டியாக செயல்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவே, அதன்படி. 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் 'மக்கள் பாதை'. இந்த அமைப்புக்கு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகல்சாமி தலைவராகவும், சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்காக பல போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை இந்த இயக்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த மாதம் நீட் தேர்வை ரத்து செய்ய செய்ய வலியுறுத்தி இந்த இயக்கத்தினர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

மக்கள் பாதை அமைப்பு ஆரம்ப விழாவில்

இந்தநிலையில், தற்போது இந்த அமைப்பின் தலைவராகச் செயல்பட்டுவரும் நாகல்சாமிக்கும் , சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, ''இனி என் படங்களையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது'' என கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ். அவரின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் சகாயம் புகைப்படம் தாங்கிய பிளக்ஸ் போர்டுகள் கழற்றப்பட்டு வருகின்றன.

''இந்தப் பிரச்னைகளுக்கு முழுமுதற் காரணமே தலைவரான நாகல்சாமிதான். சகாயம் ஐ.ஏ.எஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதும், எங்கே தன் தலைவர் பதவி பறிபோய்விடுமோ என்கிற பயத்தில் அவர்தான் இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான வேலைகளைச் செய்கிறார்'' என சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு ஆதரவான மக்கள் பாதை அமைப்பினர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதேவேளை, நாகல்சாமி தரப்பினரோ, ''சகாயம் ஐ.ஏ.எஸ் தன்னை மட்டுமே முன்னிறுத்திக்கொள்கிறார். சீமான், ரஜினி ஆகியோரிடம் பேசி வருகிறார். அவர் இளைஞர்களுக்கு தவறாக வழிகாட்டுகிறார். அதனால், 25 மாவட்டப் பொறுப்பாளர்கள் அவரின் மீது அதிருப்தியாகத்தான் இருக்கிறார்கள் '' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.

நாகல்சாமி

உண்மையில், 'மக்கள் பாதை அமைப்புக்குள் என்ன நடக்கிறது?'

'என்னைவிட நேர்மையானவர்' என சகாயம் ஐ.ஏ.எஸ்ஸால் புகழாரம் சூட்டப்பட்டவரும், மக்கள்பாதை அமைப்பின் தலைவருமான நாகல்சாமியிடம் பேசினோம்.

'' 'மக்கள் பாதை' இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது, சகாயம் அவர்கள் சர்வீஸில் இருந்ததால், என்னைத் தலைவராக இருக்கச் சொன்னார். அவர் மீது நேர்மையானவர் என்கிற பிம்பம் இருக்கவே, அவரின் சொல்படி நான் தலைவர் பதவியை ஏற்று செயல்பட்டு வந்தேன். ஆனால், காலப்போக்கில் அவரின் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் தெரிந்தன. லஞ்சம் வாங்காமல் இருப்பது மட்டுமே நேர்மைக்கான இலக்கணம் அல்ல. நாம் பேசுகின்ற பேச்சில், மற்றவர்களை நடத்தக்கூடிய விதம், செயல்பாடுகள் என அனைத்திலும் நேர்மையாகச் செயல்படவேண்டும். ஆனால், சகாயம் ஐ.ஏ.எஸ் அத்தகைய நேர்மையாளர் அல்ல.

அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு வந்த இளைஞர்கள் யாராவது மிக வேகமாகச் செயல்பட்டால், எங்கே தன்னை மீறிச் சென்றுவிடுவார்களோ என்கிற அச்சம் சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு இருக்கிறது. உதாரணமாக, கடைசியாக நீட் தேர்வை எதிர்த்து எங்கள் அமைப்பின் சார்பில் உண்ணாவிரதம் இருந்தோம். அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட சந்திரமோகன், பத்திரிகைகளுக்கு, தொலைக்காட்சிகளுக்கு அப்போது தொடர்ச்சியாக பேட்டி கொடுத்தார். அதன்மூலம் எங்கள் அமைப்பு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனது. ஆனால், சகாயம் பேட்டிகள் எல்லாம் கொடுக்கக்கூடாது என்றார். போராட்டம் சூடுபிடித்து மக்கள் எங்களைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தபோது, போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றார். உண்ணாவிரதப் போராட்டம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவேண்டும் என கோரிக்கை வைக்க, அதையும் சகாயம் நிராகரித்தார். அதனால் அப்போதே அமைப்பு இளைஞர்களுக்கு, சகாயம் மீது ஒரு அதிருப்தி ஏற்பட்டது. அதற்குப் பிறகும், உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் இருந்த நிர்வாகிகளையும் சகாயம் சந்தித்துக் கூடப் பேசவில்லை.

நீட் உண்ணாவிரதம்

மக்கள் பாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் பெரியளவில் நிறைவேறவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில், மக்களின் பிரச்னைகளைப் போக்க எங்கள் அமைப்பால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. அரசாங்கத்தை எதிர்த்து எந்தப் போராட்டங்களும் நடந்துவிடக்கூடாது, அவரின் பதவிக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் சகாயம். தவறு செய்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக, தற்போது அவரின் புகைப்படத்தையும் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பு இளைஞர்களின் கைகளுக்குப் போகவேண்டும்'' என்றார் அவர்.

மக்கள் பாதை அமைப்பின் மாநில நிர்வாகிகளில் ஒருவரும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதத்தின் பேத்தியுமான எழுத்தாளார் வெற்றிச்செல்வி பேசும்போது,

''தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு மாற்றம் வரவேண்டும், காமராஜர், அண்ணா போன்ற ஒரு தலைவர் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதற்காகவே நான் கடந்த ஐந்து வருடங்களாக சகாயம் ஐயாவுடன் பயணித்து வருகிறேன். மிகக் கடுமையாக இந்த இயக்கத்துக்காக உழைத்திருக்கிறேன். ஆனால், நான் பா.ஜ.கவுக்கு ஆதரவானவள். பிளவுபடுத்துவதற்காகத்தான் மக்கள் பாதை அமைப்பில் சேர்ந்தேன் எனவும் முகநூலில் சில நிர்வாகிகள் எழுதி வருகிறார்கள். அமைப்பு பிரச்னைகளை வெளியில் சொல்லக்கூடாது என கண்ணியம் காத்துவந்தோம். சகாயம் ஐயா எங்களை அழைத்துப் பேசுவார் எனக் காத்திருந்தோம். ஆனால், அவர் எங்களை தனித்தனியாகத்தான் சந்திப்பேன், மொத்தமாகச் சந்திக்க மாட்டேன் என்கிறார். தவிர, ரஜினி, சீமான் ஆகியோரிடமும் சகாயம் ஐயா பேசிவருவதாக செய்திகள் வெளியானது. அதை இளைஞர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த நேர்மைக்காக நாங்கள் இந்த அமைப்புக்கு வந்தோமோ அதுவே இல்லை என்கிறபோது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது'' என்றார் அவர்.

வெற்றிச் செல்வி

இது தொடர்பாக விளக்கம் கேட்க, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினரும் சகாயம் ஐ.ஏ.எஸ் ஆதரவாளருமான பாட்ஷாவிடம் பேசினோம்,

''மக்கள் பாதை அமைப்பின் தலைவராக நாகல்சாமி ஐயா எந்தவித செயல்பாடுகளையும் முன்னெடுத்ததில்லை. எங்கள் வழிகாட்டி ஐயா சகாயத்திடமிருந்து இயக்கத்தைக் கைப்பற்ற நினைக்கிறார் அவர். சகாயம் ஐயா ஓய்வு பெற்று வந்தால், எங்கே தன் தலைவர் பதவி பறிபோய்விடுமோ என அஞ்சுகிறார். சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எங்கள் வழிகாட்டியின் விருப்பம். ஆனால், அரசியல் அதிகாரத்தின்மீது ஆசைகொண்ட 20 பேர்தான் தற்போது பிரச்னையைக் கிளப்பிவருகிறார்கள். பெருவாரியான நிர்வாகிகள் இன்னும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்.

Also Read: துபாய் நகரில் உணவின்றி அல்லாடிய 36 தமிழர்கள் - பத்திரமாக மீட்ட 'மக்கள் பாதை'!

வெற்றிச்செல்வி எங்கள் இயக்கத்தைச் சிதைக்க பா.ஜ.க அனுப்பிய ஆள் என்கிற தகவல்கள் வெளியாகிவருகிறது. அதை நிரூபிக்கும் விதமாக, அவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களை அழைத்து புத்தக வெளியீடு நடத்துகிறார். அவர் நிர்வாகிகள் சிலரைத் திரட்டிக்கொண்டு, சகாயம் ஐயாவைச் சந்திக்கவேண்டும் என அவரின் வீட்டுக்கு முன்னால் போய் நின்றிருக்கிறார். ஆனால், வழிகாட்டி ஐயாவைச் சந்திக்க அது சரியான வழிமுறை இல்லை. படத்தையும் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என சொல்லக் காரணம், ஆங்காங்கே அமைப்பு பெயரைச் சொல்லி பணம் வசூலிக்கப்படுகிறது, சில இடங்களில் செயலாளர், பொருளாளர் ஒப்புதல் இல்லாமல் தலைவர் மட்டுமே சில விஷயங்களை முன்னின்று செய்கிறார். இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகவே சகாயம் ஐயா அப்படிச் சொல்லியிருக்கிறார்.

பாட்ஷா

நீட் போராட்டத்தை, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் எனச் சொல்லித்தான் சகாயம் ஐயாவிடம் அனுமதி வாங்கினார்கள். ஆனால், சந்திரமோகன் என்பவர், தன்னிச்சையாக முடிவெடுத்து அதை சாகும்வரை உண்ணாவிரதமாக மாற்றிவிட்டார். 'போராட்டத்தைக் கைவிடுங்கள்' என வழிகாட்டி ஐயா சொன்னதையும் அவர்கள் கேட்கவில்லை. பத்திரிகைகளிடம், தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வழிகாட்டி, அரசு வேலையில் இருக்கிறார், அவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என அவர்கள் நினைக்கவே இல்லை.

சகாயம் ஐயாவுக்கு இனிமேல் பேர், புகழ் தேவையில்லை. அவரை மட்டுமே முன்னிறுத்துவதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆனால், இந்த இந்த இயக்கத்தின் மூலம் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அதேபோல, சகாயம், ரஜினியுடன் பேசிவருகிறார், சீமானுடன் பேசிவருகிறார் என்பதெல்லாம் வெறும் புரளி மட்டுமே. எங்கள் அமைப்பைக் கலைத்துவிட அவர்கள் நினைக்கிறார்கள். சகாயம் ஐயா பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கிறார்கள் அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை'' என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sagayam-ias-and-makkal-paathai-movement-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக