Ad

திங்கள், 9 நவம்பர், 2020

``கமலா ஹாரிஸைப் பாராட்டுகிறார்கள்... என் மகள் திருமணத்தை ஏன் எதிர்த்தார்கள்?” - சுதா ரகுநாதன்

அமெரிக்காவின் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றிருக்கிறார் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ். `அமெரிக்க துணை அதிபர் பதவிக்குத் தேர்வான முதல் கறுப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்’ என கமலா ஹாரிஸைக் கொண்டாடுகின்றனர் தமிழர்கள். சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து மழை பொழிகிறது. கறுப்பின பெண் என்று அடிக்கோடிட்டு கமலாவுக்கு வாழ்த்து மழை பொழியும் நெட்டிசன்களில் சிலர்தான், கடந்த ஆண்டு பிரபல பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க - அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபியைத் திருமணம் செய்துகொண்டபோது கடுமையாக விமர்சனம் செய்தனர். `சுதா ரகுநாதனின் மகள் கிறிஸ்துவராக மாறிவிட்டார். அதனால், சுதா ரகுநாதனை இனி, சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது’ என்றெல்லாம்கூட குரல் எழுப்பினர்.

இந்நிலையில், கமலா ஹாரிஸின் வெற்றியைக் கொண்டாடும் மக்கள், சுதா ரகுநாதனின் மகள் கறுப்பினத்தவரை திருமணம் செய்தபோது அவரைக் கடுமையாக விமர்சித்தது ஏன் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த இரட்டை நிலை குறித்து பாடகி சுதா ரகுநாதனிடம் பேசினோம், ``இந்தச் சமூகம் எவ்வளவு சமநிலையற்றதாக இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. கறுப்பினத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றியை இன்று பாராட்டுகிறார்கள். அதுவே கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை என் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தபோது கடுமையாகச் சிலர் விமர்சித்தார்கள். கமலா ஹாரிஸ் வெற்றியை இன்று எல்லோரும் பாராட்டும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என் மகள் மாளவிகா விஷயத்தில் நாம் சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறோம் என்று நாங்கள் மேலும் வலிமையடைகிறோம். என் மகள் மாளவிகாவை மைக்கேலுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து நாங்கள் அறிவித்ததும் பல இயக்குநர்களும் நடிகர்களும், `நீங்க ரொம்ப கன்சர்வேட்டிவ்னு நாங்களெல்லாம் நினைச்சுகிட்டிருந்தோம். ஆனா, இப்படி உறுதியான ஒரு முடிவை எடுத்திருக்கீங்க’ என சந்தோஷத்துடன் வாழ்த்தினார்கள்.

கமலா ஹாரிஸ்

எங்கள் குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் சின்ன அளவில்கூட எதிர்ப்பு கிடையாது. ஆனால், யாரென்றே தெரியாத ஒரு சிலர்தான் சமூக வலைதளங்கள் வாயிலாக எதிர்த்தார்கள். `இனிமேல் சபாவில் சுதா ரகுநாதனைப் பாட அனுமதிக்கக் கூடாது’ என்றெல்லாம் கருத்து பகிர்ந்தார்கள். எதிர்த்தவர்களுடைய நோக்கமெல்லாம் மாளவிகாவையோ... மாளவிகா திருமணம் செய்துகொண்ட மைக்கேலையோ கிடையாது. அவர்களுடைய டார்கெட் சுதா ரகுநாதன். `கர்னாடக இசைப் பாடகியாக இத்தனை நாள்களாக உச்சத்தில் இருக்காங்களே, அவங்களைக் கீழே இறக்குறதுக்கு இது ஒரு சான்ஸ்’ என என்மீது குரோதம் கொண்ட யாரோ ஒருவர் ஆரம்பித்ததை நூறு பேர் பின் தொடர்ந்தார்கள். யாரோ சொல்வதையெல்லாம் சபா நிர்வாகிகள் கேட்டுவிடுவார்களா? அப்படியான கருத்து சமூக வலைதங்களில் வந்ததுமே சபா தரப்பிலிருந்து என்னை அழைத்து, `இந்த வருடம் நீங்கள் கண்டிப்பாகப் பாட வேண்டும், எக்காரணத்தை முன்னிட்டும் நீங்கள் பாடாமல் இருக்கக் கூடாது’ என்று சொன்னார்கள்.

அதன் பிறகு, அப்படியான நெகட்டிவ் கருத்துகள் பகிர்ந்தவர்களை நாங்கள் துளியும் பொருட்படுத்தவில்லை. என்னதான் பணத்துக்காகக் கச்சேரி செய்கிறோம் என்று சொன்னாலும் மக்களை மகிழ்விப்பதுதானே எங்கள் பிரதான நோக்கம். மக்களை குதூகலப்படுத்துவதற்காகத்தானே கச்சேரிகள் நடக்கின்றன. ஆனால், அவை எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் மறந்துவிட்டு, இப்படியான கருத்துகளை சமூகவலைதளங்களில் ஒருசிலரால் பதிவிட முடிகிறதே எனச் சின்ன வருத்தம் இருந்தது. ஆனால், இப்படி நெகட்டிவ்வான கருத்துகள் பரப்புகிறவர்களுடைய எண்ணிக்கை சொற்பம்தான்.

Sudha raghunathan

அவர்களை நாம பொருட்படுத்தவே கூடாது. சமூகத்தில் ஒரு பிரபலமாக இருக்கும்போது இப்படியான சிக்கல்களெல்லாம் வரும். அதைத்தாண்டி நிற்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். என் மகளுக்கு மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து வைத்தோம். இன்று என் மகள் அவள் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். மைக்கேல் என்னிடத்திலும் என் கணவரிடத்திலும் அம்மா-அப்பா என்று அன்போடு இருக்கிறார். என் மகள் பூஜை செய்கிறாளோ இல்லையோ அவர் பிள்ளையார் படத்தையும் லட்சுமி படத்தையும் வைத்து தினமும் பூஜை செய்கிறார்.

உலகம் ஒரு மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ரொம்ப கன்சர்வேட்டிவ் என நான் நினைத்துக்கொண்டிருந்த குடும்பங்களிலெல்லாம்கூட பஞ்சாபி மருமகளும், பெங்காலி மருமகளும் வர ஆரம்பித்துவிட்டார்கள். உலகத்தில் இரண்டு இனம்தான். ஒன்று ஆண், இன்னொன்று பெண் அவ்வளவுதான். அந்த நோக்கத்தில்தான் இப்போது எல்லோரும் போய்க்கொண்டிருக்கின்றனர். `நெருப்பு என்று சொன்னால் சுட்டு விடாது’ ஆகையால் சொல்கிறேன். என் மகள் திருமண விவகாரத்தில் கருத்து சொன்னவர்கள் குடும்பங்களில் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் இதேபோல நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள். அவர்கள் குடும்பத்தில் நடக்கும்போது, `என் குழந்தை சந்தோஷமா இருக்கணும்’ என்றுதான் நினைக்கிறார்கள். அதுவே இன்னொருவர் வீட்டில் நடக்கும்போது குத்திக்காட்டி, குறை சொல்வதற்குத் தைரியம் வந்துவிடுகிறது.

Kamala Harris

இப்போது நாம் கமலா ஹாரிஸ் விஷயத்துக்கு வருவோம். இந்தக் காலத்திலேயே இப்படியென்றால் கமலா ஹாரிஸின் அம்மாவான சியாமளா கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டபோது எத்தனை பேர் எத்தனை விதமாகப் பேசியிருப்பார்கள். இன்று அதே குடும்பங்கள் கமலா ஹாரிஸை கொண்டாடிக்கொண்டிருக்கும். ஆக, நம் மனசாட்சிக்கு விரோதமாக இல்லாமல் எது சரி என்று நமக்குப் படுகிறதோ அதைச் செய்தோமானால் நாமும் சந்தோஷமாக இருக்க முடியும். நாம் யாருக்காகச் செய்கிறோமோ அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டோ, அவர்களது விமர்சனத்துக்கு காதுகொடுத்துக்கொண்டோ இருக்க முடியாது.

இனிமேலாவது ஒருவரை விமர்சிக்கும்போது, இது நம் எல்லைக்கு உட்பட்டதா, நாம் விமர்சிக்கலாமா என்று உணர்ந்து விமர்சிக்க வேண்டும். சினிமாவுக்கு கதை- திரைக்கதை- வசனம் எழுதுவதுபோல எழுதி சோஷியல் மீடியாவில் போடக் கூடாது” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/music/sudha-ragunathan-speaks-about-kamala-harris-victory-and-her-daughter-marriage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக