கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியச் செயலாளர் துரைராஜ் மீது ஏகப்பட்ட புகார்கள் தலைமைக்குப் பறந்திருக்கின்றன. இதன் அடிப்படையில், ஒன்றியச் செயலாளர் பொறுப்பிலிருந்த துரைராஜை, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் உதயசூரியன் மாற்றியிருக்கிறார். வெகுண்டெழுந்த பொன்முடி, உதயசூரியனுக்கு போன் போட்டு, ``நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே... நான் ஒரு துணை பொதுச்செயலாளர். என்னைக் கேட்காம நீ எப்படி அந்த ஒன்றியச் செயலாளரை மாத்தலாம்? உன்னையே நான் மாத்திடுவேன்’’ என்று ஒரேடியாக குதித்தாராம்.
பதிலுக்கு உஷ்ணமான உதயசூரியன், ``தலைமை உத்தரவுப்படிதாங்க நான் செஞ்சேன். தலைமைக்குக் கட்டுப்பட்டுதான் நான் நடக்க முடியும். உங்க பேச்சையெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை’’ என்று கூறிவிட்டு, பட்டென்று போனை கட் செய்துவிட்டாராம். பொருமலில் இருக்கிறார் பொன்முடி.
உதயசூரியன் சுட்டுருச்சுன்னு சொல்லுங்க!
சசிகலா விடுதலை தொடர்பாக சட்டரீதியான வேலைகள் நடந்துவரும் நிலையில், சசிகலாவுக்கு நெருக்கமான `ஸ்டார்’ தோழி ஒருவரை பல அ.தி.மு.க புள்ளிகளும் சந்தித்து, பவ்யமாகப் பேசிவருகிறார்களாம். கார்டன் அடைமொழியோடு ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் பவர்ஃபுல்லாக இருந்தவர் அந்தத் தோழி.
இப்போது அவரை அ.தி.மு.க பிரமுகர்கள் சந்திக்கக் காரணமே, சிறையிலிருந்து தோழிக்கு வந்திருக்கும் படு சீக்ரெட் தகவல்தான் என்கிறார்கள். இந்தத் தோழியை வெயிட்டாக `கவனித்து’ சசிகலா தரப்பை நெருங்க ஒரு டீம் அ.தி.மு.க-வில் தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது.
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கணக்கா உபசரிப்பு இருக்குமோ!
2016-ல் எம்.எல்.ஏ சீட் கிடைக்காமலும், 2019-ல் எம்.பி சீட் கிடைத்தும் வெற்றிபெற முடியாமலும்போன எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு, திருப்பூர் மாநகர அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி மட்டுமே ஆறுதலாக இருந்தது. திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் அவருடைய கோஷ்டியுடன் தனி ஆவர்த்தனம் செய்துவந்தார்.
மேலும், மாவட்டச் செயலாளர் பதவியைவைத்து எப்படியாவது வரும் தேர்தலில் சீட் வாங்கிவிட வேண்டுமென்றும் ஆனந்தன் தீவிரமாக இருந்தார். இந்தநிலையில், ஆனந்தனைப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, பொள்ளாச்சி ஜெயராமனை திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளராக சமீபத்தில் அ.தி.மு.க தலைமை அறிவித்தது. ஆனாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆனந்தன், ``மாவட்டச் செயலாளர் பதவி போனா என்ன... அமைப்புச் செயலாளர் பதவியைவெச்சு எப்படியாவது தலைமையில் சீட் வாங்காமல் விட மாட்டேன்?’’ என்று தன் ஆதரவாளர்களிடம் முஷ்டி முறுக்குகிறாராம்.
பொறுப்பைப் பறிச்சாலும், ‘ஆனந்தம்... பரமானந்தம்’னு சொல்லுவாருபோல!
Also Read: ‘டோட்டல் சரண்டர்’ சிதம்பரம்... சொதப்பிய தினகரனின் ஸ்கெட்ச்! கழுகார் அப்டேட்ஸ்
2021 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியை கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் போட்டியிடவைக்க செந்தில் பாலாஜி முயல்கிறார். குளித்தலை தொகுதியில்தான், 1957-ம் ஆண்டு கருணாநிதி முதன்முதலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு, அவர் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றியை மட்டுமே சந்தித்தார். இந்த சென்டிமென்ட்டை உதயநிதியிடம் கூறியிருக்கும் செந்தில் பாலாஜி, ``நீங்க குளித்தலையில நில்லுங்க உதயா சார்.
தமிழ்நாட்டுலேயே அதிக வாக்கு வித்தியாசத்துல உங்களை ஜெயிக்கவைக்கிறது என் வேலை’’ என்று உதயநிதியை ஏகத்துக்கும் குளிப்பாட்டுகிறாராம். ``இனி எதிர்காலத்துல உதயாதான் எல்லாம்... ஸ்டாலின் சொல்றது செல்லுபடியாகாதுன்னு கரெக்ட்டா பல்ஸ் பிடிச்சிட்டாரு செந்தில் பாலாஜி. இப்படிக் காய்நகர்த்தினாதான் தலைமையுடன் நெருக்கமாக முடியும்னு அவர் கணக்கு போடுறாரு” என்று கண்சிமிட்டுகிறார்கள் கரூர் உடன்பிறப்புகள்.
அப்படியே பேராண்டி இன்பாவுக்கும் ஒரு துண்டைப் போட்டுவையுங்க பாலாஜி!
குமரி மாவட்ட அ.தி.மு.க புள்ளியின் உதவியாளர் மகனும், இரண்டு மூத்த அமைச்சர்களின் வாரிசுகளும் இணைந்து பல முதலீடுகளை தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்துவருகிறார்கள். இந்த வாரிசுக் கூட்டணி, சமீபத்தில் தி.மு.க குடும்பத்துக்கு நெருக்கமான வாரிசு பிரமுகருடன் இணைந்து கட்டடத்துறையிலும் டன் கணக்கில் கரன்ஸியை இறக்கியிருக்கிறதாம். இந்தப் பெரும் தொகையைக் கண்டு `தீவு’ அதிபர்களே வாயைப் பிளக்கிறார்களாம். இதற்கிடையே தி.மு.க தொடர்பு குறித்து நண்பர்கள் கேட்டால், ``கட்சிப் பகையெல்லாம் போன தலைமுறையோட போயிடுச்சு. நாங்க 2000 கிட்ஸ்... தொழில் வேற, அரசியல் வேற... நாளைக்கு ஸ்டாலின் அங்கிள் ஆட்சிக்கு வந்தாக்கூட நம்ம தொழிலுக்கு எந்த பாதிப்பும் இருக்காதுல்ல...’ என்கிறதாம் வாரிசுக் கூட்டணி.
`ஆடு பகை... குட்டி உறவா?’னு கேட்குறதெல்லாம் அந்தக் காலம்போல!
பீகார் தேர்தல் தோல்வி, கட்சித் தலைவர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களால் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கலகலத்துப்போயிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் பெரும் தலைகளுக்கு அடுத்தடுத்து சிக்கலை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது பா.ஜ.க. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராணுவப் பயன்பாட்டுக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளுக்கு அகஸ்டா நிறுவனம் 400 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக வழக்கு பதிவாகியிருக்கிறது.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், சல்மான் குர்ஷித் எனப் பலரையும் நோண்டி நொங்கெடுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. அமலாக்கப்பிரிவும் இது தொடர்பான பழைய ஃபைல்களைத் தீவிரமாகத் தூசுதட்டி வருகிறது. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி, பல காங்கிரஸ் சீனியர்களைச் சிறையில் அடைக்க தீவிரமாகியிருக்கிறார்களாம்.
ரஃபேலோட `அகஸ்டா’ அட்டாக் ஆரம்பிச்சிடுச்சுனு சொல்லுங்க!
அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்குப் பிறகு, அவரது பினாமி என்று சொல்லப்படும் பெரியவன் முருகன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தது போலீஸ். இந்தநிலையில், தி.மு.க-வின் பாபநாசம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளரான தாமரைச்செல்வன், பெரியவன் முருகனுடன் ஒன்றாக இருக்கும் படம், சமூக வலைதளங்களில் பரவுவதால் தஞ்சை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அறிவாலயம்வரை புகார் சென்றிருப்பதால், அரண்டுபோன தாமரைச்செல்வன் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் விளக்கமளித்திருக்கிறார்.
அப்போது, `திருமணம் ஒன்றில் பெரியவன் முருகனுடன் யதேச்சையாக எடுத்த போட்டோவை, இப்போது பரப்புகிறார்கள். துரைக்கண்ணு விவகாரத்தில் என்னைச் சிக்கவைக்கவே இதைச் சிலர் செய்கிறார்கள்’ என்று தாமரைச்செல்வன் புலம்பினாராம்.
கல்யாணத்துக்குப் போனோமா... கருத்தா இலையில பாயசத்தை வழிச்சு சாப்பிட்டோமான்னு வரணும்... போஸ் பாண்டி கணக்கா போஸ் கொடுத்தா இப்படித்தான்!
நலத்தைக் கவனிக்கும் அமைச்சரின் நேர்முக உதவியாளராகக் கடவுளின் பெயர்கொண்ட ஒருவர் பணியாற்றுகிறார். அமைச்சரின் கணக்கு வழக்குகளைப் பார்த்துவந்த வேறோர் உதவியாளர் இறந்துவிட்டதால், இப்போது இவர்தான் அமைச்சரின் வில்லங்கக் கணக்கு வழக்குகளையெல்லாம் பார்த்துவருகிறாராம். மேலும், அமைச்சரின் அந்தரங்கம் வரை அத்தனையும் இவருக்கு அத்துப்படி என்கிறார்கள்.
தற்போது, ஈ.சி.ஆர் சாலையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியிருக்கிறாராம் அந்த உதவியாளர். தீபாவளி அன்புப் பரிசாக இந்த வீட்டை அமைச்சரே வாங்கிக் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அள்ளி முடிஞ்சதுல கிள்ளிக் கொடுத்திருக்காருன்னு சொல்லுங்க!
காங்கேயம் தொகுதியில் கார்த்திகேய சேனாபதியைக் களமிறக்கிய உதயநிதி டீம், இப்போது அவருக்காகவே தி.மு.க-வில் `சுற்றுச்சூழல் அணி’ என்கிற புதிய அணியை உருவாக்கி, அவரைச் செயலாளராக்கியிருக்கிறது. கார்த்திகேய சேனாபதிக்குக் கொடுக்கப்படும் திடீர் முக்கியத்துவத்தால் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள்.
``காங்கேயம் தொகுதியைக் குறிவைத்து அண்ணன் தேர்தல் வேலைகளைப் பார்த்துவந்த நிலையில, கார்த்திகேய சேனாபதியின் வருகையால் தொகுதி கையைவிட்டுப் போய்விடுமோனு பயப்படுறாரு’ என்கிறார்கள் சாமிநாதனின் ஆதரவாளர்கள்.
காங்கேயத்துல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்குமான்னு பார்ப்போம்!
source https://www.vikatan.com/news/politics/kulithalai-sentiment-to-admks-sketch-to-sasikalas-friend-kazhugar-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக